ஞான விருத்தம்

Vishnu(மலையாள மொழியில் பக்தகவி பூந்தானம் இயற்றிய ‘ஞானப்பானை’யின் தமிழாக்கம்)

tamil2 copy

  – நாராயணீயம் முதல் சுலோகத்தின் மொழிபெயர்ப்பு.

[கட்டிலடங்காத பரிபூரணமான ஞான ஆனந்தத்தின் உருவத்தோடு கூடியதும், மிகவும் அரிதான தனக்குவமையற்ற சித்ப்ரகாசமாகியதும், வல்லமையோடு காலம், தேசம் என்கிற வரையறைகளின் தடைகளற்றதும், சகலபந்தங்களிலிருந்தும் விடுபட்டதும், (அதேசமயம்) எல்லாவற்றின் வடிவையும் கொண்டதும், இனிமையான எல்லா நிகம, ஆகமங்களின் சாரமாக ஒளிவீசுகின்ற தத்துவமாக இருப்பதும், மனக்கண்ணால் காண இயலாததும் (ஆனால்) முனிவர்களால் ப்ரம்மரூபமாக அறியப்படுவதும் ஆன அமரஜோதியான பரம்பொருள் ஆஹா, இதோ எதிரில், குருவாயூரிலுள்ள அழகிய கோயிலுக்குள்ளே ஒளிவீசுகின்றதே! (இதைக்காண) உலக மக்கள் பெற்ற பெரும்பாக்கியம் அளவிடமுடியாததே (சந்தேகமில்லை).]
 முன்னுரை

லையாளதேசத்தில் அவதரித்து இறையுணர்வு செழிக்கச்செய்த பக்திப்புலவர்களுள் தலைசிறந்தவர் பூந்தானகவி. பெரும்பண்டிதரும், நாராயணீய காவியத்தின் ஆசிரியருமான மேல்ப்புத்தூர் நாராயண பட்டதிரிப்பாடின் சமகாலத்தவரான பூந்தானம் பக்திமார்க்கம் வாயிலாக படிப்பறிவில்லாத பாமர மக்களுடைய மனதையும் மேம்படச்செய்த ஆன்மிகச் சீர்திருத்தவாதியும், பாமரர்களின் தத்துவ ஞானியுமாவார். ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் வடகேரளத்தில் அங்காடிப்புரம் என்ற கிராமத்தில் நம்பூதிரிப்பிராமண குலத்தில் பிறந்த அவருடைய இயற்பெயரென்னவென்பது இதுவரை தெரியவரவில்லை. நம்பூதிரிப் பிராமணர்களிடையே இல்லப்பெயரால் அவரவரையழைப்பது நடை முறையிலிருப்பதையொட்டி பூந்தானம் என்ற அவரது இல்லப்பெயரலேயே அவர் அறியப்பட்டு வருகிறார். அவர் குருவாயூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபிரானிடம் தீவிரமான பக்திகொண்டவர். இறைவனின் குணச் சிறப்பையும், அருட்செயல்களையும் குறிக்கும் திருப்பெயர்களை உச்சரிப்பது நம் பாபங்களை அகற்றிக் கடைத்தேற வழிசெய்யும் என்பது ஆன்றோர் முடிபு. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு சிறு வயதினிலேயே அவர் ஹரிநாம சங்கீர்த்தனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராய் விளங்கினார். அவர் முறையாக எல்லா மாதமும் குருவாயூர் சென்று பெருமாளைத் தரிசிக்கும் (திங்கள்பஜனம் என்று மலையாள மொழியில் வழங்குகிற) விரதத்தை விடாது கடைப்பிடித்து வந்தார். அவருக்கு வெகுநாட்களாக மகப்பேறு இல்லாமல் இருந்தமையால் வருந்தி, குருவாயூரப்பனை வேண்டி வழிபட்டதன் பலனாக ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்த அருமைக் குழந்தையின் அன்னப்பிராசனம் (முதல் முறையாகச் சோறூட்டுதல்) சிறப்பாகக் கொண்டாட எண்ணி அவர் ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விமரிசையான விருந்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஆனால் குழந்தை உறங்கிக் கிடப்பதையறியாமல் அஜாக்கிரதையாக யாரோ துணிமணிகளைக் கூட்டி அதன்மீது போட்டுவிட மூச்சடைத்துக் குழந்தை உயிர்நீத்தது. அருமைக்குழந்தையின் பிரிவு பூந்தானத்தின் மனதை அளவிடமுடியாத துயரத்திலாழ்த்தியது.

எல்லாம் வல்ல எம்பெருமான் தன்னை ஆட்கொண்டு அவன் பக்கம் தன்னை இழுக்கிறான் என்பதைப் பூந்தானம் உணர்ந்தார். அதன் விளைவே உலகவாழ்க்கைச் சுகங்களின் அர்த்தமற்ற தன்மையையும், ஹரி நாம உச்சாரணத்தின் இன்றியமையாத தேவையையும் வலியுறுத்தி அதிகம் படிப்பறிவில்லாதவர்களும்கூடப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் “பானை” என்ற சந்தத்தில் மலையாளத்தில் அவர் இயற்றிய “ஞானப்பானை” என்ற நூல். இதில் 356 வரிகளில் அவர் விவரிக்கின்ற தத்துவ உபதேசம் பாரதத்தின் சமயத் தத்துவஞானியர் பரம்பரை பரம்பரையாக நிலைநாட்டி வந்திருந்த அடிப்படையான கொள்கைகளே – கர்மபந்தம், கர்மத்தின் போக்கிற்கொப்பப் பிறப்புகளின் தொடர்ச்சி, இறைவன் வழிபாட்டால் அடையக்கூடிய பரமநிலையான மோக்ஷம், முதலானவை. இறையுணர்ச்சியுள்ள ஒரு சாதாரண இந்துவுக்கு இந்தக்கோட்பாடுகள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாக ஒருநாளும் தோற்றமளிப்பதில்லை. ஏனெனில் இவை அவனுடைய நாகரிகத்தின், கலாச்சாரத்தின் ஒரு பாகமாக உள்ளவை. தினந்தோறும் வாழ்க்கையில் சுகதுக்கங்களிலெல்லாம் அவன் இந்த நம்பிக்கையின் நிழலில் ஆறுதல் தேடிக்கொண்டிருக்கிறான். இந்த நம்பிக்கைகள் பாரதத்தின் புராணங்களில் அடங்கியிருப்பவை. உபநிஷத்துக்களும், பகவத்கீதையும் இந்தக்கொள்கைகளையே திரும்பத்திரும்ப எடுத்துரைக்கின்றன. பாகவதத்தில் பற்பல கட்டங்களில் சேர்த்திருக்கின்ற உபகதைகளும், உரையாடல்களும், உபதேசங்களும் இந்துசமயத்தின் இந்த அஸ்திவாரக்கற்களை உறுதிப்படுத்துகின்றவையே. திருமாலின் பெருமைகளை விளக்கும் பாகவத புராணத்தின் நித்திய பாராயணத்தில் நிரந்தரம் ஈடுபட்டிருந்த பக்தரான பூந்தானத்திற்கு அஜாமிளோபாக்யானம், நாரதவசுதேவஸம்வாதம், நிமினவயோகீஸம்வாதம், வாசுதேவோத்தவஸம்வாதம் போன்ற பாகவதப் பகுதிகளின் வழியாக இந்தக்கோட்பாடுகளோடு உறுதியான தொடர்பு ஏற்பட்டிருந்தது. இக்கொள்கைகளைப் பாவடிவில் விளக்கியபோது ‘ஞானப்பானை’ உருவெடுத்தது என்று கூறலாம். இதன் நூற்பெயரிலிருந்து கவிபூந்தானம் மோக்ஷ மார்க்கத்திற்கு உகந்ததாக ஞானமார்க்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார் என்று கொள்ளவேண்டாம். பக்தி மார்க்கத்தின், அதிலும் பாசாங்கற்ற, மனமார்ந்த நாமசங்கீர்த்தன பக்தியின் பெருமையையே நூலாசிரியர் இந்த நூலில் விளக்கியிருக்கிறார்.

 

நூற்கருத்து:

பலநூற்றாண்டுகளாக நம்நாட்டில் ஆஸ்திகமக்களிடையே பிரபலமாக இருந்துவருகின்ற வெகு சாதாரணமான ஒரு தத்துவ சிந்தனையே இந்நூலுக்கு ஆதாரமான அடிக்கல்.

இறைவனின் படைப்பே இவ்வுலகம். இங்கே பிறக்கிற அனைத்து உயிர்களும் கர்மபாசத்தால் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தேவர்கள் கூட இந்த கர்மப்பிணைப்பிலிருந்து விடுபட்டவரல்லர். கர்மத்துக்கு நல்வினை, தீவினை, நல்லது தீயது கலந்த வினை என மூன்று பிரிவுகள் உண்டு. இந்த மூவகை வினைகளும் ஜீவாத்மாவை உலக ஆசைகளில் கட்டிப்போட்டு விடுகின்றன. பூமியில் ஜீவஜாலங்களுக்கு ஆயுட்காலம் அற்பமானதினால் அவை கர்மபலனைத் துய்க்கத் தொடர்ந்து பிறவிகள் எடுக்க வேண்டியதாகின்றது. புண்ணிய பாபங்களின் அளவைப்பொறுத்து ஸ்வர்க்க நரகங்களில் ஜீவாத்மா சுற்றியலைகிறது. கரும பலன் அனுபவித்து முடிந்ததும் அவை பூமியில் மறுபடியும் பிறவி எடுக்கின்றன. பூமியில் எடுக்கின்ற இந்த மறுபிறவியின் வேறுபாடுகளும் முன்ஜன்மத்தில் சேகரித்த புண்ணிய பாபங்களைப் பொறுத்து அமைகின்றன. கர்மம் சம்பாதிப்பது பூமியிலிருந்துதான். அதனால் கர்மம் அழிவது என்பதும் இப்பூமியில் மட்டுமே சாத்தியமாகிறது. கர்ம விதை கருகிவிடுமாயின் அதுவே வீடுபேறு. அதற்கான உபாதிகளை அவரவர் தகுதிக்கேற்ப விவரிக்கின்ற அறநெறிக்கோட்பாடுகள் பல உள்ளன. இருப்பினும் சம்சாரிகளான சாதாரண மாந்தர்க்கு முக்தி எளிதில் கிடைப்பதற்கான சரியான வழியான பக்திமார்க்கத்தைப் பற்றியும், முக்கியமாக நாமசங்கீர்த்தன மகத்துவத்தைப் பற்றியும் பக்தகவியான பூந்தானம் உபதேசம் தருகிறார். பரமபுருஷார்த்தமான மோக்ஷம் பெறுவதற்கு கர்ம, ஞான மார்க்கங்களை விடக் கலியுகத்தில் முக்கியமானது பக்தி மார்க்கமே. யஜ்ஞம், தவம் முதலானவைகளைவிட நாமசங்கீர்த்தனம் அனாயாஸமும், உடன் பலமளிப்பதுமாகும். அது நிலையில்லாத வாழ்க்கையில் வைராக்கியத்தை உண்டாக்குகிறது. கர்மபீஜம் வாட உகந்த இடம் இந்த பூமியில் பாரதகண்டமேயாகும். இக்காரணங்களாலேயே மற்ற உலகங்களில் வசிப்பவர்களும் கூடக் கலியுகத்தில் பாரதகண்டத்தில் ஒரு புற்கொடியாகவேனும் வந்து பிறக்க விரும்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரதத்தில், அதிலும் இந்தக் கலியுகத்தில் பிறந்த நம்மிடையே எத்தனைபேர் இந்த தேச,கால மகத்துவத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம்! புல்லாகிப் புழுவாகிப் பலபிறவிகளுக்குப் பிறகு அடைந்த இந்த மானுடப்பிறவியில் நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபடச்சித்தமில்லாமல் போகங்களை மட்டுமே தேடிக்கொண்டிருக்கின்றோம். உடலும் மனமும் சம்பந்தப்பட்ட சுகவேட்டையில் எந்நாளும் ஈடுபடுகின்ற மக்களுக்குக் கவிபூந்தானம் அருளுகின்ற பரமஞானம் இதுதான்:-

விந்தைநிறைவாழ்க்கையிதுகாட்டும்பலசாலம்
சிந்தித்திடுவீரேயிதனாழத்தினைநன்றாய்
முந்தைப்பிறவிகளும்பலவந்தும்போனதுமே
பந்தித்திடுகருமத்தின்நந்தாவல்லமையும்

இதுகாலம்கலிநாளென்பதையும்நம்பிறவி
இதமாகவேயிப்பாரதநிலமீதுற்றதையும்
அதிலிந்நாள்வரைவீணேபழுதாக்கியவிதமும்
அதியோகம்வருமென்பதுதிடமில்லாநிலையும்

நரவாழ்க்கையினளவென்பதுதெரியாவொருநிலையும்
வரமாகவெநோயற்றொருதிடமானவிருப்பும்
திருநாமமேதருநல்லொருபுருடார்த்தமதென்றும்
மறவாதிருமனமேநாள்களையாதிருவீணே

இவ்வாறு சோராது வாழ்வுய்ய நம் நாவிலென்றும் நாராயணன் நாமம் நிறைத்து வைப்போம் என்று நிறைந்த கருணையுடன் பாமர மக்களையும் சேர்த்து அனைவருக்கும் அறிவுறுத்துகிறார் நூலாசிரியர்.

 சரணாகதி தத்துவத்தின் அவசியமும், நாமபாராயணத்தின் மேன்மையும்:

உலகில் படைக்கப்பட்டுள்ள உயிர்களின் – முக்கியமாக மனித உயிர்களின் ஒன்றுக்கொன்று விபரீதமாக அமைந்துள்ள இயல்பே கர்ம சித்தாந்தச் சிந்தனைக்குள்ள வித்தாகும். இறைவனுடைய பரிபூரண இச்சைப்படியே அனைத்துச் சராசரங்களும் எல்லாக் காலங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நேரத்திலும் உடலாலும், மனதாலும் செய்கின்ற செயல்களும் இறைவன் விதித்தபடியே நடக்கின்றது. எவ்வாறு மனதில் எண்ணங்கள் எழுகின்றன, எவ்வாறு மாறுபட்ட உணர்ச்சிகள் அவ்வப்போது உருவாகின்றன, அவை தொடர்ந்து உண்டாகும்போது எத்தகைய ரீதியை அனுசரித்துத் தொடர்கின்றன என்பனவற்றை நாம் அறியவல்லோம். ஒரு அழகான இளம்பெண்ணைக் காண்கின்ற வாலிபனுக்கு மனதில் காம உணர்ச்சி எழலாம். ஒரு கலைஞன் அவளை படைப்பின் எழிலம்சத்தை ரசிக்கும் மனப்பாங்கோடு பார்க்கிறான். அதே பெண்ணைப் பார்க்கும் முற்றும் துறந்த துறவியின் மனதில் எந்தவிதமான உணர்ச்சிகளும் எழுவதில்லை. ஆக, ஒரே மாதிரியான புலன்களால் அறியப்படும் ஒரே பொருள் பலருக்குப் பலவிதமான உணர்வுகளைக் கொடுக்கின்றது. இம்மாதிரியான, ஒருவருக்கொருவர் மாறுபட்ட, இணையற்ற தன்மையே நம் மனதில் ‘நான் ஒரு தனிப்பட்ட மனிதன்’ என்ற பொய்யான உணர்வை அளிப்பது.

தனித்தன்மையற்று இருப்பதே நம் இயற்கையான இயல்பு. ஆனால் எவருக்குமே அத்தகைய தனித்தன்மையற்று இருக்கும் நிலையை உணரமுடியாமல் இருக்கின்றது. என்ன காரணம்? அதுவே இறைவனின் மாயை என்பது. அதனாலேயே நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட நபர்களாக உணர்கின்றோம். இந்த ‘நான்’ என்ற உணர்வு (ego) வந்து சேர்ந்ததனால்தான் நாம் செய்கின்ற செயல்களுக்கு ‘நானே கர்த்தா’ என்கின்ற தவறான உடைமையுணர்வும் கிடைக்கப் பெற்றிருக்கிறோம். ‘நான் ஒரு தனிப்பட்டவன்’ என்று நம் மனதில் பொய்யாக அமைந்துள்ள உணர்வால் நாம் ஒவ்வொருவரும் அவரவருடைய செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாளி என்ற பொய்யான சுதந்திர எண்ணத்தில் செயல்களைச்செய்து, அதன் பலன்களும் நாம் எதிர்பார்த்த வண்ணம் அமையவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் உண்மையில் நம் செயல்கள் நிகழ்வதும், அதன் பலன்கள் அமைவதும் கடவுளின் சித்தப்படியே என்பது மறக்கப்பட்டு விடுகிறது.

ஒரு மனித வாழ்க்கையில் இதுவரை நடைபெற்று முடிந்த நிகழ்ச்சிகளையோ, அடுத்த கணத்திலிருந்து நடக்கவிருக்கின்ற நிகழ்ச்சிகளையோ எந்த ஒரு மனிதனுக்கும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. உலகமெனும் நாடக அரங்கில் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஆட்டுகின்றபடி ஆடுகின்ற பாவைகள் என்றும், இறைவன் விதித்தபடியே எல்லாம் நிகழ்கின்றன என்றும் எல்லாம் பலரும் பொதுப்படையாகச் சொன்னாலும், ஒவ்வொருவரும் அவரவர் செய்கின்ற கர்மங்களுக்கு அவரவர் எதிர்பார்த்தபடியான விளைவுகளும், பலன்களும் கிடைக்கவில்லையெனின் துயரமும், ஆத்திரமும், கோபமும், வெறுப்பும் அடைகிறார்கள் என்பது நம் வாழ்க்கையில் நிரந்தரமாக காண்கின்ற உண்மை. ஏனெனில் சுதந்திர இச்சாசக்தியோடு, தனித்தன்மைபெற்று சொந்தமான கட்டுப்பாட்டில் செயல்களைச் செய்கின்றோம் என்ற நம் நம்பிக்கை பொய்யானது என்பது மாயையின் ஆதிக்கத்தால் உணரமுடியாமல் போய்விடுகின்றது. எங்ஙனம் மாயையின் இந்த வலை மானிட உயிர்கள் மீது வீசப்பட்டது? அதையாரும் அறிந்தவர் இலர். மாயை என்கின்ற கண்கட்டு வித்தையை இறைவன் செய்து வைத்திருப்பதினால்தான் ஒருவருக்கொருவர் வேறுபட்ட மனிதர்கள் எனவும், சிக்கலான வாழ்க்கை முறைகள் எனவும் உலக நாடகம் தொடராக நடந்துகொண்டிருக்கிறது. அதுவே இறைவனின் லீலை அல்லது விளையாட்டு என்பது!

மாயையின் ஆதிக்கம் தங்குதடையின்றி இயங்குவதற்கான சாதனமே மனித மனது என்பது. மனதின் இயக்கம் உடலின் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடலை இயக்குவது என்ற வரம்பையும் மீறி ‘நான் ஒரு தனிப்பட்டவன்’ என்கிற உணர்வையும் மனது கொடுக்கிறது. இந்த ‘நான்’ என்ற எண்ணம் (ego) மனதின் இயக்கத்தில் பாதுகாவலைப் பெறுகின்றது. ‘நான்’ என்ற தனிப்பட்ட எண்ணத்தோடு இயங்கும் மனதின் இயல்பு என்ன? சொந்தமாகக் கருத்துக்களை உருவாக்கி அவற்றைப் பலமாக நம்பிக்கொண்டிருப்பதேயாகும். மாற்றம் என்பது வாழ்வின் ஒரு பாகமாகவும், நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் அடங்காத ஒன்றாகவும் இருப்பினும், ‘நான்’ என்று தனிப்பட்ட நிலையைத் தனதாக்கி இயங்கிக் கொண்டிருக்கின்ற மனது தனக்குப் பிடித்த நிலைகளிலிருந்து ஏற்படுகின்ற மாறுபாட்டை விரும்புவதில்லை. மாறாக, தனக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளிலிருந்து மாற்றத்தை அடைய எப்போதும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. கடவுளின் இச்சைப்படி மட்டுமே அனைத்தும் நிகழ்கின்றன என்பதில் திடமான நம்பிக்கை உறுதிப்படாமல் இருப்பதே மனதின் இந்தச் செய்கைகளுக்குக் காரணம்.

நம் மனதில் அமைந்திருக்கின்ற பொய்யான சுதந்திர எண்ணமும், நாம் செய்கின்ற செயல்களும் அதன் விளைவுகளும் நம்முடைய முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்று நாம் கொண்டிருக்கின்ற தவறான நம்பிக்கையும் செயல்களின் விளைவைப் பற்றியுள்ள ஈடுபாட்டை மனதில் உருவாக்குகின்றன. மகிழ்ச்சியும், துயரமும் உருவாவது இந்த ஈடுபாட்டின் அளவையும், ஆழத்தையும் பொறுத்ததே. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனது தனக்குப் பிடித்தமான ரீதியிலுள்ள ஒரு பலனை எதிர்பார்க்கிறது. சாதகமான ஒரு விளைவை ஆசைப்படுகிறது. ஆசை (அது கடவுளை அடைய வேண்டும் என்பதாயினும் கூட) துயரத்தையே கொண்டுவந்து சேர்க்கும். ஏனெனில், விரும்புவதெல்லாம் அடைவது என்பது நம் கையில் இல்லை. அது இறைவன் இச்சைப்படியே.

