அநுமன் நாற்பது

(இந்திமொழியில் அருட்கவி துளசிதாசர் இயற்றிய “ஹனுமான் சாலிஸா” வின் தமிழாக்கம்)

 

குருகழல் நளின மலர்ப்பொடியால்
    மனமெனுமாடி துடைத்தே
பெருநிலை நான்குமளித்தருளும்
    இரகுவரன் புகழ் சாற்றுவனே

[ஸ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ நிஜமனமுகுர ஸுதாரி I
 வரணெள ரகுவர விமலஜஸு ஜோ தாயகு பலசாரி II]

[கழல்-பாதம்; ஆடி-கண்ணாடி; பெருநிலை நான்கு-அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் புருடார்த்தங்கள்.]

குருநாதரின் திருவடிகளாகும் தாமரைமலர்களின் மகரந்தப்பொடியால் எனது மனமாகின்ற கண்ணாடியின் அழுக்கைத்துடைத்த பின்பு, நான்கு புருடார்த்தங்களையும் கொடுக்கின்ற இராமபிரானுடைய பெருமையை உரைக்கத் தொடங்குகின்றேன்.

 

குறைமதியென் பேதமையூழ்ந்தே
    வளிசுதன் அடிகுறிவைத்தேன்
அறிவொடு விறல் வித்தையுமருள்வாய்
    நொசிவொடு வாதைகள் தீர்த்தே

[புத்திஹீன தனு ஜானிகே ஸுமிரெள பவன குமார் I
 பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹர்ஹு கலேஸவிகார் II]

[ஊழ்ந்து-எண்ணி, உணர்ந்து;  வளிசுதன்-காற்றின் மைந்தனான ஆஞ்சனேயன்;  விறல்-வலிமை,வீரம்;  நொசிவு-வருத்தம்;  வாதை-துன்பம்]

அறிவிலியான எனது இயலாமையை நன்குணர்ந்தவனான நான், பவனகுமாரனான ஆஞ்சனேயனே, உனது திருவடிகளைத் தியானிக்கின்றேன். எனது வருத்தத்தையும், துன்பத்தையும் அகற்றி மெய்யறிவையும், பலத்தையும், வித்தையையும் எனக்குத் தருவாயாக.

 

1. வெல்க அநும! குணச்சேதனக் கடலே!
    வெல்க முப்பார்புகழ் வானர வேந்தே!

[ஜய் ஹனுமான் ஜ்ஞான குணஸாகர் I
 ஜய் கபீச திஹும் லோக் உஜாகர் II]

[சேதனம்-அறிவு]

[அநுமனே!  நற்குணங்கள், அறிவாற்றல் முதலானவையில் கடல்போன்றவனே! முப்பாரும் புகழ்கின்ற வானர வேந்தனே! நீ வெல்வாயாக!]

 

2. விஞ்சுதிறத்தவ! ராமனின் தூதா!
     அஞ்சனைமதலை அனிலனரு சேயே!

[ராம தூத அதுலித் பல தாமா I
 அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா II]

[விஞ்சு-மிகுந்த, மேலான; திறம்-உறுதி, வலி, தைரியம்; மதலை-குழந்தை; அனிலன்-வாயுபகவான்]

மிகுந்த பலத்துடன்கூடியவனே! ராமபிரானின் தூதுவனே! அஞ்சனை பெற்ற குழந்தையே, வாயு பகவானின் அரிய சேயே, நீ வெல்வாயாக!

 

3. வீமவீர! வச்சிரமேனியனே!
     தீமதி நீக்கி நிறைமதி தருவோய்!

[மஹாவீர விக்ரம பஜ ரங்கீ I
 குமதி நிவார் ஸுமதி கே ஸங்கீ II]

[வீம- பெரிய]

மகத்தான வீரம்பொருந்தியவனே! வச்சிராயுதம் போன்று கடினமான பலம் பொருந்திய உடலோடு கூடியவனே! கெட்ட புத்தியை நீக்கி பூரணமான ஸத்புத்தியைக் கொடுப்பவனே!

 

4. விரியொளி வாசா! இரணிய காயா!
     திரிகுழலசையும் எழில் குழை செவியா!

