சிங்கவேளே! பிரானே!

Singavel(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்)

[மிகுதியான கஷ்டங்களையும் சோதனைகளையும் கொடுத்தும் கலங்காமல் ஸ்ரீமந்நாராயணனையே எண்ணியுருகிக் கொண்டிருக்கின்ற வினோதமான தன் புதல்வன் ப்ரகலாதனை அழித்துவிட முடிவுசெய்த கொடியவனும் பலசாலியுமான ஹிரண்யகசிபுவையே பதற வைத்து வானமும் பூமியும் நடுங்குமாறு கர்ஜனம் செய்து அவ்வசுரனை வதம் செய்து குழந்தை ப்ரகலாதனுக்கு அருள் பாலித்த சிங்கப்பெருமான் ஸ்ரீலக்ஷ்மி தேவி ஸமேதராக உள்ளத்தாமரையில் அமர விண்ணப்பம்.]

(அதிர – நடுக்கம் தரும் வண்ணம்; துவட்ட – வாதனை செய்ய; பங்கயம் – தாமரை, மங்கை – அலர்மேல்மங்கையான ஸ்ரீ லக்ஷ்மீதேவி)

1. அதிரமிகு சோதனைகள் பெருகிவர துன்பங்க
ளத்துமீ றித்துவட்ட
அரிவாசு தேவகேசவமாத வாஎன்று
அனுதினமு முருகிநாடும்

புதிரான தன்பிள்ளை தனையொழித் திடவிரையும்
பொல்லாவி ரணியனவனும்
பதறபா ரகமும்விண் ணும்கிடுகி டெனநடுங்-
கிடகர்ஜ னம்முழக்கி

உதிரமென விழிசிவந் தனல்பறந் திடவசுரன்
உடல்நசுக் கிக்கிழித்து
குடலுருவி கதைமுடித் திடவிரைவில் தூண்பிளர்ந்
துதயமா னவொளிமலையே!

மதுரசிறு பாலன்பி ரகலாதன் மகிழபெரு
கருணைமழை பொழியுமுகிலே!
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[பழத்தினுள்ளே நிறைந்த சாறு போல காணுமிடமெல்லாம் நிறைந்துள்ள கற்பனைக்கெட்டாத எம்பெருமான் மோன தவநிலையில் லயித்திருக்கும் முனிவர்களின் உள்ளத்தில் சதா விளங்குகிறாரென்பது.]

(அவுணன் – அரக்கன்; அரி – ஹரி, சிங்கம் என்ற இருபொருளும்; வியாபித்து – பரந்து)

2.தூணிலும் சிறுதுரும் பிலுமிருப் பானெந்தை
நாரணன் நாதனென்றே
துணிவோடு மொழியுமச் சிறுபால னுக்கருள
தூணுள்ளி ருந்துவந்து

வீணிலா ணவமோடு சினமோடு மூர்க்கனாய்
வீறுகொண் டெழுமவுணனை
வீழ்த்திமடி மீதிட்டு விண்ணவரும் முனிவர்களும்
வாழ்த்தவதை செய்த அரியே

காணுமிப் பிரபஞ்ச மெல்லாவி டத்திலும்
காணாவி டத்துமெல்லாம்
கனியிடைச் சாறெனவி யாபித்து நின்றிட்ட
கற்பனைக டந்தபரமே

மோனதவ நிலைபயின் றோருள்ள மகலாத
முழுமுதற் சோதிவடிவே
மங்கையோடென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[ஸ்ரீமந்நரஸிம்ஹ மூர்த்தியின் உடலழகின் வர்ணணையும், அதைக்காணும் பேறு கிடைப்பது எந்த நாளோ என்று ஏங்குவதும்]

(முப்பார் – வானுலகு, பூமி, பாதாளம் என மூவுலகு; தசதிக்கு – எட்டுதிசைகளும், பிறகு மேலும், கீழும் சேர்த்துப் பத்து திசைகள்; வஜ்ரம் – வைரம்; தானவர் – அசுரர்; உய்வது – நற்கதியடைவது)

3.மணிமுடியின் சுடரொளியும் மாசிலாச் செம்பிடரி
தனிலொளிரு மின்னலழகும்
முப்பார் நடுங்கதச திக்கும்க லங்கசினம்
முன்மூண்ட செவ்விழிகளில்

பனிமதியின் கிரணமென கருணையமு தம்கசிய
சிறுநகைமி ளிர்வதனமும்
பெருவஜ்ர மெனவுஜ்வ லிக்குமிரு கோரைகளும்
மகரகுண் டலசெவிகளும்

தனியழகு திண்தோளும் நிகரிலாத் திருமார்பி
லிலகுகௌத் துபமாலையும்
தானவர்செ ருக்கொடுக் கிடுசக்ர மும்சங்கும்
தாங்குமிரு கைகளழகும்