நமக்கு விருப்பமான விளைவுகளை எதிர்பார்த்து நாம் சிலவற்றைச் செய்யும்பொழுது நாம் எதிர்பார்க்காத, நாம் விரும்பாத முறையிலுள்ள வேறு மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன. நிகழ்கின்ற விளைவுகள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காதபோது மனதில் குழப்பம் உண்டாகிறது. ஏனெனில் நம் செயல்களும், விளைவுகளும் நம் கட்டுப்பாட்டில் உள்ளவையே என்று நாம் திடமாக நம்பிக்கொண்டிருக்கின்றோம். ஒரு சம்பவம் நிகழ்வதும், ஒரு செய்கையின் முடிவு அமைவதும் ஆண்டவன் தீர்மானித்தபடியே. ஆனால் அதை நம்முடைய தீர்மானமாக எண்ணிக் குழம்புகிறோம். செயல்களின் முடிவைப் பற்றியுள்ள தெளிவற்ற நிலையும் குழப்பத்தையே கொடுக்கின்றது. நாம் விரும்பியபடி ஒன்று நிகழவில்லை என்றால் மனதில் ஆத்திரமும், துயரமும், வெறுப்பும் கொந்தளிக்கின்றன. நாம் விரும்பியபடி நிகழ்ந்துவிட்டால் ‘நானே செய்து முடித்தேன்’ என்ற செருக்கு (Pride) மனதில் எழுகிறது. மற்றொரு நபரின் செயல் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை எனின் கோபமும், பகையும் எழுகின்றன. என் செயல்களுக்கு நானே கர்த்தா என்ற தவறான நம்பிக்கை மனதில் உறுதிப்பட்டுவிட்டதனாலேயே இவ்வாறு குழப்பம், ஆத்திரம், துயரம், வெறுப்பு, அகந்தை, கோபம், பகை என்ற உணர்ச்சிகள் எழுகின்றன. நிகழ்வுகளின் ஆதாரம் இறைவன் இச்சையே என்ற நம்பிக்கை மனதில் பூரணமாக உறுதிப்படாதவரையில் துயரம், வெறுப்பு, கோபம் முதலான உணர்ச்சிகள் உருவாகிக் கொண்டேதாமிருக்கும். என்னுடைய செய்கையே அச்செயலின் முடிவுக்குக் காரணம் என வினையின் விளைவுகள்பால் மனதினில் உண்டாகின்ற ஈடுபாடுதான் வினைப்பயனையும் நம் ஆத்மாவில் கூட்டிக்கொண்டிருப்பது. நல்வினை செய்யினும், தீவினை செய்யினும் எந்த அளவுக்கு அவற்றினால் நம் மனதில் அகந்தை, கோபம், முதலான உணர்ச்சிகள் எழுகின்றன என்பதனைப்பொறுத்தே ஊழ்வினையின் அளவும் அமைகின்றது. நம் உடல் வழியாகவும், நம் மனம் வழியாகவும் நடைபெறும் செயல்கள் எவையும் நம்முடையவை அல்ல என்று அறிவு பூர்வமாகவும், உள்ளுணர்வு பூர்வமாகவும் எப்போது நாம் பரிபூரணமாக உணர்கின்றோமோ அப்போதுதான் மாயையின் கட்டு அறுகின்றது. அதுவே வினைப்பயன் தீண்டாமல் வழுவிவிடுகின்ற நிலையுமாகும்.

பரிபூரணமான இந்த உள்ளுணர்வு எங்ஙனம் வாய்க்கலாம்? என் செயல் என்று எதுவுமே இல்லை என்ற ஒப்புக்கொள்ளல் கொஞ்சம் கொஞ்சமாக பலமடைய ‘நான்’ என்ற எண்ணம்(Ego) பலவீனமடையத் தொடங்கி விடுகிறது. அதன்பின் நாம் கர்மங்களை நிகழ்த்த மாட்டோம். மாறாக, கர்மங்கள் கடவுள் விதித்தபடி நம் உடல் வாயிலாகக் கடந்து செல்லும். எந்தச் செயலும் ‘என்’ செயலன்று என்று புரிந்து கொள்ளும்போது எதிர்பார்ப்புக்கள் அற்றுப்போய்விடுகின்றன. இதுவே முக்தியின் முதற்படி. எதிர்பார்ப்புக்கள் இல்லாமற் போய்விடின் ஏமாற்றமும், வெறுப்பும் எங்கிருந்து உருவாகும்?

நம்முடைய செயல்களுக்குக் காரணமானவர் நாமல்லர் என்ற உண்மை புலப்பட்டுவிட்டால், அதேபோல மற்றொருவன் செய்கின்ற செயல்களுக்கும் அவனல்லன், இறைவிதியே காரணம் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். பின் நமக்கு எவ்வாறு மற்றொருவனிடம் கோபமோ, வெறுப்போ உண்டாகும்? கோபமும், வெறுப்பும் அற்றுச் சமச்சீரான நிலையில் உடைமையுணர்வு பாராட்டாமல் அன்பு செலுத்துவதே உலக வாழ்க்கையில் மனிதரனைவரும் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலை.

உலகில் அனைத்து நிகழ்ச்சிகளும் இறைவிதிப்படி மட்டுமே நடக்கின்றன. அதில் எந்த விதிவிலக்கும் கிடையாது. அவ்வப்போது மனதில் எழுந்துகொண்டிருக்கின்ற ஆசைகளும் இறைவன் இச்சைப்படியே உருவாகின்றன என்று உணரும்போது அந்த ஆசைகளில் நமக்கு ஆர்வம் எழுவதில்லை. ‘நம்முடைய விருப்பம்’ என்ற உணர்வு எழும்போதுதான் அதன் விளைவுகளைப்பற்றியுள்ள பதட்டமும், குழப்பமும் நம்மைத் தாக்குகின்றன. நம் கையில் எதுவுமில்லை என்று அறிவு பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் உணர்ந்துவிட்ட மனிதன் எல்லாக் கட்டங்களிலும் நிகழ்காலத்தில் (Present Moment) மட்டுமே சிந்தையை நிறுத்தி வாழத் தொடங்குகிறான். அவனுக்குக் கடந்தகால சம்பவங்களின் பாதிப்புக்களோ, எதிர்கால நிகழ்வுகளைப்பற்றிய ஆதங்கமோ இருக்காது. அவ்வப்போது (இறைவிதிப்படி) எழுகின்ற உணர்ச்சிகள் மீதும் ஈடுபாடு எழாது. வெறும் ஒரு சாட்சியாக அனைத்தையும் கவனிக்கின்ற ‘ஸ்திதப்ரஜ்ஞன்’ என்று பகவத்கீதை (II- 55 முதல் 72 வரை) போற்றுகின்ற நிலையை எட்டிவிடுகிறான்.

அனைத்தையும் இறைவனின் லீலையாகக் காண்பதே சரணாகதியென்பது. இறைவனின் மகத்துவத்தையும், அவனுடைய இச்சைப்படி அனைத்தும் இயங்கிக் கொண்டிருப்பதின் பெருமையையும் உணருவதற்குப் பகவந்நாமஸ்மரணம் – இறைவன் திருநாமங்களை இடைவிடாது நினைவுகூர்ந்துகொண்டிருப்பது – வழிவகுக்கிறது. ஒவ்வொரு கணமும் திருநாமங்களை நினைவுகூர்வதன்மூலம் ஒவ்வொருவிதமாக ஒவ்வொன்றையும் நிகழ்த்துகின்ற எல்லாம்வல்ல இறைவனுடைய சித்தத்தை உண்மையாக உணர்ந்து, அங்கீகரித்து நிகழ்காலத்திலேயே (Present Moment) வாழ்வது என்பது கைகூடாகிறது. இதுவே அனுக்கணமும் நாம் செய்கின்ற சரணாகதியாகும். அத்தகைய பக்தனின் மனதில் வெறுப்போ, துயரமோ, கோபமோ, பயமோ, பதட்டமோ, குற்ற உணர்வோ அமைவதற்கு எந்தக் காரணமும் இல்லாமல் போய்விடுகின்றது. இயல்பான நிலையில் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அனைத்தையும் இறைவனின் விளையாடலாக, இறைமயமாகவே உணர்வதே அகண்டமான தியானமும், பிரார்த்தனையுமாகும். இறைவனின் லீலைகளிலும், படைப்புக்களிலும் நன்றியுணர்வோடு கூடியுள்ள ஒரு தன்மையை வளர்த்துக் கொள்கின்ற மனிதன் கருணைக்கடலான இறைவனின் நிரம்பிய அருளுக்குப் பாத்திரமாகிறான். இதற்கு உசிதமான வழி இவ்வுண்மைகளை நன்றாக ஆராய்ந்து, அறிந்து, புரிந்து, பின் செய்யும் நாமபாராயணமே.

இக்காலத்தைச் சேர்ந்த தத்துவ சிந்தனையாளர்களான ஸ்ரீ ரமேஷ் பல்சேக்கர், ஸ்ரீ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற மெய்ஞ்ஞானிகளுடைய கருத்துக்களின் அடிப்படையில் ஆராய்ந்து அறிந்த மேற்கூறிய கர்மசித்தாந்தக் கொள்கையே சரணாகதித் தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்த இங்கே எடுத்துரைக்கப்பட்டது. பக்தசிரோமணியான பூந்தானத்தின் படைப்பிலும் இந்தக் கொள்கைகளின் சாராம்சம் இழையோடுவதை நாம் அறியலாம். பலனை எதிர்பார்க்காமல் கர்மத்தைச் செய்யத்தூண்டும் பகவத்கீதை உணர்த்துகின்ற உண்மையும் இதுவேதான். இடைவிடாத நாமஸ்மரணம் எல்லாக் காலங்களிலும் இறைவன் இச்சைப்படியே எல்லாம் நிகழ்கின்றது என்று நம்மை இடைவிடாது நினைவூட்டும் வகையில் அமையும்போது வினைப்பயன் நம்மைத் தீண்டாது அகன்று விடுகிறது என்பதையே ஞானப்பானையும் பறைசாற்றுகிறது.

மலையாள மக்களிடையே மிகுந்த வழக்கிலுள்ள இந்நூல், சிறப்பாக குருவாயூரில் குடிகொண்டுள்ள பரமபரம்பரனும், கலியுக வரதனுமான கண்ணபிரானிடம் பக்தியைக் கூட்டுவதற்கும், ஹரி நாம உச்சாரணம் ஒரு நல்லொழுக்கமாகக் கடைப் பிடிப்பதற்கும் தகுந்த சாதனமாகக் கருதப்பட்டு இன்றும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தமிழில் ஞானவிருத்தமாகப் பாவடிவில் மொழிபெயர்த்து, தெளிவுரையுடன் தமிழறியும் இறையன்பர்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

– உ.இரா.கிரிதரன்.

ஞான விருத்தம்

பரம்பொருளையடைய ஞானமார்க்கத்தைக் கடைப்பிடிப்பது மிகக்கடினமென்றும், கருமத்தின் போக்கு எளிதில் அறியக்கூடியதன்றென்றும் வியாசமுனிவர் பகவத்கீதையில் கூறியுள்ளார். கருமத்தின் கதியை உணரவும், பந்தம் நீங்கிப் பரமாத்மாவை அடையவும் சிறந்தவழி இறைவன் நாமங்களை உச்சரிப்பதே என்று பாகவத புராணத்திலும் கூறப்பட்டிருக்கிறது. பக்தி இயக்கத்தின் பிரமாண நூலென்று கருதப்படும் பாகவதத்தில் பதினொன்றாம் காண்டத்தில் உத்தவர் சாமானிய மக்கட்கு யோகம் கருமம் முதலியவை அனுட்டிப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். ‘காற்றையுண்டு ஆசையையடக்கி மனநிலையொருமை பெற்ற துறவியர் உன் பரவுருவையடைகிறார்கள். வினைகளின் உந்துதலால் உழலும் நாங்கள் உன் மெய்யடியாரோடு சேர்ந்து, உன் திருநாமங்களை உச்சரித்துக்கொண்டே தாண்டமுடியாத இப்பிறவிப்பெருங்கடலை எளிதாகக் கடந்துவிடுகிறோம்’ என்று உத்தவர் கண்ணனிடம் கூறுகிறார். பக்தியோகமே பகவானையடைய சுலபமான வழியென்று பாகவத புராணத்தில் பலவிடங்களில் பறைசாற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, கலியுகம் பக்தர்களுடைய யுகமாகையினால் மற்ற யுகங்களில் பிறந்தவர்கள் கூடக் கலியுகத்தில் மறுபடியும் பிறக்க விரும்புகிறர்களாம். கலிகாலத்தில் இறைவனது நாமசங்கீர்த்தனத்தாலேயே எல்லா நன்மைகளும் பயக்கின்ற காரணத்தால் சான்றோர்கள் கலியுகத்தையே சிறப்புற்றதாகப் போற்றுகின்றனர். கிருதயுகத்தில் தியானத்தாலும், திரேதாயுகத்தில் வேள்விகளாலும், துவாபரயுகத்தில் அருச்சனையாலும் கிடைக்கக்கூடிய பயனைக் கலியுகத்தில் இறைவன் நாமங்களை ஜபிப்பதால் அடையலாமென்று தெள்ளத்தெளிவாகப் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அத்தோடன்றி, இவ்வுலகில் சாதிபேதமின்றி மனிதர்களாகப்பிறந்த எவரும், பிரம்மச்சரியம் முதலான நான்கு வாழ்க்கை நிலைகளிலும் தடையின்றி முக்தியடைய எளிதான வழி நாமகீர்த்தனமேயன்றி வேறில்லையென்றும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றது.

(எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் )

சீரோடுதேசிகனி னேராளமானவரு
ளாலேநம்நாவிலென்றும்
சோராதுவாழ்வுய்ய நாராயணன்நாமம்
நாளும்நிறைத்துவைப்போம்
நாராயணாமுகுந் தாமாதவாபரந்
தாமாதயாமூர்த்தியே
பாராதியானவைக் காதாரமானபர
மூலாதிதேவவாழி!

(தேசிகன் – குருநாதன்; சோராது – தளர்வுறாது; பாராதியானவை – பூமி முதற் கொண்டுள்ள ஐந்து பூதங்கள்)

சிறப்போடு நம்குருநாதனின் அளவற்ற பெருங்கருணையால் தளர்வுறாது வாழ்க்கை முன்னேற்றமடைய நாராயணன் நாமத்தை நம்முடைய நாவில் நிறைத்து வைப்போமாக. (எவ்வாறெனில்) நாராயணனே! முகுந்தா! மாதவா! பரந்தாமா! தயாமூர்த்தியே! பூமிமுதலான ஐம்பூதங்களுக்கும் ஆதாரமான பரமூலமே! ஆதிநாயகா! நீ வாழி (என்று).

(வாழ்வுய்ய நாராயண நாமபாராயணமே கைக்கொள்ளவேண்டிய பணி என்று தன் நூற்பயனை முதற்பாவிலேயே ஆசிரியர் உணர்த்துகிறார். வினைகளற எக்காலத்திலும் நாராயண நாமத்தைச் சொல்ல வேண்டியதன் அவசியத்தைத் திருமங்கை ஆழ்வாரும் கூறியுள்ளார்:-

துஞ்சும்போதழைமின்; துயர்வரின் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடைய வினைக்கு
நாராயணாவென்னும் நாமம்.
 

(பெரியதிருமொழி – 9.4.2 )

 

இதுநாள்வரைக்குமனு பவமானசுகமெலாம்
இனியுமொருமுறைவந்திடா
புதிதாகநாளைமுதல் வரவேஇருப்பவையை
அறியவொருவழியுமிலையே
விதிபோலவேகாணு மிக்காயமெந்நேரம்
வீழுமென்பதையுமறியோம்
அதிவேகமாம்கால கதியில்லகப்பட்டு
சிதிலமாகிடுமனைத்தும்

(காயம்- உடல்; சிதிலம்- நாசம்)

இந்தநாள்வரை நாமனுபவித்த சுகங்களை அதேபோல மறுபடியும் ஒருமுறை அனுபவிக்க ஆசைப்பட்டால் அது நடக்காது. அவ்வாறே, நாளைமுதல் நமக்கு என்ன நிகழவிருக்கிறது என்பதையும் எந்த மானிடனாலும் முன்கூட்டியே அறியவும் இயலாது. நமக்கு வாய்த்திருக்கிற ‘நான், எனது’ என்ற தனித்தன்மை பாராட்டும் மனதோடுகூடிய இந்த உடலானது விதிவினையால் எந்த நேரத்தில் விழுந்து நாசமடையும் என்பதையும் நாம் திட்டவட்டமாக அறியவல்லோம். உயிர்களனத்தும் ஒன்றுவிடாது அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கின்ற காலவெள்ளத்திற்சிக்கி நாசமடைந்துகொண்டே வருகின்றன என்பதுமட்டும் உண்மை.

(நேற்று, நாளை என்ற இரண்டு காலநிலைகளையும் உணரமுடியாமல் இருப்பதே இந்த ஜன்மத்தின் நிலைமைக்கும், தருமமற்ற பல செயல்கள் தழைத்தோங்கியிருப்பதற்கும் காரணம் என்று சொல்லலாம்.)

நின்றபிராணன் கழலும் முன்னே
நெஞ்சமே நினையாய்
சென்ற பிராயம் வம்பே சென்றதால்

(அழகர் அந்தாதி -6)

 

கண்ணாரவேகண்டு முன்னேயிருந்தவரைக்
காணாமலாக்கிவிடுவாய்
பொன்னானபல்லக்கி லோரிருதினத்திலொரு
புல்லனையுமேற்றிவைப்பாய்
மன்னாதிமன்னனின் வண்டோளில்சுமையேற்றி
மண்மீதுஅலையவிடுவாய்
என்னேயென்னைய்யநீ யென்னேரமென்செய்வை
யென்றார்கணித்துரைப்பார்!

(புல்லன் – அற்பன்)

(இது இறைவனிடம் கூறுவது)

கண் நிறையக்கண்டிருந்த மனிதரை எதிர்பாராத வேளையில் மரணம் கொடுத்துக் காணாமலாக்கி விடுவாய். ஓரிரண்டு தினங்களில் அறிவீனனான ஒரு அற்பனையும் பொன் பல்லக்கிலேறும் அளவில் தனவந்தன் ஆக்கிவைப்பாய். மன்னாதிமன்னனாக இருந்த வீரபராக்ரமசாலியையும் நிலைதாழ்த்தித் தோளில் மூட்டையும் சுமந்து பிச்சையெடுத்துத் திரியும் நிலைக்குக் கொண்டுவந்துவிடுவாய். அப்பனே! நீ எப்போது என்னென்ன செயல்கள் செய்வாயென்று எவரால் கணித்துரைக்க முடியும்?

முடியுடைவேந்தர்கள் எல்லாம் தமது காலிலே வணங்குமாறும், இடிபோன்று முரசங்கள் இயம்பவும் வாழ்ந்த பேரரசர்கள் கூட மண்ணோடு மண்ணாக அழிகின்றனர் என்பதனையே நம்மாழ்வாரும் கூறுகின்றார்.

அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவார்கள் ஆதலின்நொக்கென
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ

(திருவாய்மொழி – 4.1.3.)

 

கண்டேபுரிந்திடுவர் நன்றாகவேசிலரும்
கண்டுமறியாதார்பலர்
உண்டானவையாவும் மெய்யானதல்லவென
முன்பேயுணர்ந்தவர்சிலர்
கொண்டாடுமானிடக் கோலம்படைத்தவர்க
ளெல்லோருமல்லரொருபோல்
உண்டாமனேகவிதம் உண்டானமனமதால்
ஒவ்வொருவரொவ்வொருவிதம்

இறைவனின் விளையாடல்களான இதுபோன்ற நிகழ்ச்சிகளைக்கண்டு சிலர் தத்துவத்தைப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை மக்களும் இதையெல்லாம் கண்டுகொண்டிருந்தாலும் ஒன்றும் புரிந்து கொள்ளாதவர்களாகவே இ¢ருக்கிறார்கள். இவ்வுலகத்தில் உண்டானதும், நாம் காண்கின்றதுமான ஒன்றுமே நித்தியமானதும், சத்தியமானதுமன்று என்ற உண்மையைச் சிலர் மட்டுமே உணர்கிறார்கள். ஏனெனில், மனிதராகப் பிறந்ததனால் மட்டும் எல்லோரும் ஒரேபோல ஆகிவிடுவதில்லை. வினைப்பயனால் உண்டாகின்ற அவரவருடைய மனதின் தன்மை ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதனால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கிறான்.

(ஆனால் கர்மவாசனைக்கொப்ப இயங்கும் மனதையும் கூட மனிதனால் தன்வாழ்நாளிலேயே சீர்படுத்தி நேராக்கமுடியும் என்பதுதான் மற்ற உயிர்களோடு ஒப்பிடுகையில் அவன் பெற்ற பெரும் பேறு. அது எவ்வாறு முடியும் என்பது பின்னால் விளக்கப்படும்).

 

தானாகவேமெய்யை யெம்மானிடருமறிந்
தாராயவேசெம்மையாய்
நானாவிதத்திலும் வெகுசாத்திரங்களும்
விரிவாகப்பறைசாற்றிடும்
கோணாமற்கருமமாம் மார்க்கத்திலுற்றோர்க்கு
மிகுகருமவிதிநூல்களும்
வாணாளெலாம்கற்க வேதாதிநூல்களும்
யோகசாத்திரமுமுண்டு

ஒவ்வொருமனிதனும் தானாகவே உண்மையை அறிந்து உணரவே பலவிதத்திலுள்ள மெய்யறிவுச் சாத்திரங்கள் உலகத்தில் தோன்றியிருக்கின்றன. அவரவருடைய விருப்பத்திற்கும், தன்மைக்கும், மனப்பக்குவத்திற்கும் ஏற்றவிதத்தில் அநேகம் நூல்கள் உள்ளன. கருமமார்க்கத்திலுற்றோர்க்கு கர்மசாத்திரங்களும், ஒருமனிதன் வாழ்நாள் பூராவும் கற்று உணருமளவில் விஸ்தாரமாகவுள்ள பல பிரிவுகளோடுகூடிய வேதநூல்களும், யோகசாத்திர நூல்களும் உள்ளன.