[கஞ்சன வர்ண விராஜ ஸுவேஷா I
 கானன குண்டல குஞ்சித கேசா II]

[இரணியம்-பொன்;  விரியொளி-பிரகாசம்;  வாசம்-உடை]

பிரகாசம் நிறைந்த ஆடையோடும், பொன்னையொத்த மேனியோடும் கூடியவனே! அசைகின்ற சுருள்முடியோடும், செவிகளில் அழகிய குண்டலங்களோடும் கூடியவனே!

 

5. அப்பிரமுடை குலிசம் கொடியேந்தும்
     முப்புரிநூலொளிர் ஒப்புடைதோளா!

[ஹாத் வஜ்ர ஒளர் த்வஜா விராஜை I
 காந்தே மூஞ்ஜ் ஜனேவூ ஸாஜை II]

[அப்பிரம்-ஆகாயம்; உடை-பிளர்க்கின்ற;  குலிசம்-வஜ்ராயுதம்]

ஆகாயத்தைப் பிளர்க்கின்ற வச்சிராயுதமும், பதாகையையும் கைகளிலேந்திய, முப்புரிநூல் ஒளிர்கின்ற ஒப்பற்ற தோள்களுடையவனே!

 

6. அப்பணிசிவனுரு கேசரிமைந்தா!
     முப்புவனந்தொழு புகழொளிவீரா!

[சங்கர ஸுவன் கேஸரீ நந்தன் I
 தேஜ ப்ரதாப மஹா ஜக் வந்தன் II]

[அப்பு- நீர்-கங்கை]

கங்கையை முடியிலணிகின்ற சிவனாரின் வழித்தோன்றலே! கேசரியின் மைந்தனே! மூவுலகும் போற்றும் புகழ் மிகுந்தவனே!

 

7. சான்றவனே! சால்புடைய சதுரனே!
     ஞான்றுமிராமனின் சேவையிலுழல்வோய்!

[வித்யாவான் குணீ அதி சாதுர் I
 ராம காஜ கரிபே கோ ஆதுர் II]

[சான்றவன்-அறிஞன்;  சால்பு-நற்குணம்;  சதுரன்-திறமைசாலி;  ஞான்றும்-எந்நாளும்;  உழல்தல்- ஈடுபடுதல்]

அறிஞனும், நற்குணங்கள் அனைத்தும் பொருந்திய திறமைசாலியுமானவனே! எக்காலத்தும் ராமபிரானின் சேவையில் ஈடுபட்டிருப்பவனே!

 

8. ஊன்றுவை ராமசரிதமதில், அண்ணல்
     ஈன்றவளிளையவர் உளமதிற்றிகழ்வோய்!

[ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா I
 ராமலக்கன் ஸீதா மன் பஸியா II]

[ஊன்றுதல்- உறுதியாக நிலைப்படுதல்]

ராமசரிதத்தில் (அதனைக் கேட்பதில்) நீ உறுதியாகப் பற்றியிருப்பாய்.  அண்ணல் ராமபிரான், அன்னை சீதாப்பிராட்டி, இளையவரான லக்ஷ்மணன் முதலானவர்களின் இதயங்களில் எந்நாளும் நீ குடியிருப்பாய்.

 

9. அணுவென சீதையினெதிருருதரித்தாய்!
     கனபெருதனுவொடிலங்கையையெரித்தாய்!

[ஸூக்ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா I
 விகட ரூப தரி லங்க ஜராவா II]

[தனு-உடல்]

நுண்ணிய உருவைத்தரித்து சீதாப்பிராட்டியின் முன் தோன்றினாய்.  கனம்பொருந்திய மிகப்பெரிய உடலுடன் தோன்றி இலங்கையைத் தீக்கிரையாக்கினாய்.

 

10. அணுகிடுமவுணரையடலொடு தீர்த்தாய்!
        துணிவொடிராமபிரான் பணி முடித்தாய்!

[பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே I
 ராமசந்த்ர கே காஜ் ஸம்வாரே II]

[அவுணர்-அரக்கர்;  அடல்-வலிமை,வெற்றி]

போரில் எதிர்ப்பட்ட அரக்கரை மிகுந்த பராக்கிரமத்துடன் கொன்றாய்.  மிக்க திடத்தோடு ராமபிரான்  ஒப்படைத்த பணியைச் செய்துமுடித்தாய்.

