சிவ தாண்டவத் துதி

Sivathandava1.புரண்டிடும் நெடுஞ்சடைப் புனல் நனைந்த கண்டமும்
துவண்டுருண்டிடும் பெரும் படம் விரிந்த நாகமும்
தமட் டமட் டமட்டெனத் தடக்கைகொட்டுடுக்கொடும்
அகண்ட தாண்டவம் புரிந்திடும் பரன் பதம் துணை

जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले
गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् |
डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं
चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् ||१||

புனல்- ஆறு; தடக்கை- நீண்ட கை; கண்டம்- கழுத்து.

பொழிப்புரை: அசைந்து புரளும் நீண்ட சடைமுடியிலிருந்து ஒழுகும் கங்கை நீரில் நனைந்திருக்கும் கழுத்தும், நடம்புரிவதால் துவண்டசைந்து படம் விரித்தாடும் பெரிய பாம்புகளும், டம டம என அழகிய நீண்ட கையினால் கொட்டுகின்ற உடுக்கும் உடைய மகத்தான தாண்டவ நடனம் புரிகின்ற சிவபெருமானின் திருவடி நமக்குத் துணையாக விளங்கட்டும்.

2.அடர்ந்த செஞ்சடைக்குளில் அதிர்ந்த துங்ககங்கையின்
அடங்கிடாத வெண் நுரை தொடும் நுதற்றடம்தனில்
சுடும் அழற் பிழம்பெழும்பிடும் விழிக்கழங்கொடும்
இளம்பிறை விடங்கனில் ஒடுங்கிடும் தினம் மனம்

जटाकटाहसंभ्रमभ्रमन्निलिम्पनिर्झरी
विलोलवीचिवल्लरीविराजमानमूर्धनि |
धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके
किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम ||२||

துங்க- புனிதமான; நுதற்றடம்- நெற்றிப்பரப்பு; அழல்- தீ; பிழம்பு- திரட்சி; கழங்கு- சுழற்சி; விடங்கன்- அழகன்.

பொழிப்புரை: அடர்த்தியான செஞ்சடைக்குள்ளே அதிர்ந்து பொங்குகின்ற புனிதமான கங்கையின் அடங்காத வெண் நுரையுள்ள வெள்ளச் சிதறல் மோதும் நெற்றித்தடத்தில், வெம்மை நிறைந்த அக்கினிப்பிழம்பு எழும்புகின்ற விழியின் சுழற்சியுடன்கூடிய இளம்பிறை சூடிய அழகான ஈசனிடம் எப்போதும் என் மனம் ஒடுங்கியிருக்கும்.

3.பனித்தடத்தின் நந்தினிக்கினித்திடும் குனித்தவன்
ஜனித்த ஜீவஜாலமோ டனைத்தும் ஆழ் மனத்தவன்
குனித்த நேர் கனித்த நோக்கில் ஈன தீனமோட்டிடும்
தனித்த மோனவித்தனிற் களித்திடட்டுமென் மனம்

धराधरेन्द्रनंदिनीविलासबन्धुबन्धुर
स्फुरद्दिगन्तसन्ततिप्रमोदमानमानसे |
कृपाकटाक्षधोरणीनिरुद्धदुर्धरापदि
क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि ||३||

தடம்- மலை; நந்தினி- புதல்வி; குனித்தவன்- ஆடல்புரிபவன்; ஆழ்- முழுகியிருக்கும்; குனித்த- இரக்கத்தால் குனிந்த; ஈன தீனம்- இழிநிலையும், குறைபாடும்; ஓட்டிடும்- விரட்டியொழித்திடும்; வித்தன்- தவசி.

பொழிப்புரை: இமயமலையின் புதல்வியான பார்வதிக்குக் களிப்பைக்கொடுக்கும் ஆடல்வல்லானும், படைத்திருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆழ்ந்து நிலைகொண்டுள்ள மனத்துடன் கூடியவனும், இரக்கம் நிறைந்த தயாகடாக்ஷத்தால் அனைத்துத் இழிவுகளையும், குறைகளையும் அகற்றிவிடுபவனும் ஆகிய ஏகாந்தத்தில் விளங்கும் சின்மயத் தவத்தோனான சிவபெருமானில் என் மனம் களிப்புடன் நிலைபெற்றிருக்கட்டும்.