(வேள்வி முதலான அனுட்டானங்களில் ஈடுபட்டு ஸ்வர்க்கப்பேறு விரும்புகின்றவர்களுக்காக யாகாதி கர்மங்களை விளக்குகின்ற கர்மசாத்திர நூல்களும், பிரம்மச்சர்யம் முதலான ஆசிரம தர்மங்களை விரிவாக விளக்குகின்ற மனு முதலான மகாத்மாக்களால் செய்யப்பட்ட தர்மசாத்திர நூல்களும், பிரகிருதி, புருடன் என்று வேறுபட்டு இந்தப் பிரபஞ்சமும், ஆத்துமாவும் பரிணாமமாகியிருப்பதையுணர்த்தும் சாங்கியசாத்திர நூல்களும், சம்சாரக்கடலில் அமிழ்ந்திருக்கிற மனிதகுலம் கடைத்தேறப் பதஞ்சலிமுனிவர் இயற்றிய யோகசாத்திரமும், அதனுடைய தொடர்பாகவுள்ள பல நூல்களும் என எண்ணிறந்த நூல்கள் மனிதருடைய மனப்பாங்கைச் சீரமைத்து முடிவில் முக்திநிலையடைய வழிகோலுகின்றனவெனினும் அவையெல்லாமே மிகக்கடினமானவையும், தகுந்த குருவின் மூலமாக மட்டுமல்லாது படித்தறிந்துகொள்ள இயலாதவையும் ஆகும். ஆனால் சாத்திரங்களைக் கற்றறிந்து கொள்ள நேரமில்லாமல் எந்நேரமும் கர்மத்திலாழ்ந்திருக்கின்ற எல்லோரும் கடைப்பிடித்துக் கடைத்தேறுவதற்கான ஒரு சுலபமான வழியும் உள்ளது.)

 

எந்நாளுமேயிந்த சம்சாரவெந்தீயில்
நலிகின்றநாமுய்யவே
சொன்னார்களேயரிய பரமார்த்தமேபெரிய
குணசாந்தரானமுதியோர்
இந்நாளிலெளிதாக வெல்லோருமேகடைத்
தேறவேயொருவுபாயம்
பொன்னானவழியதனை யெந்நாளுமேபேணி
செவியீந்து கேட்டிடுவிரே

(குணசாந்தர்- சீரிய அமைதிப்பண்புகள் நிறைந்தவர்)

சம்சாரம் என்ற பெருந்தீயில் அல்லலுற்றுக்கொண்டிருக்கிற நாம் கடைத்தேற யதார்த்தமான தத்துவத்தைக் கருணைநிறைந்த சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சுலபமாக எல்லோருக்கும் முக்தி கிடைக்க அருமையானது அந்த வழி. அதனை எல்லோரும் கவனித்துக் கேட்பீராக.

(குணசாந்தரான முதியோர் சொல்லியிருக்கின்ற அந்தப் பரமார்த்தம் இறை பக்தியும், அதைப்பெருக்குவதற்காகச் செய்யவேண்டிய நாமபாராயணமுமாகும். பரமார்த்தமே இறைவனும், அவனுடைய நாமமும். அவை இரண்டும் வேறல்ல. ஒலியுருவமே அது உணர்த்தும் இறையுருவம் என்பது பூர்வ மீமாம்சை சூத்திர ஆசிரியரான ஜைமினி முனிவரின் கருத்து. சொல்லும், சொல்லுணர்த்தும் பொருளும் ஒன்று என்பதனாலேயே இறைவனின் நாமமே இறைவனின் உருவம் என்பதே இத்தத்துவம்.

சொல்லினால் தொடர்ச்சிநீ சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ

என்கின்றார் திருமழிசை ஆழ்வார்)

 

தீராமலெக்கால மெல்லோரையும்ஜீவ
கதியோடுகட்டியிட்டுப்
பூராயமாகவே யெந்நாளுமாட்டுவது
கருமமென்றறிகமுன்னே
சீரோடுபெற்றவைகள் தாயாதிதாரமும்
கூடேபிறந்தவைகளும்
ஊராருமுறவுமென் றோராதனந்தமாய்
கருமவழிமுன்நடத்தும்

(பூராயம்- எல்லாம்)

விடாமல் எக்காலமும் எல்லோரையும் வாழ்க்கை முறையில் கட்டியிட்டு எந்நாளும் மொத்தமாக ஆட்டிப்படைப்பது கர்மம் அல்லது வினையேயாகும் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். செம்மையாக பிள்ளை, மனைவி, கூடப்பிறந்தவர்கள், தாயாதிகள், ஊரார், உறவினர் என்று முடிவில்லாத சொந்தங்களோடு வாழ்க்கையோட்டத்தைக் கர்மவழி முன்னின்று நடத்திச்செல்லும்.

(‘செயலின்றி எவரும் ஒருகணப் பொழுதும் இருத்தல் இயலாது; இயற்கையின் உந்தல்களால் ஒவ்வொருவரும் தாம் கருதாவிடினும் செயலுக்குத் தள்ளப் படுகின்றனர்’ என்றும், ‘இயற்கையின் குணங்களாலே எல்லாக் காரியங்களும் இயலுகின்றன; நான் என்ற அகந்தையால் மதி மறந்திருப்பவன், தானே செயலாளன் என்று கருதிக் கொள்கிறான்’ என்றும் பகவத் கீதையும் ( III. 5, 27) கூறுகிறது.

‘தாயெனத் தந்தையெனத் தாரமென மக்களென
நோய்வாய்ப்பட்டுழல்வோர்’

என்கின்றார் திருமங்கை ஆழ்வார்.

(முன்பாவில் சம்சாரவெந்தீயிலிருந்து மீளுவதற்கான எளிய உபாயம் சொல்லபோவதாகக் கூறிவிட்டு இப்போது வேறொரு விஷயம் கூறப்பட்டிருக்கிறதே என்று ஐயம் வரலாம். நோயைப் பற்றிய முழு அறிவு பெற்று பின் சிகிச்சையளித்தால் மட்டுமே பூரண குணம் உண்டாகும். சம்சாரவியாதிக்குக் காரணம் பல உருவிலுள்ள கர்மங்களென்பதையும், அவற்றை முற்றிலுமாக ஒழித்து அகற்றாது முக்தியடைவது கடினம் என்பதையும் விளக்கும் பொருட்டே கர்மத்தைப்பற்றிய விவரணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது).

 

நன்றாகமுன்காணு மிப்பாரிலெங்கணும்
குன்றாதிலங்குசோதி
ஒன்றோடுமொன்றாத ஒன்றையும்கொள்ளாத
இன்றியமையாதவத்து
ஒன்றாகவேயொன்றை யென்றுமறிவோரறிவி
லொன்றாய்த் துலங்கிநின்றும்
ஒன்றுள்ளும் காணாத மாந்தர்க்குஒன்றாலும்
புரியாதபுதிராகியும்

(வத்து- பொருள்)

நாம் ஐம்புலனால் அறிகின்ற இவ்வுலகில் எங்கேயும் குறைவிலாது ஒரு ஞானச்சுடரொளி நிறைந்து நிற்கின்றது. ஆனால் அது ஒன்றிலும் சேராமலும், மற்றெந்தப் பொருளும் அதையடைய முடியாமலும் அதே வேளை இந்தப் பிரபஞ்சம் நிலைத்து நிற்க மிகவும் இன்றியமையாததாகவும் விளங்குகிறது. இறைவன் என்கிற அந்தத் தனிப்பொருளே அனைத்துமாக நிறைந்திருப்பது என்று பக்தியால் உணர்கிறவர்களுடைய அறிவில் ஒரேபோலத் தெளிவாக ஒளிர்வதாகவும், மெய்யான இந்த உண்மையை உலகப் பொருட்களில் காணாமல் பொய்யான வெளித்தோற்றத்தை மட்டுமே உண்மையென்று நம்பியிருப்பவர்களுக்கு எவ்விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் அது விளங்குகிறது.

(உலகம் யாவையும், அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவனே அவற்றின் உள்ளும் புறமும் பரவி நின்று அனைத்தையும் காத்துக் கருணைபுரிந்து வருகின்றான். பகவத்கீதையிலும் (IX- 4) ‘வெளிப்படத் தோன்றாதவாறு யான் இந்தப் பேருலகெல்லாம் பரவியிருக்கிறேன்; எல்லா உயிர்களும் என்னுள்ளே அடங்கியிருக்கின்றன, ஆனால் யான் அவற்றுள்ளே அடங்கியிருக்கவில்லை’ என்று இறைமொழி கூறப்பட்டிருக்கிறது. இறைவன் ஒன்றிலும் ஒன்றாதிருக்கும் தன்மையை

கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்

(திருவாய்மொழி -1.6.5.)

என்று நம்மாழ்வாரும் இயம்புகின்றார்.

எங்கும் வியாபித்திருக்கின்ற அந்த இறையொளியை மயர்வற மதிநலம் பெற்ற அடியார்கள் மட்டுமே சரியான விதத்தில் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ‘எல்லா உயிர்களிலும் என்னைக் (பரமாத்மாவை, பிரம்மத்தை) காணுவோன் என்னை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை, நான் அவனை விட்டு ஒருபோதும் நீங்குவதும் இல்லை’ என்கிறது பகவத் கீதை (VI-30). ஆனால் ஐம்புலன்களின் ஆளுகைக்குட்பட்டு மாயை மயக்கத்தில் கிடக்கும் மக்களால் சத், சித், ஆனந்தம் என்ற குணங்களோடு கூடிய பரம்பொருளை உலகிலும், உலகில் உள்ள உயிர்களிலும் உணர முடிவதில்லை.

நீயே உலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும் அண்டத்து இருசுடரு மாய விவை.

(நான்முகன்திருவந்தாதி -20)

என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

 

ஒன்றோடுஒன்றுவே றாகவேநின்றவையில்
ஒன்றானவுயிராகியும்
ஒன்றோடுமெஞ்ஞான்று மொருபந்தமும்அற்று
நின்றவன்பார்படைத்தான்
நன்றாகவேசத்து வரசோதமங்களை
ஒன்றாக்கியுலகிலிட்டான்
இம்மூன்றுமொன்றோடு ஒன்றாயொடுங்கவே
இல்லையென்றாகுமுலகு

இந்த ப்ரபஞ்சத்தில் ஒன்றோடொன்று வேறுபட்டிருக்கின்ற எல்லாப் பொருட்களிலும் ஒரேபோல உள்ளோடும் ஜீவ சைதன்யமாக, உயிருருவாக இருந்து, ஆனால் அதேவேளையில் எவ்வுயிர்களோடும் எந்த ஒட்டுதலும் இல்லாமல் தனித்து நிற்கின்ற பரம்பொருளே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்திருப்பது. அது மட்டுமன்று, இவ்வுலகத்தின் இயக்கத்திற்காகவும், உலக உயிர்களின் வாழ்க்கை நிலைக்காகவும் சத்துவம், இரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் ஒன்றோடொன்று பலபடியாக உலகத்தில் சேர்த்ததும் அப்பரம்பொருளே. அவை மூன்றும் ஒன்றுக்குள்ளொன்றாகி ஒடுங்கும்பொழுது உலகமும் ஒடுங்கிவிடுகிறது.

(உயிரினங்களின் அந்தர்யாமியாக, ஜீவஸ்வரூபமாக விளங்குவது பரம்பொருளே என்பதில் ஐயமில்லை. ஈருடல் ஓருயிர் என்று காதல் மிகுதியால் பிதற்றிக் கொஞ்சிக்குலாவிய காதலியும் கூட உயிர் பிரிந்த காதலன் சடலத்தைக்கண்டு அஞ்சி நடுங்குவாள் என்பதே உண்மை. ஆதலினால் மாந்தர் விரும்புவது உயிரையேயன்றி உடலையன்று என்பது திண்ணம். வித விதமான மலர்களைக் கூட்டிச் சேர்த்திருக்கிற சரடு போல எல்லா சராசரங்களிலும் கண்ணுக்குப் புலப்படாமல் வியாபித்துச் சலனத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பது ஜீவஸ்வரூபமான இறையொளியே. ஆனால் நிர்குண, நிராமயமான பரம்பொருள் தன் மாயாசக்தியால் பலவாறான ஜீவஜாலங்களாகப் பரிணமித்து சத்துவகுணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற மூவகைக் குணங்களையும் உண்டாக்கி அதனால் இந்த ப்ரபஞ்சமும், அதிலுயிர் வாழும் ஜீவராசிகளும் ஒன்றுக்கொன்று குணத்தால் மாறுபட்டனவாகத் திகழச்செய்தது. ஒரு தாய் பெற்ற இரட்டைக் குழந்தைகளானாலும் கூட அவற்றிற்கிடையில் மிகுதியான குண வேறுபாடுகளிருப்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை. மாயையின் ஆதிக்கத்தால் உயிர்களனைத்தும் தாம் பரம்பொருளிலிருந்து வேறுபட்ட, தனித்தன்மை கொண்ட ஜீவர்கள் என்ற அறியாமையில் (அவித்யையில்) ஆண்டிருப்பதனால் இவ்வுயிர்களுடன் ஒரு பந்தமுமற்றவனாக இறைவன் தோற்றமளிக்கிறான். ப்ரளய காலத்தில் சத்துவ, இரஜ, தமோ குணங்கள் ஒன்றோடொன்றாக ஒடுங்கிவிட உலகும் உயிரினங்களும் இல்லையென்றாகி இறைவனுடன் ஒன்றிவிடுகின்றன.

தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மைநின்கண் நின்றத

(திருச்சந்த விருத்தம் -10)

என்கிறார் திருமழிசை ஆழ்வார்.)

 

இப்பார்படைத்தவுட னிட்டானுயிர்கள்மேல்
இதமாகமூவினைகளை
தப்பாதநல்லவினை யொவ்வாததீயதிவை
யொருசேர்ந்ததென்றுமூன்றும்
அப்பாவிசீவர்களை யெப்போதுமேகட்டி
யிடவேவினைக்கயிறுகள்
எப்பேதமில்லாத முப்பாசம், ஒன்றுபொன்
னொன்றிரும்பொன்றுகலவை

இவ்விதமான முக்குணக் கலவையோடு அவித்தையை நிரப்பி இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் அந்தந்தக் குணங்களுக்குச் சேருகிறபடி மூன்றுவிதமான கர்மங்களையும் உயிர்கள்மீது ஏவினான். அவை இழிவு தராத நல்வினை, தகாத தீவினை, இவையிரண்டும் ஏற்றக்குறைவாகக் கலந்த கலவை வினை என மூன்று வகைகளாகும். அப்பாவிகளான உயிரினங்களை எல்லாக் காலமும் வாழ்க்கைமுறையோடு பிணைப்பதற்கென்றே இந்த வினைக்கயிறுகள் உருவெடுத்தன. இவற்றில் ஒன்றுக்கொன்று மேன்மையானது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. நல்வினையைத் தங்கத்தாலான சங்கிலியோடும், தீவினையை இரும்பினாலான சங்கிலியோடும், நல்லது தீயது கலந்த வினையைக் கலப்பு உலோகத்தாலான சங்கிலியோடும் ஒப்பிடலாம். ஆனால் மூன்றுமே பிணைக்கின்றவைகள்தாம்.

(சத்துவகுணம் நிறைந்த புண்ணியசீலர்கள் யாகம் முதலான தர்மவிதிகளுக்கு அனுசரித்த கர்மங்களைச் செய்து மரணத்துக்குப்பின் ஸ்வர்க்க சுகம் கிடைக்கப்பெறுகிறார்கள் என்றும், ரஜோகுணம் நிறைந்த மனிதர்கள் பெண், பொன், வியாதி முதலானவைகளிலிருந்து விளைகின்ற சுக,துக்கங்களை அனுபவிக்கிறார்கள் என்றும், தமோகுணம் நிறைந்தவர்கள் செய்யத்தகாத செயல்களையும் சுகமளிப்பவை என்ற பிரமையால் செய்து கொடிய நரக வாசம் அனுபவிக்கிறார்கள் என்றும் பழம்பெரும் தர்மநூல்கள் மொழிகின்றன. இவர்கள் எல்லோருமே அவரவர் சேர்த்துவைத்த வினைப்பயனை அனுபவித்து முடித்த பிறகு மறுபடியும் பூமியிலேயே பிறந்து எஞ்சியிருக்கும் பயன்களுக்கேற்ப அநேக கர்மங்களைச் செய்யக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். இது மறுபடியும், மறுபடியும் தொடருவதால் கர்மத்திற்கு அழிவு நேரிட வாய்ப்பில்லாமல் ஆகிவிடுகிறது. அதனால் பாபம் விளைவிக்கும் தீயவினைகளைப் போலவே புண்ணியம் கொடுக்கின்ற நல்வினைகளும் மானிடருக்குக் கட்டுண்டு கிடப்பதற்குக் காரணமாகி விடுகிறது. கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியானது தங்கத்தாலோ, இரும்பினாலோ, கலப்பு உலோகத்தாலோ செய்திருப்பது கட்டுண்டிருப்பவனுடைய நிலையை மாற்றப் போவதில்லை என்பது போலவே இது.

நல்வினை, தீவினை என வரையறுக்கப்படுவது கர்மம் செய்கிறவர்களின் மனநிலையைப் பொறுத்து ஆகும். அது உடல் சம்பந்தப்பட்டதன்று. மனைவியையும், மகளையும் ஆலிங்கனம் செய்வது ஒரே உடல்தான் எனினும் மன நிலையிலுள்ள வேறுபாடே முக்கியமானது. வினைகள் செய்யும்போது பலனை எதிர்பார்த்து உண்டாகின்ற ஆசையே வினைப்பயனையும் முடிவு செய்கிறது. அதில் நல்லவினை, தீயவினை என்ற பாகுபாடு கிடையாது. ஆசையோடு கூடியிருக்கின்ற காரணத்தால் எவ்விதமான வினையும் கர்மத்தைக் கூட்டிவைக்கும் என்பது பொருள். கொடிய வினைகளாகிப் பந்தப்பட்டு நம்மை அழிக்கும் பாசத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகக் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துக்காத்த எம்பெருமானின் சந்நிதியை அடைவதே மெய்த்திறம்.

கருமவன் பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலையெடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலையதுவே அடைவது திறமே

 (திருவாய்மொழி – 2.10.4.)

என்று நம்மாழ்வாரும் கூறியிருக்கின்றனர்.)

 
மீறாதுபிரமன்முதல் ஈயோடெறும்புவரை
  யோயாதுவினையிலுற்றோர்
போராடிவினையுடைத் தேதோவிதம்தப்ப
  மாளாதுபிரமனார்க்கும்
நேராகதிசையெண்மர் பரிதிமதிதாரகைகள்
  ஆங்காங்குஅவ்வவ்விதம்
தீராதகருமவினை யாலானதளையிட்டுத்
திகழுவார்ஊழிகாத்து

(திசையெண்மர் – இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என எட்டுத் திக்பாலர்கள்; ஊழி காத்து – உலகைப் பாதுகாத்து, அல்லது ஊழிக்காலத்தை எதிர்பார்த்து)

பிரம்மன் முதல் ஈ, எறும்பு, முதலான சிறு பிராணிகள் வரையிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஓயாது கர்மத்தின் ஆதிக்கத்தில் உள்ளவரே. இந்த கர்ம பந்தத்திலிருந்து ஒருவிதமாகப் போராடித் தப்பி வெளியேறுவது பிரம்மதேவனுக்கும் கூட எளிதான செயலன்று. அக்காரணத்தாலேயே எட்டுத் திசைகளும், சூரிய சந்திரர்களும், நட்சத்திரங்களும் அவரவருக்கு விதித்தபடி கர்மத்தால் விலங்கிடப்பட்டு ஆங்காங்கே இருந்துகொண்டு உலகத்தைப் பாதுகாத்துக்கொண்டு, ப்ரளயகாலத்தை எதிர்பார்த்துக் காலம் தள்ளுகின்றனர்.

(பரம்பொருளின் படைப்பில் மிக உச்சப்படியில் இருக்கின்ற தேவர்களில் முதல் நிலையில் இருப்பது பிரம்மதேவன். அந்தப்பிரம்மனும் வினைத்தளையிலிருந்து தப்பமுடியாத காரணத்தினாலேயே ப்ரளயகாலம் வரை தொடர்ந்து படைப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றானென்றும், திசைகள் இடம்மாறாமல் அசையாதிருப்பதும், சூரியசந்திரர்கள் நிரந்தரமாக நகர்ந்து உலகத்தைக் காத்து வருவதும் கர்ம பந்தத்தினாலேயே என்றும் கற்பனை நயத்தோடு விளக்கப் பட்டிருக்கிறது.)

 

சிறுகாலமுயிர்வாழும் வெறுமற்பரானநாம்
  வினைகள்பலவாறுசெய்து
விரைவாய்க்கருப்பையி னுள்ளேறிவெளிவந்து
  விளையாடல்தொடருகின்றோம்
தரமானநிலையும்வெகு இழிவானகதியும்நம்
  கருமத்தின்விதிபோலவே
அறிவாளியும்பெரிய தனசாலிவீரரும்
வினைபற்றியலையுவோரே

 சிறுகாலம் மட்டுமே உயிர்வாழ்கின்ற அற்பஜீவிகளான நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்ற கர்மங்களின் விளைவாக நிரந்தரமாக அன்னையின் கர்ப்பப்பையினுள் நுழைவதும், உலகில் பிறப்பதும், இறப்பதுமான விளையாடலைத் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றோம். வாழ்க்கையில் மேன்மையான நிலையும், இழிவான நிலையும் எல்லாம் கர்மத்தின் தரத்தைப்பொறுத்தே அமைகிறது. எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், மிகுந்த தனம் படைத்தவனானாலும், வீரனானாலும் அனைவரும் வினையின் ஆதிக்கத்தில் உள்ளவர்களே.

(சூரியன் ஒருநாளும் உதிக்காமல் இருந்ததில்லை. காற்று வீசாமல் இருந்ததில்லை, தீ சுடாமல் இருந்ததில்லை. சத்துவகுணம் நிறைந்த சிரஞ்சீவிகளான தேவர்கள் கூட கர்மத்தின்வாய்ப்பட்டு உழலுகின்றார்கள் எனின் அற்பகாலம் மட்டும் வாழும் மனிதப்பிறவிகளான நம்மைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அவனவன் செய்கின்ற நல்வினைதீவினைக்கொப்ப பலவிதத்திலுள்ள உயிரினங்களின் கருப்பையில் புகுந்து பிறந்து, மறுபடியும் பலவிதமான வினைகள் செய்து மாண்டு, மறுபடியும் செய்த வினைக்குத்தகுந்த பிறவி எடுத்து, இடைவிடாது பிறப்பு, வாழ்வு, இறப்பு என்று விளையாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த வினைவிளையாட்டில் துன்பமே எஞ்சுகிறது. இன்பமாகத் தென்படுவது எல்லாம் வெறும் பிரமை மட்டுமே. இத்துன்பங்களுக்கெல்லாம் காரணம் கர்மம் என்பதும் தெளிவாயிற்று. கொடிய கர்மத்தின் பிடியிலிருந்து விடுபட்டு வினைகளின் வேரானது முற்றுமாக அறுபட்டு இறைவனுடன் கலந்து விளங்குவது எந்நாளோ என்று நம்மாழ்வாரும் வினவுகின்றார்.