முனிகள்விண் ணவர்பணியு மிருதாளு மய்யநான்
கண்டுய்வ தெந்தனாளோ!
மங்கையோடென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[சகல சராசரங்களையும், பஞ்ச பூதங்களையும், எல்லாவுயிர்களையும் படைத்துக் காக்கும் எம்பெருமான் பூரண சுத்தஸத்வ ஸ்வரூப பரப்ரஹ்மனானாலும் உயிர்களைக்காக்க ஸர்வகுண சீலனாக, உருவுடன் கூடிஎழுந்தருளியிருக்கும் கருணை ஆற்றல்]

(புவனம் – பூமி; இரவி – சூரியன்; மதி – சந்திரன்; தாரகை – நட்சத்திரம்; அனல் – தீ; வெளி – ஆகாயம்; விள்ளல் – சொல்லல்; சாகார – உருவுடன் கூடிய; கோ – ப்ரபு; சுருதி – வேதம்)

4.அண்டபுவ னங்களும் இரவிமதி தாரகைக
ளாகின்ற கோளங்களும்
அரியநீ ரனல்வாயு வெளியான பூதங்க
ளத்தனையும் தோற்றுவித்து

பிண்டபுழு முதல்பிரம னீறான வுயிர்களை
உண்டுசெய் துலவவிட்டு
பிள்ளைகளெ னக்காக்கு முன்கருணை மகிமையை
விள்ளவும் வாயிலேனே

கண்டவிட மெல்லாம்நி றைந்தபூ ரணசுத்த
சத்துவசொ ரூபவடிவே
கனிவோடெ மைக்காக்க சர்வகுண சீலசா
காரவடி வானகோவே

முண்டியெழு மவுணர்குலம் வேரோட றுத்திட்ட
முன்னவா சுருதிமுடிவே
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[சனகாதி முனிவர்கள் பெற்ற பேறு கிடைக்கபெறுமோ என ஏங்குதல்.]

(நந்தன் – நந்தகோபன்; வேதியர் – முனிவர், அந்தணர்; ஆதியந்தம் – ஆரம்பமும் முடிவும்; அசரசரம் – அசைவதும் அசைவற்றதுமான; சுகநிட்டை – ஸமாதி நிலை;)

5.நந்தனின் மைந்தாமு குந்தாப ரந்தாம
எந்நாளு மென்னையாளும்
நாராய ணாநான்மு காதியரும் மறையோது
வேதியரும் தேடுமாதி

அந்தமில் லாதவா அரியபா லாழியில்
அரவமதின் மேற்றுயின்று
அசரசர புவனத்தி னாதார மூலமா
யானவா மலரிலமரும்

சுந்தரிம னம்கவர்க் காந்தனே சுகர்சனகர்
தும்புருவும் நாரதருமே
சுகதுரிய நிட்டையில் உனதுதிரு வடிகண்டு
இன்புறுவ ரெந்தநாளும்

இந்தயெளி யவனுமே யந்தநிலை யெய்தவே
எந்தையருள் புரியவேண்டும்
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[சித்தத்தைச் சீரழிக்கின்ற கொடிய விலங்குகள் எம்பெருமானின் அருளாகின்ற சிங்கம் சீறிப் பாய்ந்து கர்ஜித்தாலே அழிந்து ஒழிகின்றன என்பது.]

(மத்து – மதம்; மருள் – அறிவின்மை; உத்தியொடு – யுக்தியோடு, புத்திசாலித்தனமாக ; அடவி – காடு; அரிமா – சிங்கம்)

6.மத்தொடுசெ ருக்குவெறி வெஞ்சினம கந்தையென
குத்தவரு மதயானைகள்
மடமைமருள் பித்தொடும யக்கமென வாட்டிடத்
தாவுகொடு வானரங்கள்

உத்தியொடு களவுவஞ் சனைசூது காமமென
பாயவரு கொடியபுலிகள்
இடைவிடா தென்னேர மும்வாத னைசெய்து
நலியவிடு முடலாவியை

சித்தமெனு மடவியில்வி சித்திரவி லங்குகள்
அத்தனையு முடனழியவே
சீறியே பாயவுட னுறுமியெழ வேண்டுமுன்
னருளான பெரியசிங்கம்

மெத்தவே தீமையற கர்ஜித்து லாவிவரும்
அரியவரி மாவேந்தனே
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[அடியார்களின் இடர் களையும் அப்பனின் விவரிக்க இயலாத பெருங்கருணை]

(அம்புயம் – தாமரை; அயன் – பிரமன்; அமலை – புனிதமானவள்; உம்பர் – தேவர்கள்; துங்கன் – புனிதன், தலைவன்)

7.அம்புயக் கண்ணனே அரவிந்த நாபியமர்
அயனொடுவி ளங்குதேவே
அமலையாம் கமலமகள் காந்தனே கமலமலர்ப்
பாதனே கமலமுகனே

நம்புமடி யார்க்கிடர் களையுமன் பாஅமர
நம்பியே நெடியமாலே
நற்றவத் தோரகத் துள்ளேவி ளங்கிடும்
நாராய ணாநாதனே

எம்பரா பரமேயென் னினியகற் பகமேயென்
னுயிரினுக் குயிருமாகி
இடைவிடா தென்னேர மும்காக்கு முன்கருணை
என்னப்ப யென்சொல்லுவேன்!