4.களந்தனில் நெளிந்திடும் புயங்கமீதொளிர்ந்திடும்
துளங்குமாமணிக்கதிர்த் திகந்தமும் பரந்திடும்
கிளர்ந்து முந்து தந்திதோலுரிந்துகந்துடுத்தவன்
களங்ககன்றுளந்தனில் விளங்கவே வணங்குவாம்

लताभुजङ्गपिङ्गलस्फुरत्फणामणिप्रभा
कदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे |
मदान्धसिन्धुरस्फुरत्त्वगुत्तरीयमेदुरे
मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि ||४||

களம்- கழுத்து; புயங்கம்- பாம்பு; துளங்கு- ஒளிவீசும்; திகந்தம்- திக்கின் முடிவு; கிளர்ந்து- இறுமாப்புக் கொண்டு; முந்து- எதிர்ப்பட்ட; தந்தி- யானை; உகந்து- உவகைகொண்டு; களங்கு- குற்றம்.

பொழிப்புரை: கழுத்தினில் நெளிந்து ஊர்கின்ற இராஜநாகத்தின் தலையில் சுடர்விட்டு ஒளிர்கின்ற மகத்தான நாகமணியின் பிரகாசம் திக்குகளின் எல்லைவரை விரிந்து பரந்திடும். இறுமாப்புடன் எதிருற்ற யானையின் தோலையுரித்து மகிழ்ச்சியுடன் உடுத்துக்கொண்டவரான சிவபெருமான் அகக் களங்கங்கள் அனைத்தையும் நீங்கி உள்ளத்தில் குடிகொள்ள வணங்குவோமாக.

5.இடிகொடிப்பதித்துடக்கமிட்ட தேவநிட்டரும்
முடித்தொடிப்பொடிப்படும் அடித்தடத்திறத்தவன்
தடித்தபன்னகத்தொடும் புடைச்சடைமுடிப்பொடும்
நடித்திடும் உடுப்பதிப் பதித்தரட்டு(ம்) மெய்க்கதி

सहस्रलोचनप्रभृत्यशेषलेखशेखर
प्रसूनधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः |
भुजङ्गराजमालया निबद्धजाटजूटक
श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः ||५||

இடிக்கொடிப்பதி- வச்சிரக்கொடியுடைய இந்திரன்; துடக்கமிட்ட- துவங்கிய; தேவநிட்டர்- நிஶ்டையுடன்கூடிய தேவகணங்கள்; தொடி- பூமாலை (முடித்தொடிப்பொடி- முடியிலணிந்துள்ள மலர்களின் மகரந்தத்துகள்கள்); அடித்தடம்- பாதங்கள்; திறத்தவன்- பெருமையுற்றவன்; பன்னகம்- பாம்பு; புடை- திரண்டு பருத்த; நடித்தல்- நடம்புரிதல்; உடு- நட்சத்திரம் (உடுப்பதி- நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன்; உடுப்பதிப்பதி- சந்திரனைச் சூடிய சிவனார்).

பொழிப்புரை: வச்சிரக்கொடியோனாகும் இந்திரன் முதலான பக்தியுடன் வணங்கும் தேவகணங்களின் முடியிலணிந்துள்ள மலர்மாலைகளின் மகரந்தத்துகள்கள் படிந்த திருவடிகளைக்கொண்ட பெருமையுடைய (தேவாதிதேவனான) சிவனார், மிகப்பெரிய நாகம் ஊர்கின்ற திரண்ட சடைமுடிக்கட்டுடன் தாண்டவம் புரிகின்ற பிறைசூடிய பெருமான் நமக்கு மேலான நிலையை அளிக்கட்டும்.

6.விரிக்கதிர் தெறித்திடும் நெருப்புதிர் திருக்கதால்
குறித்த பஞ்சசாயனை எரித்த உம்பர் நாயகன்
விரித்த தண்ணொளித்திரள் விதுப்பிறை தரித்திடும்
திருக்கபாலிசெஞ்சடைக் கருத்திருத்தியேத்துவாம்

ललाटचत्वरज्वलद्धनञ्जयस्फुलिङ्गभा
निपीतपञ्चसायकं नमन्निलिम्पनायकम् |
सुधामयूखलेखया विराजमानशेखरं
महाकपालिसम्पदेशिरोजटालमस्तु नः ||६||

திருக்கு – கண்; (திருக்கதால் – திருக்கு அதனால்) குறித்த- இலக்குவைத்த; பஞ்சசாயன்- ஐந்து மலர்க்கணங்களைக் கொண்ட மன்மதன்; உம்பர்நாயகன்- தேவர்களின் தலைவன்; தண்ணொளி- குளிர்மையான ஒளி; விது- சந்திரன்; கருத்திருத்தி- கருத்தில் இருத்தி, மனதில் நிலையாக வைத்து; ஏத்துவாம்- வணக்குவோமாக.