முந்நீர் ஞாலம் படைத்தஎம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளைவேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?

-திருவாய்மொழி – 3.2.1.

 

நெறிகெட்டவினையினால் நரகத்திலாழ்ந்துபல
துரிதங்களனுபவித்துப்
பரிபாகமுற்றபின் நரனாய்ப்பிறந்துநல்
வினைசெய்வரேசீவர்கள்
செறிவோடுசெய்தநல் வினையீன்றபயனாலே
சுகமாய்ச்சுவர்க்கமடைவார்
முறையாய்நற்பயனெலா மறவேயொழிந்தபின்
வருவார்பிறக்கநரனாய்

(துரிதம் – இன்னல்)

தகாத தீவினைகள் செய்ததன் விளைவாக உயிர்கள் நரகத்திலாழ்ந்து பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கர்ம பரிபாகமடைந்த பின்னர் மனிதர்களாகப் பிறந்து நல்வினைகளில் ஈடுபட்டு வாழ்வார்கள். அவ்விதம் மிகுதியாகச் செய்த நல்வினைப் பயனால் சுகம் பெற ஸ்வர்க்கப்பதவியை அடைகிறார்கள். நல்வினையின் பயன் அனுபவித்து முடிந்ததும் மறுபடியும் மனிதர்களாகப் பிறக்க தயாராகிறார்கள்.

(இவ்வாறு உயிர்களை வைத்துள்ள விளையாட்டுத் தொடர்கிறது.)

 

வானுலகதேவரும் மானிடர்களாவர்பல
கோடிபாதகமிழைத்துக்
கோனுமொருகுடிலசண் டாளர்குடியில்வந்து
வீழுவானின்னலுறவே
தானவரமரராக தேவர்வெறுமரமாக
மாறுவார்வினையாற்றலால்
ஆனைமாண்டாடாகு மாடுமாண்டானையா
யாகுமேகருமவழியால்

(குடிலம் – மோசமானது; தானவர் – அசுரர்கள்; அமரர் – தேவர்கள்)

தேவர்களாயிருப்பின் கூட செய்த வினையின் காரணமாகப் பூமியில் மனிதர்களாகப் பிறக்கின்றனர். எண்ணற்ற கொடுஞ்செயல்கள் புரிந்த அரசன் மோசமான சண்டாளர்களின் குடியில் வந்து பிறந்து ஏராளமான இன்னல்களை அனுபவிப்பான். வினையாற்றலால் அசுரர்கள் தேவர்கள் ஆவார்கள். தேவர்கள் மரங்களாவார்கள். யானை இறந்து ஆடாகப் பிறக்கும். ஆடு இறந்து யானையாகப் பிறக்கும்.

 

வெறிநாயிறந்துபெரு மகனாய்ப்பிறக்குமொரு
நரிசெத்துநாரியாகும்
பறவாதயீசெத்துக் கழுகாய்ப்பிறக்கும்சிறு
பூச்சியொருநாச்சியாகும்
குறையாத்தனம்கொண்டும் கருமியானவனுக்குக்
கிருமியவதாரயோகம்
அறிவாவதல்லயிவ் விதமாகவுள்ளநம்
மிறையோனின் விளையாடல்கள்! 

(நாரி – பெண்மணி)

வெறிநாய் செத்து ஒரு பேராளனாய்ப் பிறக்கும்! நரிசெத்துப் பெண்மணியாய்ப் பிறக்கும்! இறக்கையற்றுப் பறக்கவியலாது தவிக்கின்ற ஈ செத்துக் கழுகாகப் பிறக்கும்! சிறுபூச்சி செத்து அரசியாகப் பிறக்கும்! தீராத செல்வம் படைத்திருந்தும் வஞ்சனையே செய்பவனுக்குக் கிருமியாகப் பிறக்கவே யோகம் இருக்கும்! இவ்வாறு உயிர்களின்பால் வினையை ஏவி அதன் பலனையும் நல்கும் இறைவனின் விளையாடல்கள் எவராலும் புரிந்துகொள்ள இயலாதவை!

(கர்மவிளையாட்டாகின்ற நாடகத்தை இயக்கும் இறைவன் எவ்வாறு தாழ்ந்தவனை உயர்ந்தவனாகவும், உயர்ந்தவனைத் தாழ்ந்தவனாகவும் மாற்றுகிறான் என்பதையும் மூன்றாவது பாவிலேயேகண்டோம். அது இனியும் நயத்துடன் விவரிக்கப்படுகின்றது. பிறவியில் தேவர்களான தனதபுத்திரர்களை தேவரிஷியான நாரதரை விட்டு மருதமரங்களாகப் போகுமாறு ஸ்ரீமந்நாராயணன் செய்தார் என்றும், பிறப்பால் அசுரர்களான பிரஹலாதன், மஹாபலி முதலானோரையும் எம்பெருமான் அநுக்ரஹித்து தேவபதவிக்கு உயர்த்தினார் என்றும் புராணங்கள் வாயிலாக அறியலாம்.

அவரவர் செய்த வினைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் வெவ்வேறு உயிர்களாகப் பிறந்து மறுபடியும், மறுபடியும் தொடர்ந்து வினைகளில் ஆழ்ந்துகொண்டிருக்கையில் இங்கே இறைவன் ஆற்றல் என்ன இருக்கிறது? எல்லாம் கர்மத்தின் செயலல்லவா! என்று சந்தேகம் வரலாம். கர்மம் என்பது ஒரு காரணம் மட்டுமே. இறைவனின் விளையாட்டாலேயே உயிர்களுக்குப் பலவிதமான கர்மங்கள் விளைகின்றன. ஜீவாதாரமான கடவுளின் தூண்டுதலால்தான் வினையும், வினைப்பயனும் செயல்படுவது. நேர்த்தியாகச் செய்யப்பட்ட ஒரு தங்கநகையைக் காணும்போது அதைச்செய்த பொற்கொல்லனின் திறமையைப் புகழ்வார்களேயன்றி தங்கத்தின் மேன்மையைப்பற்றிப் பேசமாட்டார்கள். ஜடப்பொருளான தங்கத்திற்கு உருமாற்றம் செய்தது ஜீவனுள்ள பொற்கொல்லன் என்பது போல ஜடமான கர்மத்திற்குத் தக்கதான பலனைக் கொடுப்பது சைதன்ய ஸ்வரூபனான இறைவனே. இந்திரஜாலக்காரனுடைய பேராற்றல் என்பதுபோல் மாயையை இயக்கும் இறைவனுடைய லீலையே இவையனைத்தும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.)

சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்
காதல் செய்யாதுன் கழலடைந்தேன்

பெரிய திருமொழி – 6.1.9.

என்கின்றார் திருமங்கை ஆழ்வார்.

 

மேலேயிருந்துகீழ் பின்கீழிருந்துமே
லோயாதுசீவரலைவார்
காலாதிகாலமா யிப்பூமியில்நின்று
கருமபலனேற்றுவாழ்வார்
மீளாதுகதைதீர்ந்து நேராகமறுவுலகில்
பலனுண்டுவாழ்ந்துமீள்வார்
நாள்தோறும்பொருள்சேர்த்து மறுவூர்சென்றத்தனையும்
விற்றுத்தின்பார்போலவே! 

பூமியில் இருந்து வினைப்பயனை அனுபவிக்க மேலேயும், வினைப்பயனை உய்த்து மறுபடியும் பூமியை நோக்கியும் ஓயாமல் ஜீவர்கள் அலைந்து கொண்டேயிருப்பார்கள். அநேக காலமாக இவ்வாறு தொடர்ந்து பூமியில் வாழ்ந்து, கர்மபலனைச் சம்பாதித்து, தப்பாமல் இறந்து, பின் மறுவுலகில் சென்று, ஈட்டிய கர்மபலன் தீரும்வரை ஸ்வர்க்கமோ, நரகமோ அனுபவித்து, மறுபடியும் கர்மபலன் ஈட்ட பூமிக்கு வருவார்கள். ஒரு ஊரிலிருந்து பொருள் சேர்த்து மற்றொரு ஊருக்குச் சென்று அப்பொருட்களை விற்றுத் தின்பது போலவாகும் இது.

(மறுவுலக வாழ்வு – அது ஸ்வர்க்கமோ அல்லது நரகமோ, எதுவாகயிருப்பினும் – இப்பூமியில் செய்கின்ற கர்மங்களினாலேயே அமைகிறது என்பது மறுபடியும் வலியுறுத்தப்படுகிறது. பூமியிலிருந்து மட்டுமே கர்மங்களை சம்பாதிக்கமுடியும் என்பது முன்னமேயே சொல்லப்பட்டது. இவ்வாறு பூமியில் வினையின் விளைவுகளைச் சம்பாதிப்பதும், மறுவுலகில் சென்று செய்த வினைகளின் தராதரத்திற்கேற்பப் பலனை அனுபவிப்பதும், அது தீர்ந்ததும் மறுபடியும் பூமிக்குவருவதும் என ஜீவர்களின் அலைச்சல் கோடானுகோடி காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறதாம். மானுட ஜன்மம் எடுத்தும்கூட அது முக்திப்பேற்றினால் பயனடையாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலென்பதும், ஆயினும் முக்தி பெறும்வரை பூமியை நோக்கியுள்ள வரவு தீராது என்பதும் இதிலிருந்து தெரிய வருகிறது. கர்மங்கள் மூலமாக ஸ்வர்க்கம் முதலான பேறு அடைவதற்கு என்பதுபோல கர்ம நாசம் செய்து மோக்ஷப்பேறு பெறுவதற்கும் உகந்த இடம் பூமியே என்பது அடுத்த பாவில் விளக்கப்படுகிறது.)

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை
மறப்பொன்று இன்றி என்றும் மகிழ்வேனே.

– (திருவாய்மொழி – 2.9.5.)

 

எக்காலமும்வினைகள் முட்டாதுவிளையுநிலம்
இப்பூமியென்பதுணர்வீர்
அக்கோடுவினைகளற இப்பேருலகமன்றி
எப்பூமியும்வேறிலை
எக்கேடிலாத்தொண்ட ரறவோர்க்கும்மாயையிற்
சொக்கிமுக்காடுவோர்க்கும்
எக்காமமும்நீங்க யெல்லாம்கொடுப்பவள்
இப்பூமியன்னையன்றோ

(முட்டாது – குறையாது; அக்கோடு – வேரோடு)

எல்லாக்காலமும் கர்மங்கள் தடையின்றி உற்பத்தியாகிக்கொண்டேயிருக்கின்ற விளைநிலம் இந்தப் பூமிதான் என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு விளைகின்ற கர்மங்கள் வேரோடு அற்றுப்போகவும் இவ்வுலகமல்லாது வேறு இடம் கிடையாது. பந்தமறுத்துப் பரம்பொருளை நாடுவோரான தொண்டர்களுக்கும், துறவிகளுக்கும், மாயையில் மயங்கி அது காட்டுகின்ற ஜாலங்களில் முழுகிக் கிடப்பவர்களுக்கும் அவரவர் தேவைகளுக்கேற்பச் சூழ்நிலைகளையும், வசதிகளையும் ஆசைதீரக் கொடுப்பவள் நம் அன்னையாகின்ற இந்தப் பூமியே.

(நல்ல கர்மங்கள் பலசெய்து ஸ்வர்க்கத்தில் சுகமனுபவித்தாலும் சிறிதளவேனும் செய்த நன்மையற்ற வினைகள் எஞ்சுவதால் மறுபடியும் அதன் பலனை அனுபவிக்க பூமியில் மனிதப்பிறவி கிடைக்கிறது. ஆனால் எஞ்சிய கர்ம வினையை அனுபவிப்பதோடல்லாமல் மறுபடியும் கர்மங்கள் செய்யப்படுவதனால் அவையுடைய தரத்துக்குத் தகுந்தவாறு ஸ்வர்க்கமோ, நரகமோ மறுபடியும் நிச்சயமாகிறது. அதேபோலவே தீவினைகள் செய்து நரகவேதனை அனுபவித்தபோதிலும் சிறிதளவேனும் செய்த நல்வினைகளின் பலனை அனுபவித்து முடிக்க பூமியில் மறுபடியும் வரவேண்டியதாகிறது. ஆக, நல்வினை தீவினைகளின் பலன்களை மட்டுமே ஸ்வர்க்க, நரகங்களில் தீர்க்க முடியுமேயன்றி எஞ்சிய வினைகளின் பலன்களைத் தீர்க்கமுடியாது. அதனால்தான் மறுபடியும் வினைப்பயனைக் கூட்டாமல் கர்மநாசம் செய்வதற்கு உகந்த இடம் இந்தப்பூமியே என்று சொல்லப்பட்டிருக்கிறது. எக்கேடும் இல்லாத, அதாவது எந்தவிதத்திலுமுள்ள வினைப்பயனை மறுபடியும் சேர்க்காமல் பக்தியாலும், பகவானின் நாமபாராயணத்தினாலும் கர்மம் ஒட்டாது தங்களைப் பரிசுத்தம் செய்து கொண்டிருக்கின்ற தொண்டர்களும், ஞான,யோக மார்க்கங்களால் மோக்ஷத்தை நாடும் தவசிகளும் பரமபதம் சேர எல்லாவிதத்திலும் உகந்த சூழ்நிலையைக் கொடுப்பவள் இந்தப் பூமித்தாய். அவ்வாறே மாயை காட்டுகின்ற பல ஜாலங்களிலும், பகட்டுகளிலும் மதி மறந்து, உலக சுகங்களை மட்டும் சாச்வதமாக எண்ணி, அழியும் பொருட்களில் ஆசைவைத்து, அவற்றிற்காக அலைந்து, அதில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டிய எல்லா சுக சௌகரியங்களையும் கொடுப்பவளும் அன்னையாகிய இந்தப் பூமியே. இறைவனும் பூமியிலேயே அவதாரமெடுப்பதால் இறைவனுக்கும் அன்னையாக விளங்குபவள் இந்தப் பூமி)

 

பவநாதனீசனின் தனிமூலமானபிர
கிருதிதானேயிப்புவி
அவதாரமத்தனையு மந்தந்தவேளையில்
அவனியைக்காப்பதற்கே
இவையாலிப்பூமியே பெரிதானபதினான்கு
புவனங்களிலுமுத்தமம்
தவசாலிமுனிவரர்கள் முறையாகநான்மறைகள்
போற்றிடுவரென்றுமிதனை

(பவநாதன் – உலகநாதன்; அவனி – பூமி; முனிவரர்கள் – உத்தமமான முனிவர்கள்)

உலகத்தின் நாதனான இறைவனுடைய வேறுபாடுறாத மூல இயல்பே இந்தப் பூமி. அந்தந்த வேளையில் இறைவன் எடுக்கின்ற அவதாரங்களும் இந்தப் பூமியைக் காப்பதற்கேயாகும். இக்காரணங்களால்தான் மகத்தான பதினான்கு உலகுகளிலும் பூவுலகே சிறந்தது என்று தவசாலிகளான சிறந்த முனிவர்களாலும், நான்கு வேதங்களாலும் முறையாக இந்தப்பூமி எக்காலமும் வாழ்த்தப்படுகின்றது.

(இக வாழ்வைப் பரிசுத்தமாக்கி மேன்மையடைவதே முக்கியமானதால் அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்கின்ற இப்பூமியின் பெருமை விளக்கப்படுகிறது. ப்ரக்ருதி, புருஷன் என்ற சாங்கிய தத்துவக் கோட்பாடின்படி உலகங்களைத் தோற்றுவித்த இறைவனின் மூலப்ரக்ருதிதான் இந்தப்பூமியென்பது. உலகைப் படைத்த உலகநாதன் உலகின் வடிவோடு கூடியவனாகவும் இருக்கிறான். அவன் பலகாலங்களில் எடுத்த பல பல அவதாரங்களும் தர்மத்தை நிலைநாட்டி பூமியைக் காப்பதற்கே என்பதும் இதிகாச, புராணங்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய்
மன் பல்லுயிர்களுமாகிப் பலபல மாயமயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லலிலனே.

– (திருவாய்மொழி – 3.10.7.)

பூமிக்கு மேலாக புவர்லோகம், ஸ¤வர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், ஸத்யலோகம் அல்லது ப்ரம்மலோகம் என ஆறு மேலுலகங்களும், பூமிக்குக் கீழே அதலம், விதலம், ஸ¤தலம், ரஸாதலம், தலாதலம், மஹாதலம், பாதாளம் என ஏழு கீழுலகங்களும் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இப்பதின்மூன்று உலகங்களைவிட பூலோகமே சிறந்தது என்றும் அனைத்து மறைகளாலும், மாமுனிவர்களாலும் புகழப்பட்டு வருகின்றது.

 

பாரதகண்ட மகிமை:

பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான புராணங்களில் இப்பூமியின் நீர், நிலப் பிரிவுகளைப்பற்றி அக்காலத்தவர்க்கிருந்த கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்காலம் போல விஞ்ஞானரீதியாக முன்னேற்றமடையாதிருந்த அந்தக்காலத்தைய பௌராணிகரீதியான கணிப்புக்களே இவை. அதன்படி நிலப்பரப்பு த்வீபம் என்றும், வர்ஷம் என்றும் இருவகைப்படும். த்வீபம் என்பது தீவும், வர்ஷம் என்பது கண்டமும் ஆகும். த்வீபத்தில் அடங்கியிருப்பதே வர்ஷம். முக்கியமான த்வீபங்கள் பூமியில் ஏழாகும். அவை ஜம்பு, ப்ளக்ஷம், சால்மம். குசம், க்ரௌஞ்சம், சகம், புஷ்கரம் என்றழைக்கப்படுபவை. உலகத்தின் முதல் மானிடனான ஸ்வயம்புவ மனுவால் வெவ்வேறு தலைவர்களுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இந்த ஏழு த்வீபங்களும் அளிக்கப்பட்டனவாம். இவ்வேழு த்வீபங்களுடைய நடுநாயகமாக விளங்குவது ஜம்புத்வீபமாகும். அதற்கு நான்குபுறமும் மேகலைபோல் உவர்நீரினாலான கடல் சூழ்ந்திருக்கிறது. மற்று ஆறு த்வீபங்களுக்கும் இதுபோன்ற வெவ்வேறான கடல்கள் உள்ளன. இந்த ஜம்புத்வீபத்தின் நடுவே அரணாக அமைந்திருப்பது மேருமலை. மேருமலையின் வடதிசையில் ரம்யகம், ஹிரண்மயம், உத்தரகுரு என மூன்று கண்டங்களும், மேருவின் தென்திசையில் ஹரிவர்ஷம், கிம்புருஷம், பாரதம் என மூன்று கண்டங்களும், மேருவின் கிழக்கு, மேற்கு பாகங்களில் பத்ராச்வம், கேதுமான், இளாவ்ருதம் என மூன்று கண்டங்களும், ஆக ஒன்பது கண்டங்கள் (வர்ஷங்கள்) ஜம்புத்வீபத்தில் உள்ளன. இவற்றில் இமையமலைக்குத் தெற்காகவும், சமுத்திரத்திற்கு வடக்காகவும் விளங்குகின்ற பாரதகண்டத்தில் உள்ள மகேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ஹிமம், விந்தியம், பாரியாத்ரம் என்ற முக்கியமான மலைகளைப் பற்றியும், ஆறுகளைப்பற்றியும், இக்கண்டத்திலுள்ள கோத்திரங்களைப்பற்றியும், நாடுகளைப்பற்றியும், நகரங்களையும், கிராமங்களையும் பற்றியும் மிகவும் விரிவாக அக்னி, ஸ்கந்த, வராஹ, கருட புராணங்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றது. நாராயணபக்தனான பரதகுமாரனால் ஒருசேர ஆளப்பட்ட காரணத்தால் பாரதகண்டம் என்ற பெயர் கிடைக்கப்பேற்றது. இந்தப் பாரதகண்டமே வினைகளறத் தகுந்த கர்மபூமி என்று மாமுனிவர்கள் புகழ்கின்றனர். இதனை விவரிப்பதே அடுத்த பா.)

 

பெரிதானஇலவணாம் புதிமத்தியில்லுள்ள
தெழுதீவுகளிலுத்தமம்
அரிதானபூபதும நடுவேவிளங்குவதும்
இதிலுள்ளமேருமலையாம்
விரிவானகண்டங்க ளுண்டொன்பதவைகளுள்
விபுலமானதுபாரதம்
சரியானகருமதல மிதுவேஎனத்திட்ட
முடன்மாமுனிவரோதுவார்

(இலவணாம்புதி – உப்புநீர்க்கடல்; பூபதுமம் – தாமரை போன்ற விரிந்த நிலம்; விபுலமானது – விரிவானது, பெருமையுடையது)

விஸ்தாரமான உவர்நீர்க்கடலுக்கு நடுவே விளங்குவது (இந்த ஜம்பு த்வீபம்). ஏழு த்வீபங்களிலும் சிறந்தது இது. தாமரை போன்று விரிந்துள்ள பூமியின் நடுவிலுள்ள மேருமலை இந்த ஜம்புத்வீபத்திலேயே நிலைகொண்டுள்ளது. இந்தத் த்வீபத்திலுள்ள விசாலமான ஒன்பது கண்டங்களில் பெருமை பெற்றது பாரத கண்டம். இந்தப் பாரதகண்டமே (கர்மங்கள் உற்பத்தியாவதற்கும், கர்மங்கள் அழிவதற்கும் தகுந்த) கர்மபூமி என்று மாமுனிவர்கள் உறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

 

பிரமாதியுலகுகளி லுற்றோர்க்குமேகரும
விதையங்குரிப்பதிங்கே
கரைசேரகருமத்தின் விதைவாடயிப்பரத
கண்டமல்லாதொன்றிலை
மறையோதுமுனிவோரு மிமையாதவானவரு
மொருபோலப்பணிவரிதனை
அரிதானவப்பார தப்பூமியிதுவென்னு
மறிவுற்றெழுமினனைவரும்

(அங்குரித்தல் – முளைத்தல்)

ப்ரம்மலோகம் அல்லது சத்யலோகம் முதலான மற்று பதின்மூன்று உலகங்களில் உள்ளவர்கட்கும் கர்மத்தின் விதை முளைக்கவேண்டியது இப்பாரத கண்டத்திலேயேயாகும். அவ்வாறு முளைத்த கர்மத்தின் விதை வாடி நாசமடையவும், மறுகரை சேரவும் இந்தப்பாரத கண்டத்தில் அல்லாது வேறு எங்கும் சாத்தியமன்று. இக்காரணங்களாலெல்லாம் பாரதபூமியை வேதம் ஓதிய ரிஷிகளும், தேவர்களும் ஒருபோல வணங்குகின்றனர் அத்தகைய அரிய தகைமையுடைய புண்ணிய பாரதப்பூமியிது என்று அறிவுற்று அனைவரும் மூடமயக்கத்திலிருந்து எழுவீர்களாக.