 

11. இளவலைமீட்டாய் சஞ்சீவினியால்
      இளகிய ரகுபதி தழுவலை ஏற்றாய்!

[லாய ஸஜீவன லகன் ஜியாயே I
 ஸ்ரீ ரகுவீர ஹர்ஷி உர் லாயே II]

[இளவல் – ராமபிரானின் தமையான லக்ஷ்மணன்]

சஞ்சீவினி மலையைக் கொணர்ந்து லக்ஷ்மணனின் உயிரைக் காப்பாற்றினாய்.  அதனால் மனம் கனிந்த ராமபிரானின் ஆலிங்கனத்தை ஏற்றாய்.

 

12. கனிவொடுமண்ணல் ‘பரதனின் நிகர் நீ’
       எனுமொருபிரியப் புகழ்மொழிகொண்டாய்!

[ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ I
 தும் மம ப்ரிய பரத் ஸம பாயி II]

அன்புடன் அண்ணல் ராமபிரான் உன்னிடம் ‘நீ என் தம்பி பரதனுக்குச் சமமானவன்’ என்று உன் திறத்தைப் புகழ்ந்து கூறியதை ஏற்றுக்கொண்டாய்.

 

13. ஆயிரம்பேருனையேத்துவரென்றே
       நேயனிராமனின் அரவணைப்பேற்றாய்

[ஸஹஸ் பதன தும்ஹரோ ஜஸ் காவைம் I
 அஸ் கஹி ஸ்ரீபதி கண்ட்ட லகாவைம் II]

[ஏத்துதல்-வாழ்த்துதல்]

ஆயிரக்கணக்கானோர் உன்னைப் போற்றுவார்கள் என ஆசிர்வதிக்கப்பெற்று பிரியம் மிக்க ராமபிரானால் அரவணைக்கப்பட்டாய்.

 

14. பூரணராம் சனகாதியர் பிரமன்
        நாரதர் வாணியும் நாகர்கோன் முதலாய்

15. எமனொடு தனதனும் திசைகளும் புகழும்
       அமலனுன்பெருமையைப் புகலுவதெளிதோ?

[ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஸா I
 நாரத சாரத ஸஹித அஹீஸா II
 யம குபேர் திக்பால ஜஹாம்தே I
 கவி கோவித கஹிஸகே கஹாம் தே II]

[பூரணர்-ஞானிகள்;  நாகர்கோன்-ஸர்ப்பராஜனான ஆதிசேஷன்;  தனதன்- குபேரன்;  அமலன்-குறையற்றவன்]

ஞானியரான ஸனகாதி முனிவர்களும், பிரமதேவனும், நாரதர், சரஸ்வதி, ஆதிசேஷன், யமதர்மன், குபேரன், எண்டிசைபாலர்கள் முதலானோரும் வாழ்த்திப்புகழும் உனது கீர்த்தியைக் கூறுதல் எளிதன்றே.

 

16. பெரியதுணை சுக்கிரீவனுக்கீந்தாய்!
       இரகுவுடன்சேர்த்தரியணை தந்தாய்!

[தும் உபகார் ஸுக்ரீவஹிம் கீன்ஹா I
 ராம மிலாய் ராஜ பத தீன்ஹா II]

சுக்ரீவனுக்குப் பெரிய உதவியைச் செய்தாய்.  ராமபிரானுடன் சேர்த்துவித்து, அவனை (சுக்ரீவனை) அரியணையில் ஏற்றினாய்.

 

17. வெருவுவிபீடணன் நலமுறவோதி
        பரிவொடிலங்கையின் கோவெனச்செய்தாய்!

[தும்ஹ்ரோ மந்த்ர விபீஷண் மானா I
 லங்கேஷ்வர பய ஸப் ஜக் ஜானா II]

[வெருவு- அஞ்சிடும்]

அச்சமுற்ற விபீடணனுக்கு அவன் நலமுறும்படி அறிவுரையீந்து, அவனைப் பரிவோடு இலங்கையின் அரசனாக்கினாய்.

 

18. யோசனையாயிரம் சேணில் அலரியை
       போசனக்கனியெனத்துய்ய முயன்றாய்!