பொழிப்புரை: விரிந்த ஒளிக்கதிர்களுடன் பிரகாசித்திடும் அக்கினி ஜ்வாலைகளை உமிழ்கின்ற நெற்றிக் கண்ணால் மலர்க்கணங்களை வைத்துக் குறிவைத்த மன்மதனை சுட்டெரித்த தேவநாயகன்; பரந்த தண்ணொளியைத் திரளாக வீசுகின்ற பிறைநிலாவைச் சூடுகின்ற அந்த மகா கபாலிநாதரின் செஞ்சடைமுடியினை மனதில் தியானித்து வணங்குவோமாக.

7.தகத் தகத் தகத் தகச் சொ(ஜொ)லிக்கு மத்தகத்தொடும்
நகைத்துகுத்த காமனைத் தகித்திகுத்தவக்கொடும்
நகச்சுதை நகைத்துகச் சுகத்துடன் களித்திடும்
சுகச்சுகிர்த நக்கனிச் சகத்திலென் னகத்துணை

करालभालपट्टिकाधगद्धगद्धगज्ज्वल
द्धनञ्जयाहुतीकृतप्रचण्डपञ्चसायके |
धराधरेन्द्रनन्दिनीकुचाग्रचित्रपत्रक
प्रकल्पनैकशिल्पिनि त्रिलोचने रतिर्मम |||७||

மத்தகம்- நெற்றி; உகுத்த- எய்த, சொரிந்த; இகுத்த- வீழ்த்திய, கொன்ற; அக்கு- கண், (தகித்திகுத்தவக்கு- தகித்து இகுத்த அக்கு); நகம்- மலை; சுதை- மகள், (நகச்சுதை- மலைமகளான பார்வதி); உக- மகிழ்வோடு ஏற்றுக்கொள்ள, (நகைத்துக- நகைத்து மகிழ்வுடன் ஏற்க); சுக சுகிர்த- பரமானந்தப் பேற்றோடுகூடிய; நக்கன்- திகம்பரன்; அகத்துணை- மனதிற்கு ஆதரவு.

பொழிப்புரை: (தீச்சுடரெழும் கண்ணுளதால்) தக தகவென ஜ்வலிக்கின்ற நெற்றித்தடத்தோடும், நகைப்புடன் மலர்க்கணை ஏவிய காமனை பொசுக்கி வீழ்த்திய கண்ணோடும் கூடியவரும், மலைமகள் புன்னகை புரிந்து மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள இன்பத்துடன் களிக்கின்றவரும், (அதே வேளையில்) பரமானந்த சுகிர்தத்தில் திளைக்கும் தூய திகம்பரனுமான சிவபெருமான் ஒருவரே இவ்வுலகில் எனது உட்துணையானவர்.

8.நெருங்குமேகமூட்டினுட் சுருங்குமிந்துவோவென
அலங்குசங்ககந்தரம் துலங்கு நீலகண்டனே!
தரங்ககங்கைநங்கையும் கருங்கரிக்கலிங்கமும்
இலங்கவே தரித்தவா குலங்கொழுக்க வாழ்த்துவாம்

नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरत्
कुहूनिशीथिनीतमः प्रबन्धबद्धकन्धरः |
निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः
कलानिधानबन्धुरः श्रियं जगद्धुरंधरः ||८||

சுருங்கும்- மறையும்; மூட்டு- எழுச்சி; இந்து- நிலா; அலங்கு- ஒளிவீசும்; கந்தரம்- கழுத்து; தரங்க- அலைகளுள்ள; கரும்- கரியநிறமுள்ள; கரி- யானை; கலிங்கம்- போர்வை.