(எல்லாக் கர்மங்களுக்கும் விதையாக இருப்பது ஆசையே. ப்ரம்மாதி உலகிலுள்ளவர்களும் கர்மவிதை முளைப்பதற்கு இப்பாரத பூமிக்கு வரவேண்டும். அந்த விதை நசிப்பதற்கும் இப்பாரத பூமியையே சரணடைய வேண்டும்.

தேசம் மட்டுமல்ல, இந்தக்காலமும் அனாயாசமாக முக்தி பெறுவதற்கு உற்றதே என்று அடுத்த பாவில் சொல்லப்படுகிறது)

(எழுசீர்க்கழிநெடிலடிச் சந்தவிருத்தம்)

விரிவானநான்கு யுகமானவற்றிற் கலியேசிறந்தகாலம்
அரிதானமுத்தி எளிதேபயக்க உறுகாலமென்பதிதுவே
அரிமாதவாதி பரமாமுராரி மதுசூதனாமுகுந்தா
வரதாபராவென் றொருநேரமேனு மனதால்நினைக்ககதியே

(கலி – கலிகாலம்; முத்தி – முக்தி, வீடுபேறு)

வெகுகாலம் நீண்டுள்ள நான்கு யுகங்களில் மிகவும் சிறப்பான காலமென்பது கலிகாலமேயாம். கிடைத்தற்கரிய முக்தி மிகவும் எளிதாகக் கிடைக்க உகந்த காலம் இதுவே. ஹரியே, மாதவா, ஆதிபரமா, முராரியே, மதுசூதனா, முகுந்தா, வரதா, பரனே என்று ஒரு நேரமாவது மனதால் நினைத்தாலும் கதிபெறுவது உறுதி.

(கலிகாலத்தின் போக்கு மிகவும் விசித்திரமானது. அறநெறியிலுற்றவர்க்குத் தாழ்வும், அறமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உயர்வும் கலிகாலத்தில் எங்கும் தென்படுகிறது. எங்கும், எல்லாவிதத்திலும் கடினமான பரிசோதனைகளே நிறைந்து காணப்படுகின்றன. அதிலும் உள்ளத்தைத் தெளிவாக எம்பெருமான் விஷயத்தில் நன்கு நிறுத்தி உணர்வது என்பது மிகக் கடினமான செயல். வழிபாடுகளும், பூசனைகளும், ஆசார, அனுஷ்டானங்களும் எல்லாம் கலிகாலத்தில் சுய காரியலாபத்திற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. அல்லாமல் இறைவன்பால் கொண்ட அன்பினால் அல்ல. அக்காரணத்தாலேயே காரியசித்தி, தனலாபம், முதலான காரியங்களுக்காக அல்லாமல் இறைவனிடம் தூயபக்தியோடு அவனுடைய நாமங்களை இக்கலிநாட்களில் ஒருநேரமாவது நினைக்க அது முக்திப்பாதையில் எடுத்துவைக்கும் முதலடியாக அமைகிறது. ஆசைகளால் நிறைந்து அலைபாயும் மனதை அடக்க இறைவன் நாமம் உதவுகின்றது. இவ்வளவு உசிதமான கலிகாலத்தில் பாரதகண்டத்தில் பிறந்த மாந்தரில் பெரும்பான்மையரும் இறையன்பர்களாக விளங்காமலிருப்பதும் மாயையின் மகிமையாலேதான். அம்மாயையின் தொடர்பு அற இறைவனருளல்லால் மற்று எந்த உபாயமும் கிடையாது என அனைத்துப் பிரமாணங்களும் மொழிகின்றன. இறையருள் வாய்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சியென்பதும் மிகவும் எளிதான திருநாமபாராயணம் வாயிலாகவே.

அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சிஉயநின் திருவடியே சேர்வான்- நயகின்றநன்மாலைகொண்டு ‘நமோநாராயணா’ என்னும்சொன்மாலை கற்றேன் தொழுது.

 – முதல்திருவந்தாதி -57.

என்கின்றார் பொய்கையாழ்வார்.)

இனிதாகவுள்ள பெயரோதலன்றிப்பெருவேள்விவேறுமுளதோ
எனவெண்ணிமற்றுபதின்மூன்றுவுலகி
லுயிர்வாழ்சனங்களெவரும்
இனியுள்ளதீவு களிலுள்ளபேரும் மறுகண்டமுய்யுவோரும்
இனியுள்ளமூன்று யுகமுற்றபேரு மெதிர்நோக்கியேவாழ்வரே

 (பெயரோதல் – நாமபாராயணம்)

மிகவும் இனிமையாக உள்ள இறைவனுடைய திருநாமங்களை ஓதுவதல்லாது பெரிய உபாசனை வழி வேறு எதுவுமே கிடையாது என எண்ணி மற்ற பதின்மூன்று உலகங்களிலும் உயிர்வாழ்பவர்களும், பூவுலகிலேயே ஜம்புத்வீபம் தவிர்த்து ப்ளக்ஷம், சால்மலம் முதலான மற்று ஆறு த்வீபங்களில் உள்ளவர்களும், ஜம்புத்வீபத்திலேயே ரம்யகம், ஹிரண்மயம் முதலான மற்ற எட்டு கண்டங்களில் உள்ளவர்களும், க்ருதயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் என்ற மற்ற மூன்று யுகங்களில் உள்ளவர்களும் முக்திக்கான வாய்ப்பை எதிர்நோக்கி வாழ்கின்றார்கள்.

 

அதுபோலனேக நாளுய்துமுத்தி யரிதானதென்றுகண்டு
இதமானபூமி யிப்பாரதத்தின் கலிநாட்களைப்புகழுவார்
புதலாகவேனு மிப்பாரதத்தி லவதாரமாவதெளிதோ
துதிசெய்வரேப ரதகண்டவாசி களையும்கலியையும்சதா

(புதல் – புல்)

அவ்வாறு வெகுநாட்கள் வாழ்ந்தும் மற்ற உலகங்களிலும், த்வீபங்களிலும், கண்டங்களிலும், பாரதகண்டத்திலேயே மற்ற மூன்று யுகங்களிலும் வாழ்கின்றவர்கள் அவரவருடைய தேசங்களிலும், காலங்களிலும் முக்தி கிடைப்பதென்பது அரிது என்று உணர்ந்து, இந்தப் பாரத தேசத்தையும், கலிகாலத்தையும் புகழ்வார்கள். ஒரு புல்லாகவாவது இந்தப் பாரதநாட்டில் பிறப்பதென்பது எளிதான காரியமன்றே என்று கலிகாலத்தையும், அக்கலிகாலத்தில் பாரதகண்டத்தில் பிறக்கும் பேறு வாய்த்த மக்களையும் எப்போதும் துதிசெய்கிறார்கள்.

(பாகவத புராணத்தில் நிமினவயோகீஸம்வாதம் என்ற பதினோராவது காண்டத்தில் கொடுத்துள்ள கருத்துக்களை ஆதாரமாக்கியே கவி பூந்தானம் பாரதகண்டத்தின் பெருமைகளை வர்ணிக்கும் இப்பகுதியை இயற்றியுள்ளார் என்று தெரிகிறது. கலிகாலத்தைய பாரதகண்டத்திற்கு மகத்துவம் அதிகம். ஒரு ஆத்மாவுக்கு கலிகாலத்தில் அங்கே வெறும் ஒரு புல்லாகவேனும் பிறவி வாய்க்கும் எனின் அது ஒரு கிடைத்தற்கரிய பேறு. ஏனெனில் அப்புல்லுக்குப் பரமபக்தர்கள் பாராயணம் செய்கின்ற திருநாமங்களைச் செவிக்கொள்ளுவதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். அதனால் அந்த ஜீவனுடைய பாபம் கெடவும், மனத்தெளிவு, தத்துவஞானம் முதலானவை முறையாக வாய்க்கவும் அதன் பலனாக முக்தி பெறவும் வழியுண்டு.

பூந்தானத்தின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப்பற்றி நிலவிவரும் கதைகளில் ஒன்று அவர் தினமும் பாகவத பாராயணம் செய்து கொண்டிருந்த இடத்துக்கு அருகில் நின்றிருந்த இரண்டு முதிய பலாமரங்களை அவர் வைகுண்டக் காட்சிகளைக் கனாவாகக் கண்டபொழுது அங்கே கண்டார் என்பதாகும்.)

உரிதானநல்ல கலிகாலமென்ப திதுவேநினைவுகொள்வீர்
சரியானபரத வளநாடுமிந்த நன்னாடுநாமனைவரும்
நரராகயிங்கு வரலுற்றதரிய வருளானபேறுமறவீர்
அரிநாமமுள்ள வரையெந்தநாளும் சரிவென்பதில்லையறிவீர்

முக்தியடைவதற்கு உரித்தான நல்ல கலிகாலமே இக்காலம் என்பதை அனைவரும் நினைவுகொள்வீர்களாக. அதற்கு உசிதமான, எல்லா வளங்களும் பெற்ற பாரதநாடு நம்முடைய நன்னாடு. சரியான இந்தக்காலத்திலும், தேசத்திலும் நாம் மனிதப்பிறவியைப் பெற்றிருப்பது என்பது கிடைத்தற்கரிய இறைவனருளால் கிடைத்த புண்ணியம் என்பதனை மறந்துவிடாதீர். ஹரிநாமம் உள்ளவரை எந்நாளும் நம் நிலைதாழாது என்பதையும் அறிவீர்களாக. (பின் எதையும் நாம் அஞ்சத் தேவையில்லை.)

(பாரத கண்டத்தில் கலியுகத்தில் மானுடப்பிறவி எடுக்கும் வாய்ப்புக்கிடைக்காத எல்லா ஆத்மாக்களும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனவாம். ஆனால் நாம் அவ்வாறு வருத்தமுறத் தேவையில்லை. இப்பாரத தேசத்தில் இந்தக் கலிகாலத்திலேயே மனிதப்பிறவி எடுத்த பாக்கியசாலிகள் நாம்.

பேசும் இன்திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்
பேசுவார்தமை உய்யவாங்கிப்
பிறப்பறுக்கும் பிரான்—-

-பெரியதிருமொழி – 1.8.9.

என்கின்றார் திருமங்கை ஆழ்வார்.)

 

அடடாவிதென்ன கொடிதானபுந்தி கடிதானநரகவடலில்
பொடிபோலுமச்ச மடையாதுகெட்டு படுபாவியாகமுடிவோ
தொடராதுமடிவு திடமென்றமூடநினைவால்விளைந்ததிமிரோ
விடராகவென்றும் வீணாகவாழ்வுகெடவேநடித்தலைகிறோம்

(புந்தி – புத்தி; நரகவடல் – நரக இம்சை; விடர் – தூர்த்தர்)

அந்தோ! இதென்ன கொடிதான புத்தியின் போக்கு! கடுமையான நரக வாதனையில் சிறிதுகூட அச்சம் இல்லாது கெட்டுப் படுபாவியாக முடிவு எடுத்தாயிற்றோ! நிச்சயமாக மரணம் வரப்போவதில்லை என்ற மூடத்தனமான நம்பிக்கையில் விளைந்த திமிர்ப்போ! எந்நாளும் வாழ்வைத் தொலைத்துக் கெடுத்து வீணாக நாடகமாடித் திரிகின்றோம்!

(மனிதப்பிறவி உசிதமான தேச காலங்களில் அமைந்தும் அனுகூலமான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி வீடுபேற்றிற்கான வழியைத் தேடாமல் பிறவியை வீணாக்கும் மனிதர்களை நோக்கி அனுதாபத்துடன் கூறுகிறார். இறைவனை அடைய முயலாதிருக்கும் நரஜன்மம் பாழ் என்று உணர்த்தப்பட்டிருக்கிறது.

தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன், வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்.

 – பெரிய திருவந்தாதி -82.

என்கின்றார் நம்மாழ்வார்.)

அநேகமான ஜன்மாந்தர துக்கங்களுக்குப் பிறகு கைவந்துள்ள மனிதப்பிறவியை, அதுவும் பாரதமண்ணில் கிடைக்கப்பெற்ற பிறவியை தொலைத்துப் பாழாக்குவதை மறுபடியும் கவிஞர் நினைவூட்டுகிறார் அடுத்துவருகின்ற பாக்களில்.

பலவானசன்ம மழலால்நலிந்து முடிவாகயிந்தநாளில்
நலமேசெறிந்த வினையால்பிறந்துபொலிவுற்றதென்னபேறோ
பலவானசன்மம் மலமீதசைந்தும் பலசன்மம்நீரிலுற்றும்
பலவானசன்மம் மண்ணோடுருண்டும் பலசன்மம்மரமாகியும்

பலவானசன்மம் பிணமாயலைந்தும்பலசன்மம்பசுவிலங்காய்
குலமொன்றில்வந்துநரனாய்ப்பிறக்குமுன்பட்டவாதைசிறிதோ
பலவாகநொந்து முடிவாகஅன்னை கருவுள்நுழைந்துநைந்து
விலகாதுசற்றுமுலையாதுவெளியில்வருநாளைக்காத்திருந்தோம்

(அழல் – துன்பம்)

பலபிறவிகள் கஷ்டத்தால் அல்லலுற்று முடிவாக இந்தக் காலத்தில் நல்வினைப்பயனால் மனிதப் பிறவியைப் பெற்று பொலிவுடன் வளர்ந்து ஆளானது பெரும்பேறுதான். பல பிறவிகள் மலத்தில் புழுவாக நெளிந்தும், பல பிறவிகள் நீரில் நீந்துகின்ற உயிரினங்களாய் வாழ்ந்தும், அதன் பிறகு பல பல பிறவிகள் மண் மீது ஊர்கின்ற உயிர்களாய்த் தோன்றியும், பல பிறவிகள் தாவரங்களாய் நின்றும், பல பிறவிகள் உருவற்ற பேயாய்த் திரிந்தும், பல பிறவிகள் விலங்குகளாகியும், முடிவில் நல்ல குலமொன்றில் ஒரு மனிதனாக வந்து பிறவி எடுப்பதற்கு முன்னர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமோ! மிகுதியான கஷ்டங்களை அனுபவித்து முடிவில் தாயின் கருப்பைக்குள் நுழைந்து, நகராமலும், அசையாமலும் வெளியில் வருவதற்கான நாளை எதிர்நோக்கிக் கிடந்தோம்.

(உலகத்தில் நானா உயிரினங்களும் நானாரீதியில் காணப்படுவதால் புண்ணிய பாபங்களுக்கு விளைவுகள் உண்டு என்பதையும், பிறவிகள் தொடராக வருகின்றன என்பதையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கின்றது. அனாதியான பிறவிப்பெருங்கடலின் ஆழத்தைக் காண்பது அரிது. மனிதப்பிறவிக்கு முன்பு என்னவெல்லாம் பிறவிகள் எடுத்திருக்கலாம் என்பதை இந்த இரண்டு பாக்களும் சுட்டிக்காட்டுகின்றன. மலமூத்திரங்களாகின்ற கழிவுப்பொருட்களில் கிருமிகளாகப் பல பிறவிகள் கடந்து போயிருக்க வாய்ப்புண்டு. அதுபோலவே நீரில் வாழ்கின்ற சிறு உயிரினங்களாகவும், மீன், முதலை முதலான பிராணிகளாகவும், மற்ற வலிவுற்ற பிராணிகளைப் பயந்து வாழ்ந்திருக்கலாம். அவ்வாறே ஈனமான புழு பூச்சிகளாக மண்மீது உருண்டு பல பிறவிகள் கழிந்திருக்கலாம். குளிர் வெப்பம் முதலானவற்றில் துன்பமுற்று தாவர இனங்களாகவும் பல பிறவிகள் முடிந்து போயிருக்கலாம். யமதூதர்களின் இம்சையைத் தாங்கி நரகங்களில் வாதனையுற்றதையே பிணமாய் அலைந்தது குறிக்கின்றது. பின்னும் பலவிதத்திலுள்ள விலங்குகளாகப் பல பிறவிகள் கடந்து போயிருக்கலாம். இவ்வாறாகக் கணக்கிலடங்காத இன்னல்களையும், வருத்தங்களையும் அனுபவித்து முடிவில் அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கப் பெற்றது இந்த மானுடப்பிறவி. அப்பிறவி எடுப்பதற்கு முன் அன்னையின் வயிற்றில் பட்ட கஷ்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. கை கால் முதலான உறுப்புக்கள் பூரண உருவமடையாமலும், அசைக்க முடியாமலும் முன் செய்த நல்வினை, தீவினைகளை ஆராய்ந்துகொண்டு முதல் ஐந்து மாதங்கள் சிசு அசையாமல் கிடக்கிறதாம். கருப்பையின் உஷ்ணத்தாலும், அன்னை உட்கொள்கின்ற உணவுப்பொருள்களின் தீவிரமான ரசத்தன்மையாலும் மிகுந்த கஷ்டத்தை நேரிடுகின்ற மகவு முழு உணர்வோடும், நினைவோடும் நல்ல ஒரு பிறவியை எதிர்பார்த்துக் கொண்டும், முன்பிறவிகளில் செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் மிக ஜாக்கிரதையாக வாழ்க்கைமுறையை அமைக்கவேண்டும் என்ற திட்டத்தோடும் பிறக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றதாம். ஆனால் மாயையின் ஆதிக்கத்தால் வெளியில் வந்த சிசு எல்லா முன் நினைவுகளும் அற்றுப்போய்க் கிட்டத்தட்ட ஒரு ஜடப்பொருளின் அளவுக்குப் பசியை மட்டும் உணர்கின்ற ஒன்றாக மாறிவிடுகின்றது.

ஈரைந்துதிங்கள் மாதாவயிற்றி னிருளிற்கழித்து மேலும்
ஈரேழுவருட மறியாக்குழந்தை யெனவேகளித்தொழித்தும்
வீறோடுநாளும் நான்நானென்றோதி வீணேபின்நாள்கழித்தும்
நேரம்கிடைக்க விலையேயெவர்க்கும் தானாரென்றாராயவே!

 பத்து மாதங்கள் தாயின் வயிற்றினுள் இருளில் கழிந்தது. பிறகு பதினான்கு வருடகாலம் அறியாக்குழந்தை என களித்துத் திரிந்து காலம் கழிந்தது. அதன் பிறகு முழுமனிதனாக ஆன காலத்தில் ‘நான்’ ‘எனது’ என்ற உடைமையுணர்வாலும், ஆசைப்பெருக்காலும் வீணாக நாட்கள் கழிக்கபடுகின்றன. ஆனால் தன்னுடைய உண்மையான நிலையும், நோக்கமும், வாழ்வின் இலட்சியமும் என்ன என்று சற்றேனும் சிந்தித்துப் பார்க்க ஒருவர்க்கும் நேரம் கிடைப்பதில்லை!

(அன்னையின் கர்ப்பத்தில் கிடந்திருந்த நாட்களில் பூர்வ ஜன்ம நினைவு உண்டாயிருந்த போதிலும் அந்தக்காலத்தில் விடுதலைக்காக முயற்சி செய்வது என்பது அசாத்தியமானதாலும், பிறந்தவுடன் பூர்வஜன்ம ஞானம் அழிந்து விடுவதாலும், அதன் பிறகு உண்டாகின்ற குழந்தைப் பிராயம் அறியாப் பிராயம் ஆகிவிடுகின்றது. நோய்நொடி, பெற்றோரின் பலவிதத்திலுள்ள ஆதிக்கம், விளையாட்டு என மொத்தத்தில் இளம்பிராயம் முழுவதும் வீணாகி விடுகின்றது. பிறகு யௌவனப்பருவம் ஆரம்பிக்கின்றது. தன்செயல் என்ன என்பதனை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு செயல் படுவதற்கு உசிதமான காலமே யௌவனப் பருவம். ஆனால் இந்தப் பருவத்தில்தான் காமக் குரோதங்களுடைய படையெடுப்புக்கு மனிதன் பாத்திரமாகிறான். தானென்ற அகந்தையாலும், ‘தொடராது மடிவு’ என்ற மூடநினைவாலும், எண்ணற்ற ஈனச்செயல்களைச் செய்ய விழைகிறான். அவற்றின் பட்டியலே இனிவரும் சில பாக்கள். தான் சரீரமன்று, அதிலுறையும் ஆத்மாவே என்ற உணர்வும், அனைத்தும் நடைபெறுவது இறையிச்சையாலேதான் என்ற உண்மையும் தற்போதத்தோடு ஆராய ஒருவரும் முயற்சியெடுப்பதில்லை என்பதே மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும்.)

தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமீட்டேன்
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா!
அரியே! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

பெரிய திருமொழி, முதற்பத்து – 87

என்கின்றார் திருமங்கை ஆழ்வார்.

