பராசக்தி வைபவம்

Durga_Festival-Durgapuja-297(திருப்புகழ் “முத்தைத்தரு” நடையில் துவங்குவது)

முக்கண்ணுடை நக்கன் துணைநம!
மைக்கண்ணிம லைப்பெண் நம! நம!
தக்கன்குல சொக்கத் தனிநம!
துக்கந்தொலை யக்கை நம! நம!
தடையற பெருகிடு புனலென
அருளது பெருகிட பவமெறி
தீதாந்தவி ரந்தரி!  நாதாந்த புரந்தரி!

முக்கண்ணுடை– மூன்றுகண்களையுடைய, நக்கன்– சிவபெருமானின், துணை நம– சக்தியான உனக்கு நமஸ்காரம்; மைக்கண்ணி– மைய்யிட்ட அழகிய கண்களுள்ள, மலைப்பெண் நம நம– இமவானின் புதல்வியான உனக்கு மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம்; தக்கன் குல– தக்ஷனின் குலத்தில் (அவன் புதல்வி தாக்ஷாயணியாக) அவதரித்த, சொக்க– அழகுமிகுந்த, தனி– தனங்களையுடைய உனக்கு, நம– நமஸ்காரம்; துக்கம்– ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்னும் மூவகை துக்கங்களையும், தொலை– அழிக்கின்ற, அக்கை நம நம– மூத்தவளான உனக்கு மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம்; தடையற பெருகிடு– தங்குதடையின்றி பெருக்கெடுத்துவரும், புனலென– ஆறுபோன்று, அருளது பெருகிட– உனது திருவருளானது பெருகிவர (அதன்மூலம்), பவம்– இந்த சம்சாரமாகின்ற உலகவாழ்க்கை, எறி– கொட்டுகின்ற, தீ தான்– கொடுந்தீயைத்தான், தவிர்– (என்னை வாட்டாதபடி) நீ தவிர்ப்பாயாக (இல்லாதாக்குவாயாக), அந்தரி– துர்க்கையே!; நாதாந்த– மந்த்ரபீஜத்தின் பல அடுக்குகளான நாத நிலையில் முடிவிலுள்ள மஹாபிந்துவின் வடிவத்துடன் கூடிய, புரந்தரி– புரமெரித்த ஈச்வரனின் வடிவுடன் கூடியவளே!

எட்டுத்திசை முட்டித் த்ரிபுவன
வட்டத்தையு மெட்டிப் புடமதை
குட்டிக்குறி வெட்டித் தகரமு
கட்டிற்பெரு மட்டிற் கசடற
தகதக தகதக தகவென
இலகிடு நிகரறு நிகரென
ஞானாண்டம ருங்குடை மாதாண்டவ புங்கவி!

எட்டுத்திசை முட்டி– எட்டு திசைகளையும் மீறி, த்ரிபுவன வட்டத்தையும் எட்டி– மூன்று உலகங்களின் வரம்பையும் கடந்து, புடம் அதை– ‘அறிபவன்’, ‘அறியப்படுவது’, ‘அறிவு’ என்ற த்ரிபுடியையும், குட்டி– தகர்த்து, குறி– குணத்தை (ஸத்வ, ரஜோ, தமமாகும் முக்குணத்தையும்), வெட்டி– அழித்து, தகரமுகட்டில்– தகராகாசம் எனும் சூக்ஷ்ம வெளியில், பெருமட்டில்– உயர்ந்த நிலையில், கசடற– (ஆணவம், கன்மம், மாயை எனும்) தோஷங்கள் அற்றுப்போக, தக,தக,தக,தக,தக என– மிகுந்த ப்ரகாசம் வீசி, இலகிடு– ஒளிர்கின்ற, நிகர் அறு– தன்னிகரில்லாத, நிகர் என– தீபம் போன்று, ஞானாண்ட– பரஞான பீஜமான, மருங்குடை– அம்பரத்தில் விளங்குகின்ற, மாதாண்டவ– மஹா தாண்டவம் புரிகின்ற, புங்கவி– தெய்வப்பெண் நீ!</

மொத்தப்பிர பஞ்சத் தொகுதிச
மைத்தொப்பநி றுத்திச் சிறுகசெ
குத்துப்பொடி யொக்கத் தகரர
மித்துக்களி மெத்தச் சுடர்விட
பரவெளி தனிலர னுருவொடு
முதமுற நடமிடு வயிரவி!
ஏகாந்தல யங்கரி! பாதாம்புய மென்கதி!