[ஜுக்ஸஹஸ்ர யோஜன் பர்பானூ I
 லீல்யோ தாஹி மதுரபல ஜானு II]

[சேண்-உயர்ச்சி, ஆகாயம்;  அலரி-சூரியன்;  துய்த்தல்-புசித்தல்]

ஆயிரம் யோசனை தூரத்தில் ஆகாயத்திலுள்ள சூரியனை (உன் குழந்தைப் பருவத்தில்) உண்பதற்கான பழம் என எண்ணி, பிடித்துப் புசிக்க முயன்றாய்.

 

19. தேசுடன்பதி கணையாழியையேந்தி
       ஆசுகமென மாவாரி கடந்தாய்!

[ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் I
 ஜலதி லாங்கி கயே அசரஜ் நாஹீம் II]

[தேசு- கீர்த்தி;  ஆசுகம்- காற்று, பறவை;  பதி- தலைவனான ராமபிரான்;  மாவாரி-பெருங்கடல்]

மிக்க தேஜஸ்ஸுடன் ராமபிரானின் கணையாழியையேந்தி காற்றின் வேகத்தில் பெரிய சமுத்திரத்தைத் தாண்டிச் சென்றாய்.

 

20. வீமகடினவினையவனியிலெவையும்
        சேமமொடெளிதிலிலகுவாக்கிடுவாய்!

[துர்கம காஜ் ஜகத் கே ஜேதே I
 ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே II]

[வீம- மகத்தான;  அவனி- உலகு;  சேமம்-மங்களம்;  இலகு-சுலபம்]

உலகிலுள்ள பெரிய, கடினமான செயல்களெவையும் உன்னருளால் மங்களகரமாக மிக எளிதில் முடிந்துவிடும்.

 

21. ராமபிரானருட்கதிநிலையம்புக
       ஏமமியற்றுமுன் னிசைவின்றியியலா!

[ராம துவாரே தும ரக்வாரே I
 ஹோத் ந ஆஜ்ஞா பினு பைஸாரே II]

[ஏமம்- காவல்;  இசைவு-ஒப்புதல்]

ராமபிரானின் அருளாசியாகின்ற திவ்யமாளிகையில் நுழைவதற்கு, அதன் காவலனான உனது அனுமதியின்றி இயலாது.

 

22. இன்பமனைத்துமுன் அடிகளிலொடுக்கம்!
        நின்னருட்புரவில் பயமெதுமணுகா!

[ஸப் ஸுக் லஹை தும்ஹாரீ ஸர்னா I
 தும் ரக்ஷக காஹூகோ டர்நா II]

[புரவு-பாதுகாப்பு]

எல்லாவித சுகங்களும் உனது திருவடிகளில் அடங்கியிருக்கின்றன.  உன்னுடைய அருட்பாதுகாப்பில் எவ்வித பயங்களும் அண்டாது.

 

23. திண்புய வலிமையில் நின்னிகர் நீயே!
        வெம்பிடும்முப்புவி அதிருமுன்றொனியில்!

[ஆபன் தேஜ் ஸம்ஹாரோ ஆபை I
 தீனோம் லோக் ஹாங்க் தேம் காம்பை II]

[வெம்பிடும்-நடுங்கிடும்]

திரண்ட தோள் வலிமையில் உனக்கு நிகர் நீயே.  அதிருகின்ற உனது சிம்மநாதத்தில் முப்பாரும் நடுங்கிடும்.

 

24. ஆவிகள் பேய் பூதாதிகள் அணுகா
        மாவீரா நின்னாமமுரைத்தால்!

[பூத பிசாச் நிகட் நஹிம் ஆவை I
 மஹாவீர் ஜப் நாம ஸுநாவை II]

மாவீரனான அநுமனே! உனது நாமத்தை உரைத்தால் எவ்விதப் பேய் பிசாசுகளும், பூதங்களும் அணுகாது.

 

25. நோவொடு நோய் பெருவாதைகளகலும்
        பாவன அநுமன் நாமசெபதால்

[நாஸை ரோக ஹரை ஸப் பீரா I
 ஜபத் நிரந்தர் ஹனுமத் வீரா II]

[பாவன-புனித]

வலி, வியாதி, மற்றும் துன்பங்களனைத்தும் புனிதமான அநுமன் நாம ஜபத்தால் விலகும்.