 
 
எப்போதுவரையிலுயிர்வாழ்வமென்றுசெப்பவல்லாருமுளரோ
தப்பாதுமூச்சுத் தாவும்இத்தேக மப்புவின்குமிழியொக்கும்
வெப்போடுபாடு படவேவிழுந்து ஒப்பாரிநடுவிலாகும்
முப்பாரினீச னப்பாநின்னாமம் செப்பயோசித்திடாரே

(அப்புவின் குமிழி – நீர்க்குமிழி; வெப்பு – ஆசை, மனத்துயர்)

எந்நேரம் வரை நாம் உயிர் வாழ்வோம் என்று யாரால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும்? முறை பிழறாமல் மூச்சு ஓடிக்கொண்டிருக்கின்ற இவ்வுடல் நீர்க்குமிழியைப் போன்றதாகும். மிகவும் ஆர்வத்தோடும், முடிவை எதிர்பார்த்துள்ள மனக்கவலையோடும் பாடுபட்டு ஒவ்வொரு செயலையும் செய்வதற்கிடையில் எதிர்பாராத விதமாக உயிர்நீங்கி உடல் உரக்க ஒப்பாரிவைத்து அழுகின்ற உறவினர்கள் நடுவில் கிடக்கும்வண்ணம் ஆகின்றது. மூவுலகுக்கும் இறையோனான அப்பனே! உன் நாமத்தை மட்டும் சொல்ல எவரும் நினையார்!

(கிடைத்தற்கரிய மனிதவாழ்வு கைவந்தபோதிலும் நொடிப்பொழுதில் அது தீர்ந்துபோகலாம் என்பதே அதன் நிலைமை. எந்த நொடியிலும் வெடிக்கின்ற நீர்க்குமிழி போன்று பலவீனமாக உள்ள மனித உடலில் ஆயுளை நிலைநிறுத்துவது நுண்ணிய பிராணவாயுவாகும். வாழ்கைசுகங்களுக்காக வேண்டியுள்ள முயற்சிக்கிடையில் கொஞ்சம் கூட எதிர்பாராத வேளையில் அது உடைந்துபோவதற்கும் வாய்ப்புண்டு. வாழ்க்கையின் இந்த நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்ட பின்னரும் அற்பமான வாழ்க்கை நாட்களை இறைவன் நாமத்தை உச்சரிப்பதில் செலவிடாமல் மனிதர்கள் வீணாக்குகிறார்கள். இப்பூமியில் நன்கு வாழ்ந்தார்கள் என்ப்படுவதெல்லாம் பெருமழையில் உண்டாகும் நீர்க்குமிழியானது மாய்ந்து அழிதலைப் போன்றதன்றி வேறு அல்ல. அன்று முதல் இன்றுவரை நிலையாய் விளங்குவது என்பது யாதும் இல்லை என்ற கருத்தையே நம்மாழ்வாரும் இயம்பியுள்ளார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார்கள் என்று அல்லால் அன்றுமுதல் இன்றறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை, நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ

– (திருவாய்மொழி – 4.1.6.)

இனி எஞ்சியுள்ள வாழ்நாட்களை யாரும் வீண்செய்யக்கூடாது என்பதை வலியுறுத்த மனிதர்களிடையே காண்கின்ற அற்பத்தனமான பல நடவடிக்கைகளையும் மூலநூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

குலகோத்திரத்தின் பெருமைபிதற்றிசிலபேர்நெளிந்துதிரிவார்
கலகத்தைமூட்டும்வழிமட்டுமாய்ந்துமதிகெட்டலைவர்சிலபேர்
மெலிவார்நடந்து மடவாரைநாடி வெறியோடுநாளுமலைவார்
நிலைகெட்டபின்னர்தனவந்தர்முன்புசிலர்பல்லிளித்துவிழுவார

பெருமை பெற்ற குலம், உயர்ந்த கோத்திரம் எனத் தத்தம் புகழைத் தாமே பாடிக்கொண்டு திரிகின்றனர் சிலர். ஒருவருக்கொருவர் கலகத்தை மூட்டி விடுவதற்கான வழிகளை மட்டும் யோசித்துச் சிலர் மதிகெட்டலைகின்றனர். எல்லா நாளும் காமப்பித்தோடு பெண்களை நாடி வெறியோடு அலைந்து உடல் மெலிகின்றனர் சிலர். சுய அபிமானத்தை விட்ட பிறகு தனவந்தர்கள் முன்பு பணத்திற்காகப் பல்லிளித்துக் குழைகின்றனர் சிலர்!

(பூந்தானகவி சொல்லியிருக்கும் இந்நடவடிக்கைகள் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்திருந்தவையாயினும், இன்று, நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அதேபோல் உண்மையாகவே இருக்கின்றன. எத்தன்மையோருக்கும் ‘நான், நான்’ என்று செருக்குற்று எழுகின்ற அகந்தையால், மாயாகாரியமாக வந்துசேரும் தீராத ஆசைகளையும், அதனால் பெருகும் பிறவிப்பெருங்கடல் துன்பங்களையும் எவராலும் அளவிட முடியாது. யான், எனது என்னும் அகப்பற்றையும், புறப்பற்றையும் வேருடன் அகற்றி அமைதிகொண்டு இறைவனைச் சரணடைவதைவிட ஆத்மாவுக்கு நிறைவு தரக்கூடியது வேறு எதுவும் இல்லை என்பதனை

நீர் நும தென்றிவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன்
நேர் நிறை இல்லே

 – (திருவாய்மொழி – 1.2.3.)

என நம்மாழ்வாரும் சொல்லியுள்ளார்.)

 
 

தினமும்விடாமல் பணியைமுடக்கி தெருநாயெனத்திரியுவார்
தனையீன்றவன்னைதந்தைக்குமுண்ணவுணவும்கொடார்சிலகலர்
மனையாளையென்றும்தனியாயகற்றியனியாயம்செய்வர்சிலபேர்
கனிவோடுபுத்தி மதியோதுவேளை பணியாதுசீறிவிழுவார்

(கலர் – கயவர்)

பிரயோஜனமுள்ள ஒரு வேலையையும் செய்யாமல் தினமும் தெருநாயென வீணாக அலைகின்றனர் சிலர். தாய் தந்தையர்க்கு உண்ண உணவுகூடக் கொடுக்கா திருக்கின்றனர் மற்றும் சில கயவர்கள். தாலிகட்டின மனைவியைத் தள்ளி வைத்து வேறு சிலர் அநியாயம் செய்கின்றனர். இவற்றைக் காண்கின்ற முதியோர்களும், நல்லோர்களும் கனிவுடன் புத்திமதி எடுத்துக் கூறும்போது அடக்கமில்லாமல் அகங்கரித்துக் கோபத்தோடு அவர்கள் சீறி விழுகின்றனர்!

(பணத்தாசை, பெண்ணாசை முதலானவற்றில் மதி மறந்து அவசியம் செய்யவேண்டிய செயல்களான பெற்றோரைப் பேணல், மனைவியிடம் அன்புடைமை முதலானவற்றையும் துறந்து ஈனவாழ்வு வாழ்கின்றனர் பலர்.

 

ஆசானின்முன்பு அபவாதமோதி கூசாமலேசிநிற்பார்
தேசுற்றதனது வாசாலகத்தில் காசினியுழற்சியென்பார்
ஆசாரநெறியில் தானீசனாரின் மேலென்றுபீற்றிநெளிவார்
காசாசைகொண்டு கனவேள்விபலவு மாசாரக்கள்ளர்செய்வார்

(அபவாதம் – அவதூறு; வாசாலம் – பேச்சுத்திறன்; காசினி – பூமி; ஆசாரக்கள்ளன் – ஒழுக்கமுடையவன்போல் நடிக்கும் கள்ளன்)

தமக்கு வித்தையறிவித்த குருநாதன் முன்பாகவே அபவாதம் பேசி அவமதிக்கத் தயங்காதவர்கள் சிலபேர். புத்திசாலித்தனமான தம்முடைய பேச்சுத் திறமையாலேயே இந்த உலகம் சுழல்கிறது என்று பெருமை சொல்லிக்கொண்டலைபவர்கள் சிலபேர். ஆசார அனுஷ்டானங்களில் தமக்கு மேலாக அந்த இறைவனும் கிடையாது என்று செருக்கோடு பிதற்றித் திரிபவர்கள் வேறு சிலபேர். மிகவும் ஒழுக்கமும், பக்தியும் உள்ளவர்களாக நடித்து விமரிசையான யாகம், யஜ்ஞம் முதலானவற்றைக் காசாசை மட்டும் காரணமாகக்கொண்டு வேறுசில கள்வர்கள் செய்கின்றனர்.

(பல்லி தானே உத்தரத்தைத் தாங்கிக்கொண்டிருப்பதாக நினைப்பது போல அகம்பாவம் பிடித்துப் பேசுபவர்களையும், பணத்தைச் சேர்ப்பது என்னும் ஒரே குறிக்கோளோடு ஆத்மிகமான சமய நெறிகளிலும், வேள்வி முதலான அனுஷ்டானங்களிலும் ஈடுபடுகின்ற பொய்வேடக்காரர்களையும் இன்றும் நாம் காண்கின்றோம்)

அற்பர்கள் தங்களைத்தாமே பெரியவர்கள் என்று பிரகடனப்படுத்திப் பெருமையடித்துக்கொண்டாலும், அவர்கள் சொல்லும் செயலும் அவர்களைச் சிறுமையில் புகுத்திவிடும்; அறியாமையில் மூழ்கிக்கிடப்பவர் அறியாமையிலேயே உழல்வார் என்பதனை

சிறியார் பெருமை சிறிதின்கணெய்தும்
அறியாரும் தாமறியாராவர்…..

 இரண்டாம் திருவந்தாதி – 36.

என்று பூதத்தாழ்வாரும் கூறியிருக்கின்றார்.

 
 

பொன்னோடுமணிகள்நவரத்தினங்களெண்ணிவிற்றேகுவிப்பார்
எண்ணற்றகளிறு துரகங்களும்விற்று இன்னமும்காசுசேர்ப்பார்
உண்ணல்தவிர்த்து நாவாய்செலுத்திப்பின்னும்தனம்குவிப்பார்
சின்னத்தனத்தொடென்னாளும்கெட்டுப்பொன்னாசைகொண்டுநசிவார்

(களிறு – யானை; துரகம் – குதிரை)

பொன்னையும், மணிகள், நவரத்தினங்கள் முதலானவற்றையும் விற்றுச் சிலர் பணம் குவிக்கின்றனர். எண்ணற்ற யானைகள், குதிரைகள் முதலானவற்றைக் கிரயம் செய்து மிகுதியான காசு சேர்க்கின்றனர் வேறு சிலர். உணவையும் விடுத்துக் கப்பல் செலுத்தி மிகுந்த தனம் ஈட்டுகின்றனர் சிலர். பணத்தாசை கொண்டு கருமிகளாகக் கெட்டழிகின்றனர் பலர்.

(அடிப்படையில் எந்த மதிப்பும் இல்லாத உலோகம், கற்கள் முதலானவற்றிற்கு இல்லாத விலையை ஏற்றி விற்பனை செய்தும், காடுகளில் சுதந்திரமாகத் திரிகின்ற மிருகங்களைப் பிடித்து அவற்றை விற்றும், மிகுந்த சாகசத்தோடு எல்லாச் சுகங்களையும் துறந்து பொருள் ஈட்டவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளோடு கப்பலில் கடல் கடந்து சென்றும் ஞானப்பானை உருவான காலத்தில் எவ்விதமெல்லாம் வணிகர்கள் பொருள் ஈட்டினர் என்பதையே பூந்தானம் விவரிக்கின்றார். நெறிகெட்ட முறைகளில் பொருள் ஈட்டுவதென்பது இந்நாளில் பலமடங்காகப் பெருகியிருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம்)

ஆனால் பணம் குவிப்பதற்கான வேட்கைக்கு முடிவே வராது என்பதனையே அடுத்த பா விளக்குகிறது.

 

ஆராதுமனது வொருபொழுதுகூட தீராத்தனம்படைத்தும்
ஈரைந்திருப்பின் நூறாகவாசை நூறாயினாயிரத்தில்
ஓராயிரத்தி லாகாதுநிறைவு நூறாயிரம்தேடிடும்
தீராதவாசைப் பாடானகயிறில் மேலோடுமேலேறிடும்

(ஆசைப்பாடு – விருப்பம்)

ஒருநாளும் தீராத செல்வம் பெற்றிருப்பினும் மனது சற்றுக்கூட திருப்தியடையாது. பத்து இருந்தால் நூறாகவும், நூறிருப்பின் ஆயிரம் ஆகவும், ஆயிரம் இருந்தால் ஒருலட்சம் பெறவும் மனது தேடி, தீராத ஆசை என்கின்ற கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே,மேலே என ஏறிக்கொண்டே போகும்.

(ஒருவன் விரும்பாதபோதும் ‘என்னைக் கொள்க, என்னைக் கொள்க’ என்றுக்கூறிக்கொண்டே வரும் பெரிய செல்வம் பின்னால் பெரிய நெருப்பாக அவனைச் சூழ்ந்தது போல அழிக்கிறது. அழிவிற்குச் செல்வம் காரணமாக உள்ளது என்பதை அறிந்தும்கூட, பேராசையால் அச்செல்வத்தை ஏற்றுக்கொண்டு பின்னால் அதனால் அழிகின்ற இந்த உலக இயற்கையை நம்மாழ்வார்

கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?

-திருவாய்மொழி – 4.9.4.

என்கின்றார்.

எவரையும் துன்பம் அடைவிக்கின்ற ஐம்பொறிப்புலன்களில் செல்லுகிற ஆசையானது, பற்கள் அசையப்பெற்று உடல் தளர்ந்து நடக்கமுடியாமல் கோலை ஊன்றி நகரும் பருவத்திலும்கூட நீங்காது என்பதனை

அல்லல் அங்கு ஆரையும் சேர்விக்கும் ஐம்புல
ஆசை, என்றும்,
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று
அறாது கண்டாய்;
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து
வணங்கு – நெஞ்சே! –
தொல் அலங்காரனைத் தென் திருமாலிருஞ்
சோலையிலே.

 -அழகர் அந்தாதி -96

என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் சொல்லியிருக்கிறார்.)

 

அடியார்கள்வேண்டி நின்றாலுமொன்று மிடவேயிரக்கமறியார்
மடிகின்றவேளையொருகந்தைகூடகைக்கொண்டுசெல்லவியலா
படிறேபயின்று பணமேபிடித்து நெடுநாளிருக்கவிழைவார்
இடறாதுவாய்மைநிலையில்வசித்துஉயர்வெய்வதற்குமுயலார்

(படிறு – பொய், வஞ்சனை, களவு, அடக்கமின்மை)

ஏழைகளான நல்லடியார்கள் வேண்டி நின்றாலும் அச்செல்வத்திலிருந்து கொஞ்சம் கூடக் கொடுப்பதற்கான இரக்கமில்லாதவர்கள். இறக்கும்போது ஒரு பழைய துண்டுத்துணியையும்கூட உடன் கொண்டு செல்ல இயலாது (என்பதை உணராது இருக்கின்றார்கள்). பொய், வஞ்சனை, திருட்டு, கொடுமை, அடங்காத்தனம் முதலானவை மட்டுமே கற்று, பணம் ஒன்றையே மெய்யெனப்பற்றி நெடுநாள் வாழவேண்டும் என்று விழைகின்றனர். வாய்மை நிலையிலிருந்து தவறாது வாழ்ந்து உயர் நிலையடைவதற்கு சற்றும் முயற்சி கைக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

கட்டுக்கடங்காமல் அலைகின்ற ஐம்புலன்களையும் மதயானைகளை வாரிகளில் அடக்குவது போன்று அடக்கிப்பிடித்துக் கண்டபடியெல்லாம் திரியாமல் செம்மைப்படுத்தி வைத்து மிகக்கூரிய மெய்யறிவினால் ஆராய்ந்து அறிவதே இறைவன் பதம் காணும் வழியாகும் என்பதனை

வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்
சேரிதிரியாமல் செந்நிறீஇ – கூரிய
மெய்ஞானத் தாலுணர்வார் காண்பரே மேலொருநாள்
கைந்நாகங் காத்தான் கழல்

 முதல் திருவந்தாதி – 47.

என்று பொய்கையாழ்வார் கூறியிருக்கிறார்.

 
 

தற்போதமானமெய்வித்தையின்னுட்பொருளென்றுமொழிவரான்றோர்
விற்பன்னரான பலரும்படித்த வித்தையினருத்தமுணரார்
கர்ப்பூரவாடை யறியாதுநாளும் கழுதைசுமக்குமதுபோல்
அற்பத்தனத்தி லாசைப்பெருக்கி லல்லாடுமிந்தவுலகம்

(தற்போதம் – ஆத்மஞானம், இயற்கையாகவுள்ள முற்றுணர்வு; வித்தை – அறிவு, கல்வி)

ஆத்மஞானம் ஆகின்ற மெய்ப்பொருளுணர்தலே உண்மையான அறிவின் உட்பொருள் என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர். விற்பன்னர் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற பலரும் அவர்கள் படித்த கல்வியின், கல்வி கொடுத்த அறிவின் பொருளை உணர்ந்தவரல்லர். இது கற்பூரத்தின் வாசனையை அறியாமல் அதைக் கழுதை சுமப்பதைப் போலாகும். அற்பத்தனத்திலும், ஆசைப்பெருக்கிலும் உலகமாந்தர் வாழ்நாளை அலைக்கழிக்கின்றனர்.

(கல்வியும், அதனால் உண்டான அறிவும் கற்பூரமாகவும், அதனுடைய உட்பொருளான கற்பூரவாடையை உணராதிருக்கின்ற விற்பன்னர்கள் கழுதைகளாகவும் உவமைப்படுத்திக் கூறப்பட்டிருக்கின்றனர்.

‘குலகோத்திரத்தின்’ என்று ஆரம்பித்து இதுவரையிலும் உள்ள பாக்களில் ஒவ்வொரு மனிதனும் செய்து வருகின்ற வீண்செயல்களை வர்ணித்தது, கிடைத்தற்கரிய மானிடப் பிறவியைத் திருநாமங்களைப் பாராயணம் செய்து இறைவன் எண்ணத்தை மனதில் நிறுத்தாமல் பலரும் பாழாக்குகின்றனர் என்ற உண்மையை வலியுறுத்துவதற்காகவே. அபாரமான பிறவிப் பெருங்கடலில் எவ்வளவு முறை அமிழ்ந்து போனாலும் அதிலிருந்து விமோசனம் அடைய எவரும் விருப்பம் காட்டுவதில்லை என்பதே யதார்த்தமாக நாம் காண்கின்ற உண்மை.

நம் வாழ்நாட்கள் முழுவதும் ஒவ்வொரு விதமான ஆசைகளால் கழிகின்றன என்பதனையும், இருப்பினும் ஆசைகள் மறுபடியும் மேலுக்குமேல் பெருகிக்கொண்டே போகின்றன என்பதனையும் அடுத்து வரும் பாக்கள் விவரிக்கின்றன)

 

(சந்தக்கலிவிருத்தம்)

ஒருநாளொடு வொருநாள்செல குறையும்முயிர்நாளும்
குறையாதனு தினமேபெரு கிடுமாசையின்தொடரும்
விரைவாகவே வருகின்றன கழிகின்றனவுடனே
திருநாட்கள்வி சேடங்களொ டினிதானவிழாக்கள்

வருமாசியில் புனர்பூசமே குலதேவதைதிருநாள்
மறுபாட்டிமை திதியில்நம் சிறுபாட்டன்திவசம்
உறவோர்களை யுணவூட்டிய பெருமைகொளவேண்டும்
பெரிதாகயிவ் விதமாகிய வெகுவாசைகள்மனதில்

அருமைமக னொருவன்னவன் பெருமானெனவாகி
பெருமைபல பணவும்பல அவனால்வரவேண்டும்
தருணம்தனில் தருணிக்கொரு மணவும்செய்வித்து
ஒருபேரன் மழலைமொழி செவிகொள்ளவுமாசை

கையோங்கிட யினியும்நிலம் கிரயம்செயவேண்டும்
ஒய்யாரமொ டில்கட்டிட வேண்டும்மென்றெல்லாம்
செய்யும்பல பணிதீர்த்திட மனமோர்த்திடுநேரம்
பைய்யப் போய்விடுமேவுயிர் பாவம்! கோவிந்தா!

(ஓர்தல் – நினைதல், ஆராய்தல்)

ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல உயிர்நாட்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் தினமும் குறையாது ஆசைகள் மட்டும் தொடராகப் பெருகிக்கொண்டே செல்கின்றன. திருநாட்களும், பண்டிகைகளும், திருவிழாக்களும் வரிசையாக வந்து போய்க்கொண்டிருக்கின்றன. (இவற்றின் கொண்டாட்டத்தின் இனிமையில் மனது ஆழ்ந்து கிடக்கின்றது. உதாரணமாக) “வருகின்ற மாசி மாதம் புனர்பூச நாளில் நம்முடைய குலதேவதையின் பூசை வருகின்றது; அதற்கு அடுத்த பிரதமை திதியில் நம் சின்னப்பாட்டனாரின் திவசம்; இவற்றை விமரிசையாகக் கொண்டாடி நம் உறவினர்களை அழைத்து உபசரித்து, விருந்தூட்டி அதில் (அவர்கள் புகழ்கின்ற விதத்தில்) பெருமை சேர்க்கவேண்டும்” என்றிவ்வாறும், “அருமையான ஒரு ஆண்குழந்தை நமக்குப் பிறக்கவேண்டும்; அவன் வளர்ந்து பெருமானைப்போலவாகி நிறையப் புகழும், செல்வமும் அவன் மூலம் நமக்கு வரவேண்டும்; நல்ல தருணம் பார்த்து ஒரு நங்கைக்கு அவனை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்; அவர்கள் மூலம் நமக்கு ஒரு பேரன் பிறக்கவேண்டும்; அப்பேரக்குழந்தையின் மழலை மொழி கேட்க இப்போதே மிகுந்த ஆசையாக உள்ளது; நம்முடைய செல்வாக்கும், பலமும் பெருகிட இனியும் நிறைய நிலங்கள் வாங்கிச்சேர்க்க வேண்டும்; எழிலோடு கூடிய ஒரு நல்ல வீட்டையும் கட்டி முடிக்க வேண்டும்” என்றிவ்வாறாகவும் பல ஆசைகளில் மூழ்கி அவற்றையெல்லாம் செவ்வனே செய்து தீர்ப்பதற்காக மனது ஆராய்ந்து ஏற்பாடுகள் செய்யத் தொடங்கும்போது, ஐயகோ! கோவிந்தா! பாவம்! எதிபாராதவண்ணம் மரணம் சம்பவித்து உயிர் நீங்கிவிடுகின்றது!