உம்பர்குல துங்கனே செங்கமல வல்லிமகி
ழன்பசெங் கமலநாபா
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[அணுவிலும் அணுவானவனும், அளப்பரிய அண்டகோளங்களுமாக இருப்பவனுமாகிய ஆதிகாரணன் தந்தையும் தாயும் மற்றெல்லாமாகி விளங்குகின்ற மகிமை.]

8.தந்தையும் நீயினிய தாயுநீ யேதயா
பரனும்ப ராபரனுநீ
தக்கதுணை நீயெனக் குற்றகுரு நீயெந்த
னாவியுயி ரத்தனையுநீ

சிந்தையில்நி றைந்தெனக் கெந்தவே ளையிலுமா
னந்தமே தந்ததும்நீ
செப்பரிய கவனமொடு முப்பாரு மெப்பொழுதும்
காப்பதும் கருணைமுகில்நீ

அந்தமா தியுமிலா வாதிகா ரணனுநீ
ஆனந்த பூரணன்நீ
அணுவிலும் அணுநீய னந்தகோ டிகளான
அண்டகோ ளங்களும்நீ

முந்துநான் மறைகட்கும் முந்தியவன் நீயுனது
மகிமைகளும் மொழியவெளிதோ
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[உத்தம குணசிங்கமான சிங்கவேள்ப் பெருமான்]

(சிங்கம் என்ற சொல்லிற்கு ‘தலைமையான’, ‘உத்தமமான’ என்றும் பொருள்)

(அமரகுலம் – தேவகுலம்; உத்துங்க – உயர்ந்த; கரிகள் – யானைகள்; அதிலோல – மிக்க எழிலுடன்கூடிய; யது – யாதவகுலம்; யதிசனகசுகநாரதாதிகள் – சுகர், நாரதர் மற்றும் சனகாதி முனிவர்கள் ; மங்கா – அழிவில்லா)

9.நரசிங்கம் நல்லமர குலசிங்கம் ஆழ்மோன
உத்துங்க யோகசிங்கம்
நல்லறம் காக்கவே அசுரகரி கள்மீது
தாவித்த லைபிளக்கும்

திருசிங்கம் உத்தமக் குணசிங்கம் குழலூதி
திருவிருந் தாவனத்தில்
கோபிகைய ரோடுவிளை யாடிக்கு லாவிடும்
அதிலோல மதனசிங்கம்

யதுசிங்கம் நந்தனின் னிளையசிங் கம்விஜய
சங்கம்மு ழக்குசிங்கம்
யதிசனக சுகநார தாதிகள்ச தாபுகழ்ச்
சீர்நிறைய கோபிலமெனும்

மலைசிங்கம் ஈடிலா நலவுந்த ரும்சிங்கம்
மங்காத்த னம்கொழிக்கும்
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

****

[மூவுலகளந்த வாமனமூர்த்தியும், ராவணனை வதைத்த ராமபிரானும், குன்றை விரலில் தூக்கிய கண்ணபிரானுமெல்லாம் ஆன எம்பிரான்]

(குறுவேதியன் – வாமனமூர்த்தி; வாரி – கடல்; அம்பரம் – ஆகாயம்; அம்புயம் – தாமரை;)

10.வாழிநா ராயணா நான்மறைகள் போற்றிடும்
பரமூல மானபொருளே
வாழிகுறு வேதியா மூவுலக ளந்ததிரு
விக்கிரம நீடுவாழி

வாழிமிதி லைமகள்ம னம்கவர்ம ணாளனே
வாரிசூழ்த் தீவழித்து
வல்லசுர பூபதியின் தசதலைகள் கொய்திட்ட
வல்வில்லி ராமவாழி

வாழிமுகில் வண்ணனே அம்பரம டைத்துமலை
சிறுவிரலி லேந்திநின்றோய்
வன்கான கச்சுனையி லரவமுடி மீதேறி
ஆடிடுகு ழந்தைவாழி

ஆழிமக ளெமையீன்ற உலகன்னை வாழியெழி
லம்புயந் தன்னிலமரும்
மங்கையோ டென்னிதய பங்கயத் தில்லமர்க
சிங்கவேளே! பிரானே!

***

(எழுதியது : உ.இரா.கிரிதரன்.)

One thought on “சிங்கவேளே! பிரானே!

  1. I feel like reading it again, again, again, and again and ……/ This song is born from the soul, I feel and not from the knowledge. May Lord Nrusimha be pleased with the “Pallandu” like VAAzhi in the final stanza and grant his wish “idayathil amarga”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s