 

26. நின்னைமனம் செயல்  வாக்குகளால் தினம்
        உன்னுபவர்க்குறு தீவினைதகரும்

[ஸங்கட் தேம் ஹனுமான் சுடாவை I
 மன க்ரம வசன் த்யான் ஜோ லாவை II]

[உன்னுதல்-தியானித்தல்;  தகரும்-பொடிபடும்]

மனம், வாக்கு, செயல்களால் உன்னை தினமும் தியானிப்பவர்க்கு நேர்கின்ற தீவினைகள் யாவும் பொடிபடும்.

 

27. உலகவர்புகழ் தவப்பதிபெருநிருபன்
        இரகுவரனைக்காத்திடு திறவோன் நீ!

[ஸப் பர் ராம தபஸ்வீ ராஜா I
 தின் கே காஜ் ஸகல் தும் ஸாஜா II]

[பெருநிருபன்-பேரரசன்;  திறவோன்-திறம்படைத்தவன்]

உலகோர் போற்றும் தவராஜனும், சக்கரவர்த்தியுமான ராமபிரானைப் பாதுகாக்கின்ற திறம்படைத்தவன் நீ.

 

28. வேண்டுவரம்பெற நம்பியடுத்தோர்
        யாண்டுமடைவார் சீவனப்பலனை!

[ஒளர் மனோரத் ஜோ கோயி லாவை I
 ஸோயி அமித ஜீவன் பல்பாவை II]

மனதில் விரும்புகின்ற வரத்தைப்பெற உன்னை நம்பியண்டியவர்கள் யாவரும் வாழ்வின் பலனை எக்காலத்தும் கிடைக்கபெறுவார்கள்.

 

29. சதுர்யுக காலமும் பரவுமுன் கீர்த்தி
        நிதரிசனம் நின் புகழ் புவனமிதில்

[சாரோம் ஜுக் பர்தாப தும்ஹாரா I
 ஹை பர்ஸித்த ஜகத் உஜியாரா II]

[நிதரிசனம்-கண்கூடு]

நான்கு யுகங்களிலும் பிரசித்தி பெற்ற கீர்த்தி உன்னுடையது.  இவ்வுலகத்தில் நீ பெற்றுள்ள பெரும்புகழ் கண்கூடாகவுள்ளது.

 

30. நசையறுதாபதர் தொண்டர்சகாயா!
        நிசிதநிகர்த்தன! ரகுபதிசுகிர்தா!

[ஸாது ஸந்த் கே தும் ரக்வாரே I
 அஸுர நிகந்தன் ராம் துலாரே II

[நசை-ஆசை;  தாபதர்-தபோதனர்;  நிசிதநிகர்த்தனன்- அசுரர்களைக் கொல்பவன்;  சுகிர்தம்-பாக்கியம்]

ஆசையை வென்ற முனிவர்கள், அடியார்கள் முதலானவர்களுக்குத் துணையானவனே! அசுரர்களைக் கொன்றுமுடிப்பவனே!  ராமபிரானின்  அரும்பேறாக இருப்பவனே!

 

31. சீதைவரத்தால் அணிமாதிகளும்
        மேதகுநவநிதிகளுமருள்வோனே!

[அஷ்ட ஸித்தி நவ் நிதி கே தாதா I
 அஸவர் தீன் ஜானகீ மாதா II]

[அணிமாதி-அணிமா முதலான அஷ்டமா சித்திகள்]

சீதாப்பிராட்டியருளிய வரத்தால் அணிமாதி சித்திகளையும், நவநிதிகளையும் கொடுக்கும் ஆற்றல் படைத்தவனே!

 

32. ராமபக்திரச நிதியுனதுடைமை
        ராமசேவையே நாளுமுன்கடமை

[ராம ரஸாயன தும்ஹரே பாஸா I
 ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா II]

ராமபிரானின் பக்தி என்கின்ற காயசித்திப் பொக்கிஷம் உன்னுடைய உடைமையாகும்.  ராமபிரானின் சேவையே எந்நாளும் உனது கடமையாகும்.

 

33. நின்னடிதொழ ராமன்றயை வாய்க்கும்
        இன்னல்நிறை சனனத்தளையகலும்

[தும்ஹரே பஜன் ராம் கோ பாவை I
 ஜன்ம ஜன்ம கே துக் பிஸ்ராவை II]

உன்னடிபணிந்தால் ராமபிரானின் தயை வாய்க்கும்.  துன்பங்கள் நிறைந்த பிறவித்தளைகள் விலகும்.