(ஒரு மனிதனுக்கு அவனுடைய விருப்பங்களெல்லாம் அனுபவித்து முடிப்பதற்குச் சந்தர்பம் கிடைக்காததனால் பலவிதமான துயரங்களுக்கு அவன் ஆளாகிறான். எல்லா விருப்பங்களும் பூர்த்தியடைவதற்கு வாய்ப்புக் கிடைக்குமெனில் பின் அவனுக்கு ஆசைகள் முளைக்காமல் போகலாமே! யாருக்குமே அமிர்தம் பெறவேண்டுமென்றோ, சந்திரனை அடையவேண்டுமென்றோ அசாத்தியமான பொருட்களில் ஆசைகிடையாது. அவரவர்க்கு இயலும் விதமுள்ள எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடுமென்றால் மரணதசையில் ஆசையற்றவனாகிவிட முடியுமே! அப்போது அவனுக்கு அனாயாசமாக வீடுநிலையும் கிடைத்துவிடலாம்! ஆனால் இவ்வாறு நிகழ்வது என்பது சாத்தியமா? யாருக்கும் ஆசைகளெல்லாம் பூர்த்தியாகி ஆசையற்றவனாக மாறுவது என்பது முடியாத காரியம். அக்னியை அணைப்பதற்கு அதில் மறுபடியும் நெய்யையோ, மண்ணெண்ணையையோ ஊற்றுவதுபோன்ற காரியம் இது. ஆசைத்தீயும் அதுபோலவேதான். ஆசைகள் மேலுக்குமேல் அனுபவிக்கும்தோறும் ஆசைகள் பெருகுமேயல்லால் வைராக்கியம் விளையாது. சிலருக்குச் சில நேரங்களில் சில பொருள்களை அனுபவிக்க முடியாமல் போகும்போது வைராக்கியம் வந்துவிட்டது என்று தோன்றினால்கூட அவர்களுடைய மனதில் ஆசைகள் மொத்தமாகத் தீர்ந்திருக்காது. எல்லா ஆசைகளும் அறவே ஒழிந்தால்மட்டுமே முக்தி சாத்தியமாகும். அதற்கான ஒரே வழி எண்ணி ஆராய்ந்து உணர்கின்ற பயிற்சி மட்டுமே. அதற்கான உபாயம்தான் திருநாமசங்கீர்த்தனம்.

இறைவனிச்சையால் என்னென்னவெல்லாம் நடக்கவேண்டுமென்று விதிக்கப் பட்டிருக்கின்றதோ அது அந்தந்த வேளையில் நடந்துமுடிந்திருக்கும். வீணான ஆசைகள் துயரத்தை மட்டுமே கொண்டுவந்து சேர்க்கின்றன.

பிறப்பவரெல்லாம் இறப்பது திண்ணம் என்று நன்றாக அறிந்திருந்தும்கூட பலர் தங்களுடைய மடிவைப் பற்றி எள்ளளவேனும் யோசிக்காமல் மனைவி, குழந்தைகள், மற்றும் வாழ்கைச் சுகங்களால் நிரந்தரமாகக் கவரப்பட்டு முடிவில் துயரக்கடலில் வீழ்கின்றனர். அத்தகையோரின் அறிவின்மையின் மீதுள்ள இரக்கத்தையும், வருத்தத்தையும் குறிப்பதே ‘பாவம்’ என்ற சொல். மற்றும், இந்தக்கொடிய துக்கத்திற்குப் பரிகாரமாக இருப்பது திருநாமசங்கீர்த்தனம் மட்டுமே என்பதைக் குறிக்கவே ‘கோவிந்தா’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.)

கண்ட கனாவின் பொருள் போல, யாவும் பொய்;
காலன் என்னும்
கண்டகன் ஆவி கவர்வதுவே மெய்;
‘கதி நல்கெ’ன,
‘கண்டகனா! இப்பொழுதே செல்கெ’ன்று அருள்
கார் அரங்கன்,
கண் தக, நா இன்புற; கண்டு, வாழ்த்தி,
கடிது உய்ம்மினே.

  – திருவரங்கத்தந்தாதி -42.

 

விந்தைநிறை வாழ்க்கையிது காட்டும்பலசாலம்
சிந்தித்திடு வீரேயித னாழத்தினைநன்றாய்
முந்தைப்பிற விகளும்பல வந்தும்போனதுமே
பந்தித்திடு கருமத்தின் நந்தாவல்லமையும்

இதுகாலம் கலிநாளென் பதையும்நம்பிறவி
இதமாகவே யிப்பாரத நிலமீதுற்றதையும்
அதிலிந்நாள் வரைவீணே பழுதாக்கியவிதமும்
அதியோகம் வருமென்பது திடமில்லாநிலையும்

நரவாழ்க்கையி னளவென்பது தெரியாவொருநிலையும்
வரமாகவெ நோயற்றொரு திடமானவிருப்பும்
திருநாமமே தருநல்லொரு புருடார்த்தமதென்றும்
மறவாதிரு மனமேநாள் களையாதிருவீணே

(பந்தித்தல் – கட்டுதல், நந்தாத – அழியாத)

விசித்திரமானது மனித வாழ்க்கை. அது பலவிதமான பகட்டுக்களையும் ஜாலங்களையும் காட்டுகின்றது. வாழ்வின் ஆழமான தத்துவத்தை நன்கு சிந்தித்து உணர்வீர்களாக. (எவ்வாறான சிந்தை எனின்) பலவிதமான பிறவிகள் இதுவரை வந்துபோனதையும், வாழ்க்கையோடும், வினைப்பயனோடும் நம்மைக் கட்டிவிடுகின்ற கர்மத்தொடரின் அழியாத வலிமையினையும், இந்தக் காலமோ உகந்த கலிகாலம் என்பதனையும், நம்முடைய இந்தப்பிறவி உசிதமாக இப்பாரத மண்ணில் அமைந்திருப்பதனையும், அதில் இதுவரையுள்ள நாட்களை வீணாகத் தொலைத்ததனையும், எதிர்பாராத விதத்தில் ஒரு யோகம் போல முக்தி வாய்ப்பது என்பது உறுதியில்லாமல் இருக்கும் நிலைமையினையும், இப்போது வாய்த்த வாழ்க்கை என்பது எந்நாள் வரை நீடிக்கும் என்பதன் அளவு நமக்குத் தெரியாமல் இருக்கின்றது என்ற உண்மையினையும், இறைவரமாக நோய் நொடியில்லாமல் (முக்கியமாக இறைவனைத் துதிக்க முடியாமலும், இறைநாமத்தை எண்ண முடியாமலும் உள்ள நினைவழிவு, மனத்தடுமாற்றம், சித்தப்பிரமை முதலான மனநோய்களில்லாமல்) திடமாக இருக்கின்ற இந்த நிலையினையும், திருநாமங்களை ஓருவதே நல்லறம் என்பதனையும், ஏ மனமே! நன்றாக ஆழ்ந்து சிந்தித்து மெய்யுணர்வு பெற்று, அவ்வுண்மையை மறவாமலும், இனியுள்ள நாட்களையேனும் வீணாக்காமலும் இருப்பாயாக.

உலக வாழ்வு என்பது மீண்டும் மீண்டும் பிறப்பதற்குரிய மயக்கத்தைத் தரும் ஒன்றே. இவ்வாழ்க்கையில் ஆசைகளனைத்தையும் அனுபவித்து முடித்து வைராக்கியம் எய்துவது இயலாத காரியம் என்பது தெளிவாகிவிட்டது. பின் வைராக்கியம் எவ்வாறு வாய்க்கலாம்? தத்தம் பூர்வ நிலைகளைப்பற்றி அறிவுகூர்ந்து யோசிக்கும்போது நாளடைவில் எவருக்கும் வைராக்கியம் கிடைக்கலாம். அதுமட்டுமே முக்திக்கான சோபனமான வழி. எவ்வளவோ பிறவிகள் நமக்கு முன்னே முடிந்து போய்விட்டதெனினும், இப்போது வாய்த்துள்ள பிறவியில் அதிர்ஷ்டவசமாக நாம் எல்லாவிதத்திலும் வீடுபேறு அடைவதற்கான தகுதியுள்ளவர்களாகவே விளங்குகிறோம். அதனால் ஒவ்வொருவரும் அவரவருக்கு இயலும் வண்ணம் தீவிரமாக அலசி ஆராய்ந்து யோசிக்கும்போது இப்பிறவியிலேயே முக்தி பெறுவதற்கான வழி அவரவர் தகுதிக்கேற்பக் காணமுடியும் என்பதனையே பூந்தானகவி நமக்கு நினைவூட்டுகின்றார். ஒவ்வொரு மனிதனுடைய அறிவும் ஒவ்வொருவிதமாக இருப்பதனால் மனிதருடைய நினைவுகளெல்லாம் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பது சகஜமே. அதனால் நினைவின் விளைவுகளுக்கும் ஒற்றுமையிருக்காது. சொந்தமான அறிவினால் அவனவனுடைய ஆற்றலுக்கேற்ப நிதானமாக யோசிக்கும்போது உலகின் நிலையற்ற தன்மையும், இறைவனின் நிலையான தன்மையும் தானாகவே உணரப்படும். அப்போதுதான் எவனுக்கும் முக்திக்காக பிரயத்தனம் செய்வதில் அக்கறை வரும். அப்போது அனாயாசமாகப் பயிற்சி செய்யக்கூடியதும், எல்லா மாந்தர்க்கும் ஒருபோலத் தகுதியுள்ளதுமான நாமசங்கீர்த்தனத்தில் அனைவரும் கட்டாயம் ஈடுபடுவார்கள் என்ற கருத்தையே நூலாசிரியர் எடுத்துரைத்திருக்கிறார்.

பிறவிப்பிணிக்கு ஆதாரமாக இருப்பது கர்மமாகும். ஆதலினால் கர்மம் ஒழியாமல் பிறவி அழியாது. ஆனால் எல்லாக் கர்மங்களையும் ஒழிப்பது என்பது இயலாத செயல். அப்படியானால் செய்யவேண்டியது என்ன? கர்மத்தின் விதையான ஆசையை அழிப்பது என்பதே. அழியா வலிமை பெற்ற கர்மத்தை அழிக்கும் யுக்தி நாமசங்கீர்த்தனம் மட்டுமே. எண்ணிக்கணக்கிட்டுக் கூறவொண்ணாத அளவிறந்த பிறவிகளுள் இந்தக் கலிநாளில், பாரததேசத்தில் கிடைத்தற்கரிய பிறவி எடுத்தபின் இறைவனின் திருநாமங்களைப் பாராயணம் செய்வதின் மேன்மையை உணர்ந்து அதில் ஈடுபடுவதைத் தள்ளிப்போட்டு நாட்களை வீணாக்காமல் இருப்பதே ஒவ்வொரு மானுடனும் செய்யவேண்டிய செயலாகும்.

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணைமேற்கண்டு – தொழுதேன் 

முதல் திருவந்தாதி – 16.

என்கிறார் பொய்கையாழ்வார்.)

அர்த்தமற்ற போட்டிகளில் ஈடுபட்டு மனிதவாழ்க்கையை வீணாக்காமல் இறைவனின் படைப்புக்களாகவே சக உயிர்களையும் நேசித்து உகந்த காலம் வரும்போது இறைவனடி எய்தத் தயாராக இருக்கவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார்.

 

(கலிவிருத்தம்)

கூடியேயல சனனமெடுத்ததும்
கூடியேயல மரணமடைவதும்
கூடிவாழுமின் னாளிடைவேளையில்
மூடப்போட்டியி லீடுறுவதுமேன்

நாம்பிறக்கும்போது தனியாகவே பிறந்தோம். இறக்கும்போதும் தனியாகவேதான் போகப்போகின்றோம். இடையில் சற்று நாட்கள் ஒன்று சேர்ந்து பூமியில் வாழ்கின்றபோது மூடத்தனமான போட்டி, பொறாமை, சச்சரவுகளில் எதற்காக ஈடுபடவேண்டும்?

(பிறவிகளைத் தொடராக அனுபவித்து வருகின்ற நெடுநீளமான இந்தப்பயணத்தில் ஆங்காங்கே சத்திரத்தில் தங்குவது போன்று அமைந்தது நமக்குக் கிடைக்கும் உலகவாழ்க்கை என்பது. இந்தச் சிறு இடைவேளையில் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி உரிமை கொண்டாடுவதற்கோ, பகையுணர்ச்சியோடு போட்டியிடுவதற்கோ என்ன தேவையிருக்கின்றது?

நம்மாழ்வாரும்,

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத் தவர்பிறரும்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே.

– (திருவாய்மொழி – 9.1.1.)

என்று கூறியிருக்கிறார்.)

உன்னியோங்கிட மெய்ப்பொருள்நிற்கவே
பொன்னையெண்ணிநி லைகுழறுவதோ
கண்கொளாதொளி ஞாயிறுவீசவே
மின்மினிக்கதிர் காத்துக்கிடப்பதோ

 

(உன்னி – தியானித்து, கவனித்து)

நாம் தியானித்து முன்னேற்றமடைய மெய்ப்பொருளான இறைவன் இருக்கும்பொழுது பணத்தை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு நிலை குழறுவது முறையோ! கண்கொளாது ஒளிவீசும் சூரியன் இருக்கும்போது வெளிச்சத்துக்காக மின்மினிப்பூச்சியை எதிர்பார்த்துக்கிடக்க என்ன அவசியம்?

(இம்மையிலும், மறுமையிலும் நமக்கு எல்லாச் சுகங்களையும், முடிவில் வீடு பேற்றையும் அளிக்கின்ற கருவியான திருநாமங்கள் நம் கைவசம் இருக்கும்போது, ஈட்டுவதற்கும், காப்பதற்கும், செலவிடுவதற்கும் மனவருத்தத்தைக் கொடுக்கின்ற பணத்தில் நாட்டம் கொண்டு அலைவது மிக்க வருத்தத்திற்குரிய செய்கையே என்று ஆதங்கப்படுகின்றார்.

வெண்ணெயுண்பவன் வேய்ங்குழலூதிடு
கண்ணனைமனம் நண்ணியிருந்திடின்
இன்னமும்பல சந்ததிபிள்ளைகள்
எண்ணுமோமன முண்மையுணர்ந்திடின்

வெண்ணெயுண்டு, குழலூதி விளையாடும் குழந்தையான கண்ணபிரானை மனம் நாடிய பின்பு பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்றிவ்வாறான (நிலையற்ற) உறவுகளை உண்மையை ஆராய்ந்து அறிந்த மனது எண்ணிப்பார்க்குமோ?

(தன்னுடைய நீண்டநாட்தவத்தின் பலனாகப் பிறந்த ஒரே குழந்தைக்கு நேர்ந்த அகால மரணம் பூந்தானத்திற்கு விளைவித்த அதிரற்ற துயரத்தையும், உண்மையை ஆராய்ந்து அறிந்த தத்துவஞானத்தால் அத்துயரம் மறைந்ததையும் இந்தப் பா சுட்டிக்காட்டுகின்றது என்பர். சுக துக்கங்களுக்கு ஆதாரமாக உள்ள மனதில் இறைவன் குடிகொள்ளுகின்ற பட்சத்தில் அம்மனதினை எவ்வாறு சுக துக்கங்கள் அண்டும்? உலகத்தில் எண்ணற்ற குழந்தைகள் இருந்த போதிலும் தனக்கு மட்டுமே சொந்தமான சந்ததி பிள்ளைகள் வேண்டுமென்று ஆசை கொள்வது பகவானின் ஸ்மரணை மனதில் இல்லாத காரணத்தினாலேதான்.

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை – எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயனடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.

முதல்திருவந்தாதி – 30.

பசுவின் கன்றானது கூட்டத்திலும் தனது தாயை நாடிச் செல்வது போல, உள்ளத்தைத் தெளிவாக எம்பெருமான் விஷயத்தில் நன்கு நிறுத்தி ஞானத்தால் நன்கு உணர்வார் சிந்தை அவனை விருப்புடன் சேரும் என்கின்றார் பொய்கையாழ்வார்.)

 

பண்புகொண்டவர் நல்லடியாரவர்
நண்பரேயவ ரெங்குமிருப்பவர்
அன்புடன்புவி தந்திடுபூதிகள்
இன்பமேநிறை சதனமுமிதுவே

(பூதிகள் – செல்வங்கள்; சதனம் – உறைவிடம்)

நற்பண்பு மிக்க சான்றோர்களும், இறையன்பர்களும் நமக்கு எல்லாவிடத்தும் உள்ள நண்பர்களாவார்கள். இந்தப் பூமி நமக்குத் தேவையான செல்வங்களை அன்புடன் எக்காலமும் அள்ளித் தருகின்றது. இன்பம் நிறைந்த பெரிய வீடு இந்த உலகமே.

(தனியாக வந்து தனியாகப் பிரிகின்ற நமக்குப் பண்புள்ள நல்லடியார்கள் அனைவரும் உறுதுணையான நண்பர்களே. சுகர், நாரதர் முதலான அடியார்கள் பரீக்ஷித்துராஜன், துருவன் முதலானோர்க்கு உற்ற தருணத்தில் நண்பர்களாக வந்து பிறவிக்கடலிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்கும் உபாயத்தைச் சொல்லிக்கொடுத்து அவர்களைக் காப்பாற்றினார்கள் என்று புராணவாயிலாக அறியலாம். அத்தகைய நண்பர்கள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஆசையை அகற்றும் திருநாமஜபம் ஒன்றையே செய்யும் செயலாக ஏற்றுக்கொண்டு மனத்தெளிவு பெற்றவர்களுக்கு நாரதாதி முனிவோரைப்போன்ற நல்லடியார்கள் உலகெங்கும் தென்படுவார்கள். அவ்வாறு மனத்தெளிவு பெற்றபின்பு எந்தப் பிரயத்தனத்துக்கும் அவசியம் இல்லாமல் யதேஷ்டமாக பூமி அள்ளிக்கொடுக்கும் செல்வங்களே அவர்களுக்குப் போதுமானதாகி விடுகின்றது. இடைக்கால வாசத்திற்காக வந்த சத்திரம் போன்றுள்ள இவ்வுலகமும் எல்லாவிடத்தும் நண்பர்கள் நிறைந்த இன்பம் தரும் இல்லமாக மாறிவிடுகின்றது.)

உலகுகாத்திடு நாதன்நம்தந்தையும்
உலகுபரிவுட னேந்திடுமன்னையும்
குலமனைத்தினு மப்பனுமம்மையும்
விலகிடாதுச தாநமைக்காப்பவர்

உலகைப் பரிபாலனம் செய்கின்ற இறைவனே நம் தந்தை. நம்மைப் பரிவோடு தாங்குகின்ற இந்தப்பூமியே நம் தாய். இந்குள்ள சகல சராசரங்களுக்கும் தந்தையும் தாயுமாக இருப்பவர்களும், சற்றும் கவனம் விலகாமல் எக்காலமும் காப்பவர்களும் இவர்கள்தான்.

(வாழ்க்கை பெருந்துயரம் என்று எண்ணிக் கலங்க வேண்டாம். எக்காலமும் நம்மைக் காக்கும் அன்னை, தந்தையர் நம்முடனேயே இருக்கின்றனர். நம் அனைவருக்கும் ஒரே பெற்றோர்களானதால் நாம் அனைவரும் சகோதரர்களே. சகோதரர்களுக்கிடையே போட்டியிடுவது உசிதமன்று. ஒரே குடும்பத்தில் நிஜமான அன்னை தந்தையரின் அரவணைப்பிலும், உடன்பிறப்புக்களான அனைத்து ஜீவஜாலங்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து ஜீவன் முக்தியடைவதற்கான இன்ப வீடு இவ்வுலகமே.)

 

குடிலவாசைவி டுத்துயரன்பொடு
தொடருவீர்த்திரு நாமசெபம்தனை
முடிவுநாள்விதி போலவரும்வரை
மடிவிடுத்துவி ழிப்புடனுய்குவீர்

(குடிலம் – ஈனம், வக்கிரம்; மடி – சோம்பல்)

வக்கிரமான ஆசைகளைத் துறந்து தீவிரமான பக்தியோடு நாமஜபத்தைத் தொடருவீர்களாக. முக்திக்கான உகந்த தருணம் கைகூடும்வரை சோம்பலை விடுத்து விழிப்புடன் இருப்பீர்களாக.

(நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து உண்மையை உணர்ந்து ஈனமான ஆசைகளை விடுத்துத் திருநாமங்களை இடைவிடாது நினைவுகூர்ந்துகொண்டு சோம்பலை விடுத்து நிகழ்காலத்திலேயே மனதை நிறுத்தி விழிப்புடன் வீடுநிலை பெறும் நாள் வரை காத்திருப்பதே நம் செயலாகவேண்டும்.

உள்ளம் உரைசெயல்
உள்ள இம்மூன்றையும்
உள்ளிக்கெடுத்து, இறை
உள்ளில் ஒடுங்கே

 திருவாய்மொழி – 1.2.8.

என்கிறார் நம்மாழ்வார்.)

 

கீணமற்றப ரம்பொருளுருவமே
காணுமிந்தச ராசரபூமியும்
பேணிநாளும தைமிகுபற்றுடன்
நாணம்விட்டுகை கூப்பிவணங்குவீர்

(கீணம் – கேடு, குறைபாடு)

அசைவற்றதாகத் தோன்றுகின்ற இந்தப் பூமியும், அதில் அசைகின்ற உயிரினங்களும் கேடிலாத பரம்பொருளான எம்பெருமானின் உருவமாகவே கண்டு, அதை நாளும் போற்றி மெய்யான அன்புடன் வெட்கத்தைவிடுத்துக் கைகூப்பி வணங்க வேண்டும்.

அண்மையிலும், தொலைவிலும் முன்னிலையிலும் உள்ள எல்லாப்பொருள்களும், உயிர்வகையும் என யாவையும் தன்னுள்ளே இருக்குமாறு புரிந்தும், காத்தும் அதனுள் மேவியும் விளங்கும் தனிமுதற்பொருள் எம்பெருமான் என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
சுவையுள் தனிமுதல் எம்மான் கண்ண பிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலு ளானே.

 – (திருவாய்மொழி – 1.9.1.)