பொழிப்புரை: நெருங்கிக்கூடும் மேகமூட்டத்தினுள் மறைந்திருக்கும் சந்திரனோ என ஐயுறும்படி ஒளிவீசும் சங்கு போன்ற கழுத்துடன்கூடிய நீலகண்டனே! (விடமுண்ட கண்டத்திற்கு மேகமூட்டத்தில் மறைந்த நிலா உவமை). அலைகளுயரும் கங்கையையும், கரிய யானைத்தோல் போர்வையும் விளங்கும்வண்ணம் தரித்த சிவபெருமானே! உம்மை எங்கள் குலம்தழைக்க வாழ்த்துவோம்.

9.வயந்தனில் மயங்கிடும் பவம்தரும் தமம்தகும்
மயம் உயர்ந்த மாயபங்கயம் வயங்குகண்டனாம்
மதன்தனைப் புரம்தனைப் பவம்தனை மகம்தனை
கயம்தனை யமன்தனை அரிந்தவன் அருந்துணை

प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभा
वलम्बिकण्ठकन्दलीरुचिप्रबद्धकन्धरम् |
स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं
गजच्छिदांधकच्छिदं तमंतकच्छिदं भजे ||९||

வயம்- வேட்கை; பவம்- சம்சாரம், உலக வாழ்க்கை; தமம்- இருட்டு; தகும்- ஒத்த; மயம்- அழகு; உயர்ந்த- ஓங்கிய; மாயபங்கயம்- கருநீலத்தாமரை; வயங்கு- விளங்குகின்ற; கண்டம்- கழுத்து; மகம்- யாகம்; கயம்- யானை; அரிந்தவன்- அழித்தவன்.

பொழிப்புரை: ஆசையில் மயங்கிடும் உலகவாழ்க்கையாகும் இருளுக்கு ஒப்பான அழகோங்கிய கருநீலநிறமுள்ள தாமரைமலர்களால் அலங்கரிக்கப்பட்ட கழுத்துடன் கூடியவரான சிவபெருமான், மன்மதனை, திருபுரத்தை, பிறப்பு இறப்பை, தட்சனின் யாகத்தை, கஜாசுரனை, யமனை அழித்த ஈச்வரனே எனக்கு அரிய துணையானவர்.

10.நிதாந்ததேனருந்தவே நிகாயமாய்ச் சுரும்புசூழ்
திசாந்தமும் சுகந்தமூர் கதம்பமாலை பூண்டவன்
புராந்தகன் பவாந்தகன் மகாந்தகன் கயாந்தகன்
தமாந்தகாந்தகாந்தசுத் தசாந்தகாந்தனென்துணை

अखर्वसर्वमङ्गलाकलाकदंबमञ्जरी
रसप्रवाहमाधुरी विजृंभणामधुव्रतम् |
स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं
गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे ||१०||

நிதாந்த- உன்னதமான; நிகாயமாய்- கூட்டமாக; சுரும்பு- தேனீ; திசாந்தம்- திசைமுற்றும்; ஊர்- பரவுகின்ற; தமம்- அறியாமை இருள்; அந்தகன்- அழிப்பவன்; அந்தகாந்தன்- எமனை அழித்தவன்; சுத்த சாந்த காந்தன்- நிஜானந்த சொரூபனான துணைவன்.

பொழிப்புரை: மேன்மையான மதுவை உண்ண கூட்டமாகத் தேனீக்கள் சூழ்கின்ற, திசைகளின் எல்லை வரைக்கும் நறுமணம் பரவுகின்ற கதம்பமாலையை அணிந்தவனும், திரிபுரத்தையும், சம்சாரத்தையும், தட்சனின் யாகத்தையும், கஜாசுரனைய்ம், அறியாமையையும், எமனையும் அழித்தவனும், (அதே வேளை) நிஜானந்த சொரூபனுமான எம்பிரானே நமக்குத் துணை.

11.விதிர்த்தெதிர்த்திடும்வெகுத்தபன்னகத்திரள்விடும்
மிகுத்தகோரகாளதீ பரக்குமந்தரத்திலே
திமித் திமித் திமித் திமித் தெனத்துடித் திமிர்த்திடும்
தொனித்துடிப்பிலாடிடும் தனிப்பரன் அடித்துணை

जयत्वदभ्रविभ्रमभ्रमद्भुजङ्गमश्वस
द्विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाट् |
धिमिद्धिमिद्धिमिध्वनन्मृदङ्गतुङ्गमङ्गल
ध्वनिक्रमप्रवर्तित प्रचण्डताण्डवः शिवः ||११||

விதிர்த்து- நடுங்கி; வெகுத்த- மிகுதியான; பன்னகம்- பாம்பு; திரள்- கூட்டம்; கோர- பயங்கரமான; காளம்- நஞ்சு; அந்தரம்- ஆகாயம்; துடி- உடுக்கு; திமிர்த்தல்- அடித்தல்; தனிப்பரன்- ஏகாந்த பரம்பொருள்.