 

34. துஞ்சிடுநாள்ரகு மந்திரமடைவர்
        எஞ்சுபிறவிகளில் ஈசனைப்பணிவர்

[அந்த கால ரகுவர புர் ஜாயீ I
 ஜஹாம் ஜன்ம ஹரி பக்த கஹாயீ II]

தேகவியோகம் அடைந்தபிறகு ராமபிரானின் திவ்யலோகத்தைச் சேர்வார்கள். எஞ்சியுள்ள பிறவிகளிலும் இறைபக்தியுள்ளவர்களாகத் திகழ்வார்கள்.

 

35. அவசியமோபிற தேவரைத்தொழலும்
        கவிசுரன்பூசனை அதிசுகமாமே

[ஒளர் தேவதா சித்த ந தரயீ I
 ஹனுமத் ஸேயீ ஸர்வ ஸுக் கரயீ II]

[கவிசுரன்-வானரர்களில் உத்தமன்]

வானரோத்தமனான அநுமனின் வழிபாடு எல்லா இன்பங்களையும் அளிக்கும்போது மற்று தெய்வங்களை வழிபட வேண்டிய அவசியம் என்னவுள்ளது!

 

36. விலகிடுமேபெரு வாதைகள்யாவும்
        பலமெழுமநுமனை உளமதில்வைப்பின்

[சங்கட் ஹடை மிடை ஸப்பீரா I
 ஜோ ஸுமிரை ஹனுமத் பல் வீரா II]

சக்தி வாய்ந்த அநுமனை மனதில் தியானித்தால் எல்லாவிதமான சங்கடங்களும் அகன்றுவிடும்.

 

37. ஜெய ஜெய ஜெய மாருதி தவவேளே!
        பயமொழிந்திடவருள் புரிகுருதேவா!

[ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீம் I
 க்ருபா கரஹ¤ குரு தேவ் கீ நாயீம் II

தவபெருந்தகையாகிய மாருதியே நீ வெல்வாயாக! பவபயம் அகல அருள்புரிவாயாக குருதேவனே!

 

38. நூறுமுறை இதையோதிடுவோர்க்கு
        ஊறகன்றேசுகப் பேறுபயக்கும்

[ஜோ சத பார் பாட் கர் கோயீ I
 ச்சூட்ஹி பந்தி மஹா ஸுக ஹோயீ II]

இந்த துதியை நூறுமுறை ஓதுபவர்களுக்கு துன்பங்கள் அகன்று இன்பம் பயக்கும்.

 

39. அநுமன் நாற்பது கூறிடின்சித்திகள்
         தனதாகிடுமிது ஈசன் ஆணை

[ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸாI
 ஹோய் ஸித்தி ஸாகீ கெளரீஸா II]

அநுமன் நாற்பது பாராயணம் செய்தால் சித்திகள் வசமாகும் என்பது ஈசனாணை.

 

40. தாசராம்துளசி தாசரின்கூற்றிது
        நேசமொடென்னகமேவசி தேவா!

[துளஸீதாஸ் ஸதா ஹரி சேரா I
 கீஜை நாத் ஹ்ருதய மஹன் டேரா II]

இது தொண்டரான துளசிதாசரின் கூற்று.
கருணையன்போடு என்னுள்ளத்தில் எப்போதும் குடிகொள்வாயாக ஆஞ்சனேய மூர்த்தியே!

 

வளிமகனேயிடர்களைபவனே!
    சீர்மிகு சுபவடிவோனே!
உளமமர் ராமபிரான்சீதை
    இளவலொடும் சுரபூபதியே!

[பவன தனய ஸங்கட ஹரண
 மங்கள மூருதி ரூப் I
 ராம லகன் ஸீதா ஸஹித்
 ஹ்ருதய பஸ்ஹு ஸுர பூப் II]

காற்றின் மைந்தனான அநுமனே!  இடர்களைத் தீர்ப்பவனே! சீர்நிறைந்த மங்களவடிவோடு கூடியவனே!  ராமபிரான், லக்ஷ்மணன், சீதாப்பிராட்டியுடன் எனது உள்ளத்தில் வசிப்பாயாக வானர வேந்தே!

– உ.இரா.கிரிதரன்.

One thought on “அநுமன் நாற்பது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s