(நாணம் விட்டு கைகூப்பி வணங்குதல் என்பதன் உட்பொருள் இறைவனின் மகத்துவத்தையும், அவனுடைய இச்சைப்படியே அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் மனப்பூர்வமாக உணரும்போது எல்லாவற்றிற்கும் இறைவனே ஆதாரமாக இருப்பதை அறியவும், அப்போது எந்த சங்கோஜமுமில்லாமல் எங்கும் நிறைகின்ற இறைவனைப் பரிபூரணமாக சரணாகதியடையவும் இயலும் என்பதே.)

 

நீசர்புன்மைபொ றுத்திடுவீர்மொழி
பேசலற்றிரு விழிகள்நிரம்பிட
ஆசைநீக்கிய சாந்தரைக்காண்கையில்
கூசலற்றுவி ழுந்துவணங்குவீர்

(நீசர் – கீழ்மக்கள்)

இறைநாட்டத்தை இகழ்ந்து பேசுகின்ற கீழ்மக்களின் பரிகாசங்களைப் பொறுத்துக் கொள்வீர்களாக. பக்தி மேலீட்டால் பேச்சற்று ஆனந்தக்கண்ணீர் சொரிகின்ற ஆசை நீக்கிய சாந்தத் தன்மையுள்ள நல்லடியார்களைக் காணும் வேளையில் கூசாமல் விழுந்து வணங்குவீர்களாக.

(பிறர் நிந்தனையும், பரிகாசமும் பக்திமார்க்கத்தில் ஈடுபடுபவருக்கு எக்காலத்திலும் உண்டாகின்ற சோதனையாகும். ஆசையைத் துறப்பதோடு, கோபத்தையும் துறப்பதற்கான பயிற்சியாகவே இவ்விகழ்ச்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கின்றார். பக்தி உணர்வால் உடல் நடுங்கி, உள்ளம் நெகிழ்ந்து, கண்ணீர் ததும்பி, அன்பு மேலீட்டால் கரம் குவித்து, இறைவனை நாவார வாழ்த்தி வணங்குபவர்கள் யாரோ அவரையே உண்மையான அடியாராய்க் கண்டுகொள்ள வேண்டும்.

ஆடியாடியகம் கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
வாடி வாடும் இவ்வாணுதலே

 – (திருவாய்மொழி – 2.4.1.)

என்கின்றார் நம்மாழ்வார்.)

அத்தனாதிப ராபரனெம்பிரான்
வித்தகன்வினை மொத்தமறுப்பவன்
பத்திதன்னிற்றி ளைத்துமயங்கியே
மத்தனென்னவே நர்த்தனம்செய்குவீர்

அனைத்து உயிர்களுக்கும் தந்தையும், ஆதிபராபரனும் ஆகிய நம் இறைவனே தன் இச்சைப்படி எல்லா வினைகளையும், வினைகள் தரும் பலன்களையும் மொத்தமாக அழிக்கவல்லவன். அத்தகைய நம் இறைவன்பால் மெய்யான அன்புகொண்டு அந்த அன்பு மயக்கத்தில் மத்தனாகி நர்த்தனம் செய்வீர்களாக.

(பக்தியில் ஆழ்ந்து எல்லாநேரமும் உச்சரிக்கின்ற பகவந்நாமங்களின் ஆற்றலால் வினைகளின் ஆதிக்கம் ஒன்றுவிடாது ஒழிந்துவிடுகின்றது. அதன்பிறகு ஒன்றன் மேலும் ஆசையற்றுப் போய்விடுவதனால் செய்கின்ற கர்மங்கள் பந்திக்கும் தன்மையற்றவையாகி விடுகின்றன. இவ்வாறு நாமபாராயணத்தின் மகிமையால் வினைத்தளையறவும், மிகுதியான பக்தி பெருகவும் வாய்ப்புக்கிடைக்கின்றது. பக்தியின் பரமோன்னத நிலையில் நர்த்தனம் முதலானவையில் உடல் தன்னிலை மறந்து ஈடுபடும் என்றும், அத்தகையோரின் நிஜமான நிலை அவர்கள் மட்டுமே அறிவார்கள் என்றும், மற்றவர்களின் பார்வையில் அவர்கள் உன்மத்தரைப் போலத் தோன்றலாம் என்றும், சரீராபிமானம் விட்டவர்களுக்குப் பிறருடைய அத்தகைய அபிப்பிராயங்களில் அக்கறை இல்லாதாகிவிடும் என்றும் எல்லாம் பாகவத புராணம் பதினொன்றாம் அத்தியாயத்தில் விவரித்துள்ள பொருள் “மத்தனென்னவே நர்த்தனம் செய்குவீர்” என்ற அடியில் தொனிக்கிறது.

சார்ந்த இருவல் வினைகளும்
சரித்துமாயப் பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
திருத்தி வீடு திருத்துவான்

 திருவாய்மொழி – 1.5.10.

என்கின்றார் நம்மாழ்வார்.)

 

ஊழிநாட்ச்சப சீலமொடோட்டிட
ஊழ்வினைமுழு தும்மறநீங்கிடும்
சீழுடல்விழ சீவனுடன்திரு
வாழிமாதவன் பாதமடைந்திடும்

(சீலம் – நெறி; சீழுடல் – இரத்தம், கபம், மலம், மூத்திரம் போன்ற பலவிதமான நீரால் நிறைந்த நிலையற்ற உடல்)

முன் பாவில் கூறியபடி வாழ்நாட்களைத் திருநாமஜபநெறியோடு கழித்திட ஊழ்வினைகள் ஒன்றுவிடாது முழுவதும் நீங்கி விடும். பிறகு இறைவன் விதித்த வேளையில் நிலையற்ற இந்தவுடல் மாள, உயிர் பாற்கடல்வாழ் பரம்பரனின் திருவடியைச் சென்றடைந்துவிடும்.

(திருநாமபாராயணம் தேகநாசமும், ஜீவன் முக்தியும் ஒரே கணத்தில் சம்பவிப்பதற்கு உறுதியளிக்கின்றது. நாமபாராயணத்தை ஒரு வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வினைகளை மொத்தமாகத் தீர்த்து முடித்த ஒரு ஆத்மாவுக்குப் புண்ணிய பாப கர்மங்கள் ஒன்றும் எஞ்சியிராமல் போய்விடுவதனால், அது ஸ்வர்க்க, நரக அனுபவமோ, மறுபிறப்போ இல்லாமல் நேராகப் பிறவியில்லாப் பெருவாழ்வான பரமபதத்தை அடைகின்றது.)

முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே

 பெரியதிருமொழி – 11.3.9.

என்கின்றார் திருமங்கை ஆழ்வார்.

 

ஆசைநீத்துள வாழ்க்கையதாயினும்
மோசனம்வரு மோவெனுமைய்யமோ
யோசனைவிடு வீர்செவிகொள்ளுவீர்
கேசவன்திரு நாமமகத்துவம்

(மோசனம் – விடுதலை, முக்தி)

ஆசையை அறவே விடுத்துள்ள வாழ்க்கை வாழ்ந்தால்கூட (தன்னுடைய தேவைகளுக்காக அனுதினம் செயல் செய்து கொண்டிருப்பதனாலும், எந்தச் செயலும் செய்யாமல் ஜடமாக இருப்பது இயலாது என்ற காரணத்தாலும்) முக்தி கிடைக்க வாய்ப்பிருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். அவ்வாறான சிந்தனைகளைத் துறந்து கேசவப்பெருமானின் திருநாம மகத்துவத்தை இனியும் கேட்பீர்களாக.

எந்த ஒரு மனிதனுக்கும் எந்தச்செயலையும் செய்யாமலிருந்து நாமபாராயணத்தில் மட்டுமே ஈடுபடுவது என்பது இயலாததனால் வாழ்க்கைக்குத் தேவையான செயல்களை, அதன் விளைவில் பற்றில்லாமல் செய்யவேண்டியது அவசியமே. ஆக, செயலை விடுதல் என்பதன் பொருள் செயல்களின் விளைவுகளால் வரும் பலன்கள்மேலுள்ள பற்றினையும், அப்பலன்கள் தான் எண்ணியவாறு அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களையும் விடவேண்டும் என்பதே. இவ்வாறு அவனவனுக்கு விதிக்கப்பட்டுள்ள செயல்களைத் துறக்காமல் (ஆனால் அதன் விளைவுகளில் பற்றுவைக்காமல்) திருநாமபாராயணம் செய்யப்படுமெனின் அவசியம் விமோசனம் கிட்டும் என்பதே இதன் பொருள்.

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வாராம் மாதோ! – வழிவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்.

 இரண்டாந்திருவந்தாதி – 20

என்கின்றார் பூதத்தாழ்வார்.

உடல்விட்டவுடன்முக்தி என்ற விதேக கைவல்யம் ஒன்றே மானுட வாழ்வின் பரமலட்சியம்; அதை அடைவதற்குள்ள உபாயம் நாமசங்கீர்த்தனம் முக்கியமாக உள்ள பக்தியொன்றுதான் என்பதுவே ஞானப்பானை வழங்கும் அறிவுரை. அதனால் அந்தத் திருநாம மகிமை மறுபடியும் எடுத்துரைக்கப்படுகின்றது.

சாதியிற்கடை யுற்றவனாயினும்
வேதமோதிடு மந்தணனாயினும்
நாதநாமம னேகமிருப்பதில்
ஓதலாமொரு நாமமுவப்புடன்

சாதியில் கடைநிலையில் இருக்கின்ற சண்டாளன் ஆனாலும், மறையோது வேதியன் ஆனாலும் எம்பெருமானின் நாமங்கள் அநேகம் இருப்பவற்றில் ஏதேனும் ஒரு நாமத்தை உள்ளன்புடன் பாராயணம் செய்ய ஆரம்பிக்கலாம். (அது நிச்சயம் முக்திக்கான வழியைத் திறக்கும்)

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தான் இல்லாத சண்டாள சண்டாளர் களாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே.

 – திருவாய்மொழி – 3.7.9.

(அனந்தகோடி புண்ணிய பாபங்கள் செய்துள்ள ஜீவர்களுக்கெல்லாம் ஒருபோல முக்திக்கு வழிகாட்டுவதே திருநாமஜபத்தின் ஆற்றலாகும்.)

(எழுசீர்க்கழிநெடிலடிச் சந்தவிருத்தம்)

நினைவோடிருக்குமொருநேரமோநிம்மதியானவேளைதனிலோ
கனவில்லமிழ்ந்து வுணர்வற்றவேளைதனையேமறந்தபடியோ
மனதில்விதண்ட பரிகாசமாக பிறிதொன்றுஎனயெண்ணியோ
தனதன்றிவேறு ஒருவர்க்குவேண்டி யாயினும்ஓதலுதவும்

(விதண்டம் – வீண்வாதம்)

சுயநினைவோடும், பூரணமான உள்ளுணர்வோடும்கூடி இருக்கின்ற நேரத்திலோ, அல்லது நிம்மதியாக ஓய்வு எடுக்கும் வேளையிலோ, நித்திரையில் ஆழ்ந்து கனவுகாண்கின்ற வேளையிலோ, அல்லது விழித்திருந்தும் மனதை அலையவிட்டுத் தன்னை மறந்தபடியிருக்கும் நேரத்திலோ, மனதில் வீண்வாதமாகவும், பரிகாசமாகவும் உள்ள எண்ணத்தோடுகூடியோ, மற்றொன்று எனத்தவறாக எண்ணியோ, அல்லது மற்றோருடைய நிர்பந்தத்திற்காகவோ, எவ்வாறானாலும் நாமஜபம் நிச்சயமாக முக்திக்குள்ள வழி திறக்கும்.

(விளையாட்டாகவோ, இளக்காரத்தோடோ, என்னவென்று உணராமலோ, எப்படி அருந்தினாலும் மருந்து நோயைத் தீர்க்கும் என்பதுபோல் சம்சாரநோய்க்குள்ள மருந்தான நாமபாராயணத்தை அருந்த எந்த வரையறையும் கிடையாது. அதாவது, எந்தெந்த விதத்தில் நாமஜபத்தை ஆரம்பித்தாலும் அது படிப்படியாக முன்னேறி, நாளடைவில் உள்ளத்தைப் பரிசுத்தமாக்கி, மனதின் முழு ஈடுபாடோடும், நிறைந்த இறைபக்தியோடும், பரிபூரண சரணாகதியோடும்கூடிச் செய்கின்ற நாமஜபவேள்வியாக முடிவடையும். நாமபாராயணத்தைத் தொடங்கியவர்களுக்கு முன்னேற்றமேயன்றிப், பின்வாங்கல் இல்லை என்பது பொருள்.)

”வேறு எவருடையதோ பெயர் என்ற சங்கேதத்திலோ, பரிகாசமாகவோ, திடீரென்று உண்டான மனக் குழப்பத்தினாலோ, வித்வேஷத்தோடுகூடியோ, எப்படியானாலும் விஷ்ணுநாமம் உச்சரிப்பது சகல பாபங்களையும் போக்கடிக்கின்றது.”

– பாகவதம், அஜாமிளோபாக்யானம். VI, 2-14.

மனதில் பக்தியில்லாதவனாக இறைவனைப் போற்றித்துதி செய்வதைப்போன்று அபிநயம் செய்தும் கூட மெய்யன்பர்கள் பெறுகின்ற பயனைப் பெற்றுவிட்டதாக நம்மாழ்வார் கூறுகிறார்.

கைய்யார் சக்கரத் தென் கருமாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமேயாடி
மெய் பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்றுகாப்பார்ஆர்?
ஐயோ! கண்ணபிரான்! அறையோ! இனிப் போனாலே

 – திருவாய்மொழி – 5.1.1.

எத்திக்கிருந்து மெந்நாளிலேனும் திருநாமமோதல்சுபமே
அத்தோடுநாளும்செவிகொண்டுகேட்பதாயினும்அருள்கூட்டுமே
பத்திப்பயத்து சித்தித்திடும்நம் பிறவிப்பயன்வினையறும்
முத்திக்குநல்ல வித்திட்டிடும்பரம பதமும்கிடைக்கவுதவும்

எந்த இடத்தில் இருந்துகொண்டும், எந்த நாளிலும் திருநாமபாராயணம் செய்வது சுபகாரியமே. அதுமட்டுமன்று, தினமும் பகவானின் நாமங்களைச் செவிகொண்டு கேட்பதாக இருந்தாலும் இறையருள் கூடும் என்பது நிச்சயம். பக்தி முழுவதுமாக மலர்ந்து அதன் பலனை அளிக்கும். அதன் விளைவாக நாம் பிறவி எடுத்ததன் பயன் கைகூடும். வினைகள் அறவே நீங்கிவிடும். முக்திக்கான வித்திட்டு, தேகநாசம் அடையும்போது சத், சித், ஆனந்த ரூபமான பரமபதத்தை அடையவும் வழிவகுக்கும்.

(புனிதமான செயல்களைத் தொடங்குவதற்கு நேரம், காலம், தகுந்த இடம் என்ற விவஸ்தைகள் உள்ளமையால் பரமபுண்ணியச் செயலான நாமவேள்விக்கும் அத்தகைய விதிமுறைகள் இருக்கலாமே என்று ஐயமுற்று, அப்புண்ணியச் செயலைத் தள்ளிப்போடத் தேவையில்லை. எத்தகைய அசுத்தமான இடமாயிருந்தாலும், எவ்வளவு மோசமான காலமாக இருந்தாலும் நாமஜபத்திற்குத் தடையாகாது. மாறாக நாமஜபம் அப்படிப்பட்ட இடத்தையும், காலத்தையும் சுபமாக மாற்றிவிடும் தன்மையுடையது.)

வினையாலடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் – நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக்கால்

 முதல் திருவந்தாதி – 65.

என்கிறார் பொய்கையாழ்வார்.)

(எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் )

தெளிவாகவேசிரீ தரதேசிகனும்பாத
ராயணரும்நாமமகிமை
வெளிவாக்கினாரரிய வேதாதிநூல்களும்
கீதையும்புகழுமதனை
உளமாரவேபத்திப் புளகத்திலாழ்ந்துஅரி
திருநாமமுண்டுமகிழ்வீர்
ஒளிர்நாமமகிமையை யுரைசெய்ததில்வந்த
பிழைபொறுத்திடுமிறைவா!

(பாதராயணர் – வேதவியாச முனிவர்; பத்திப்புளகம் – பக்தியால் உண்டாகும் நெகிழ்ச்சி)

பாகவத புராணத்துக்கு விரிவுரை எழுதிய ஸ்ரீதராச்சாரியாரும், பாகவதபுராணத்தை வடித்த வேதவியாச முனிவரும் மிகத்தெளிவாகத் திருநாம பாராயண மகிமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அரிதான வேதம் முதலான மறை நூல்களும், பகவத்கீதையும் இந்நாம மகிமையைப் புகழ்கின்றன. ஆகவே, உளமார்ந்த பக்தி கொடுக்கின்ற உள்ளநெகிழ்ச்சியில் மூழ்கி எம்பெருமான் ஹரியின் திருநாமத்தை உட்கொண்டு மகிழ்வீர்களாக.

மிகுந்த கீர்த்தியோடும் மேன்மையோடும் ஒளிவீசுகின்ற உன் திருநாமங்களின் மகிமையை எடுத்து விளக்கியதில் ஏதேனும் பிழை நேர்ந்திருக்குமாயின் அதைப்பொறுத்துக்கொள்வாயாக பகவானே!

(‘இறைவா’ என்ற மங்கலச் சொல்லால் [‘பகவானே’ என்று மூலநூலான ஞானப்பானையில்] நூல் முடிக்கப்பட்டிருக்கின்றது. அனைத்துச் செயல்களும் இறையர்ப்பணமாகவே தீரவேண்டும் என்பதனையும் மறுபடியும் இந்த அடிகளில் நூலாசிரியர் நினைவுறுத்துகின்றார்.

நரசிங்கப்பெருமானை பிரத்தியட்சமாகக் காணும் பேறு பெற்ற மகாத்மா ஆவார் ஸ்ரீதராச்சாரியார். இம்மகான் பகவத்கீதை, பாகவத புராணம் முதலான நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ளார். திருநாமஜப மகிமையை அவர் மிக விஸ்தாரமாகத் தன்னுடைய பாகவத விரிவுரை நூலான ஸ்ரீதரீயவியாக்கியானத்தில் எடுத்துக் கூறியுள்ளார். திருமாலின் உருவாகவே கருதப்படுபவர் ஸ்ரீ வேதவியாச முனிவர். பதினெட்டுப் புராணங்களும், இதிகாசமான மகாபாரதமும், பிரம்மசூத்திரமும் உலகமாந்தரின் நன்மைக்காக அவர் இயற்றினார். அவர் தன்னுடைய புகழ் பெற்ற ஸ்ரீமத்பாகவத புராணத்தை முடிக்கும்போதும் நாமஜபத்தின் மகிமையையே எடுத்துக் கூறுகிறார். அவ்வரிகளின் பொருள் இவ்வாறு:- “யாருடைய நாமசங்கீர்த்தனமானது எல்லாப் பாபங்களையும் அழிப்பதாக இருக்கிறதோ, எவரை வணங்குவதால் எல்லாத் துயரங்களும் துடைக்கப்படுகின்றனவோ, பரனான அந்த ஹரியை நான் வணங்குகிறேன்”.

வேதங்களும் எண்ணற்ற விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றனவெனினும் பலவிடங்களில் இத்தத்துவத்தையே முக்கியமாக அருளியிருக்கின்றன. எண்ணற்ற அடிகளில் ஸ்ரீபகவத்கீதையிலும் சரணாகதிக்கான வழியாக நாமஸ்மரணத்தைக் கைக்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.)

இக்கருத்தையே பூதத்தாழ்வாரும்

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் – ஓத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.

என்று கூறியுள்ளார்.

**************

மிகவும் எளிய நடையிலும், தத்துவரீதியான சர்ச்சைகளோ,எடுத்துக்காட்டுக்களோ இல்லாமலும் பூந்தானகவியால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் இன்றும் கேரள மண்ணில் மிகவும் புகழ் பெற்ற பக்திசித்தாந்த நூலாகத் திகழ்கிறது.

வேதங்கள், பகவத்கீதை முதலான அறநூல்களைப் படித்தறிந்து செய்யத்தகுந்த செயல்கள் எவை என்றறிந்து, அதற்கனுசரித்துச் செயல்படுவது என்பது இந்த யுகத்தில் எளிதானதன்று. அரிய சில புண்ணியாத்மாக்கள் மட்டுமே வேண்டதறிந்து செயல்படுவதற்கான பேறு பெறலாமென்றாலும் பரம பாமரமக்களுடைய கஷ்டநிலையை ஒதுக்கித்தள்ளக் கருணை இதயம் கொண்ட பூந்தான கவிக்கு இயலாததால் அப்படிப்பட்டவர்களையும் பயங்கரமான இப்பிறவிப்பெருங்கடலில் இருந்து கரையேற்றுவதற்காகவே அவர் வழிபடும் குருவாயுபுரேசனின் ஆணையால் பக்தசிரோமணியான அவரால் இந்த மேதகு நூல் இயற்றப்பட்டது. ஞானம் சம்பாதிப்பதற்கான உயர்ந்த தத்துவம் எள்ளுக்குள் எண்ணெய் என்பதுபோல் லயித்திருப்பதனாலேயே ‘ஞானப்பானை’ என்ற நாமம் இந்நூலுக்கு அளிக்கப்பட்டது எனலாம். சிரத்தையோடு இந்நூலைப் பாராயணம் செய்தாலே அது பக்தியையும், முக்தியையும் அனாயாசமாக அளிக்கும் என்பதில் ஐயமேயில்லை.

எழுதியது – உ.இரா.கிரிதரன்.

2 thoughts on “ஞான விருத்தம்

 1. pranams
  thanks a lot
  tis translation i was searching for a long time
  may lord krishna bless you
  keep continuing
  with tears out of happiness
  raman narasimhan

  1. A very nice and simple translation. Simple in the sense, any body can understand. If you are in Chennai/ if you happen to be in Chennai you may send a mail to me and I can provide a free Audi CD of Gnaana Viruthham, alon with the printed copy, which is a complementary copy form Sundara Simha Foundation.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s