பொழிப்புரை: உடலிலணிந்த வெகுவான நாகங்களின் கூட்டம் அச்சத்தால் நடுங்கிச் சீறியுமிழும் பயங்கரமான விஶஜ்வாலை ஆகாயமெங்கும் பரக்கும். திமி திமியென உடுக்கு கொட்டும் தொனியின் தாளத்திற்கொப்ப தாண்டவம்புரிகின்ற ஏகாந்த பரம்பொருளான சிவபெருமானின் பாதங்களே நமக்குத் துணை.

12.தமத்திமிர்த்தலத்தில்நித் திலத்திலும்மிருத்திலும்
புதைத்தரத்தினத்திலும் சினத்தபன்னகத்திலும்
விதிர்த்தபாமரத்திலும் மதித்தவித்துவத்திலும்
சமத்துவத்துடன் சதா சிவத்தையேத்து(ம்) நாளெதோ

स्पृषद्विचित्रतल्पयोर्भुजङ्गमौक्तिकस्रजोर्
गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः |
तृष्णारविन्दचक्षुषोः प्रजामहीमहेन्द्रयोः
समप्रवृत्तिकः कदा सदाशिवं भजाम्यहम् ||१२||

தமத்திமிர்- தீவினையிருள் நிரம்பிய; தலம்- உலகம்; நித்திலம்- முத்து; மிருத்து- மண்கட்டி; பன்னகம்- பாம்பு; விதிர்த்த- நடுக்கமுற்ற; பாமரம்- அறியாமை; மதித்த- மதம்கொண்ட, வித்துவத்து- அறிவாற்றல்.

பொழிப்புரை: தீவினையிருளால் சூழப்பட்ட உலகத்தோடாகட்டும், விலையுயர்ந்த முத்தாகட்டும் அல்லது மண்கட்டையாகட்டும், புதையலாகவுள்ள இரத்தினமணிகளாகட்டும் அல்லது சினம்கொண்டு சீறும் நாகமாகட்டும், நடுக்கம்கொள்ளும் பாமரத்தன்மையாகட்டும் அல்லது கருவம் கொண்ட அறிவாற்றலாகட்டும் – இவையெல்லாவற்றிலும் சமத்துவ நோக்கோடு, விருப்புவெறுப்பற்று, எப்போதும் சிவபெருமானையே தியானிக்கும் நாள் என்று கைவரக்கூடுமோ!

13.நிவாசமாக கங்கையின் சமீபகோடரத்தினுள்
உவாதையிங்கிதம் அறச் சுவாந்த சுத்தி கைவர
உவாசனைபுரிந்து நற்சிவானுபூதியுற்றுமேல்
சிவாயமந்த்ரமுச்சரித் தவாவறுக்கு(ம்) நாளெதோ

कदा निलिम्पनिर्झरीनिकुञ्जकोटरे वसन्
विमुक्तदुर्मतिः सदा शिरः स्थमञ्जलिं वहन् |
विमुक्तलोललोचनो ललामभाललग्नकः
शिवेति मंत्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् ||१३||

நிவாசம்- வசிப்பிடம்; கோடரம்- பொந்து; உவாதை- துன்பம்; இங்கிதம்- எண்ணம்; சுவாந்தம்- மனது; உவாசனை- வழிபாடு.

பொழிப்புரை: கங்கைநதியின் அருகாமையிலுள்ள ஒரு குகையில் அமர்ந்து, துன்பத்தை விளைவிக்கின்ற கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபட்டு மனது பரிசுத்த நிலையைப் பெற்று, பக்தியுடன் ஆராதனை புரிந்து, அதனால் பேரின்பமான சிவானுபூதி அடையப்பெற்று, அதற்கு மேலும் கூட நமச்சிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரம் உச்சரித்தவாறு ஆசையை அறுத்து மெய்மை நிலையில் வீற்றிருக்கும் நாள் என்று கிடைக்குமோ!

எழுதியது: உ.இரா.கிரிதரன் – 07-01-2013

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s