மொத்தப் பிரபஞ்சத் தொகுதி– ஸமஸ்த ப்ரபஞ்ச வரிசைகளையும், சமைத்து– ஸ்ருஷ்டி செய்து, ஒப்ப நிறுத்தி– சீராக இயங்குமாறு அவைகளை நிறுத்திக் காத்தல் செய்து, சிறுக செகுத்து– பின்னர் ஸம்ஹாரகாலத்தில், அவைகளனைத்தையும் இல்லாதாகுமாறு அழித்து, பொடியொக்கத் தகர– பொடியாக அவைகள் தகர்ந்து நொறுங்குவதில், ரமித்து– இசையும்வண்ணம் அனுபவித்து, களி மெத்தச் சுடர் விட– ஆனந்த உன்மத்தம் மிகுந்து ஒளிர, பரவெளி தனில்– பராகாசத்தில், அரன் உருவொடு– சம்புவின் வடிவத்தில், முதமுற– மகிழ்ச்சி நிறைந்து, நடமிடு– தாண்டவம் செய்கின்ற, வயிரவி– பைரவியான நீ, (முடிவில்) ஏகாந்த லயம்கரி– ஏகாந்தமாக (ப்ரஹ்மஸ்வரூபிணியாக) உன்னிலேயே லயம் ஆகின்றனை. பாதாம்புயமென் கதி– (உனது) சரணத்தாமரைகளே உய்யும்படிக்குள்ள எனது வழியாகும்.

கப்பும்ப்ரபை துப்பும் பிறையொடு
முப்புஞ்சுர ரப்பும் மகுடவ
னப்புங்குழ லொப்பும் புருவநெ
ளிப்புஞ்சலி தப்பம் பரமென
தகையொடு தயையிடு ரவிமதி
நிகரிரு விழிமல ருடைபர
வாமானனி! நஞ்சணி காமாரிசு ரஞ்சனி!

கப்பும்– சூழுகின்ற, ப்ரபை துப்பும்– ப்ரகாசத்தை உமிழும், பிறையொடும்– சந்திரனின் பிறையையும், உப்பும்– கொந்தளிக்கின்ற, சுரர் அப்பு உம்– தேவநதியும் (கங்கை), மகுட வனப்பும்– தலையிலணிந்த கிரீடத்தின் அழகும், குழல்– தலமுடியின், ஒப்பும்– அழகும், புருவ நெளிப்பும்– தயைகூர உற்றுப்பார்ப்பதால் அமையும் புருவங்களின் வளைவும், சலிதப் பம்பரம் என– சுழன்றாடும் பம்பரம் போன்று, தகையொடு– கனிவோடு, தயையிடு– கருணை பொழிகின்ற, ரவி மதி நிகர்– சூரிய சந்திரர்களுக்கு நிகரான, இரு விழி மலருடை– இரண்டு விழிமலர்களையும் உடைய, பர வாம ஆனனி– மிகுந்த அழகுள்ள முகம் உடையவளே!, நஞ்சணி காமாரி– கழுத்தில் விஷம் தரித்த (காமனை வென்ற) சிவனாரை, சு ரஞ்சனி– நன்றாக மகிழ்விப்பவளே!

பச்சைத்தொயில் விச்சைக் கடிமிசை
செச்சைத்திரு கச்சைப் புனைபவள்
இச்சைப்படி துச்சிப் பசுபதி
மெச்சித்திடு முச்சக் குயவதி
மரகத மணிகழ லிசையினி
லுரகத மணிபர னுருகிடு
மாசாம்பவி சங்கரி!  பாசாங்குச சுந்தரி!

பச்சைத் தொயில்– பச்சை நிறம்கொண்ட அழகிய, விச்சைக் கடி மிசை– தாமரை (போன்ற) இடையின் மீது, செச்சை– சிவந்த, திருக்கச்சை– சீரிய புடவையை, புனைபவள்– கட்டுபவள்; இச்சைப்படி– விருப்பப்படி, துச்சி– அனுபவித்து, பசுபதி– சிவபெருமான், மெச்சித்திடும்– சிலாகிக்கின்ற, உச்ச– உயர்ந்த, குயவதி– ஸ்தனங்களை உடையவள்; மரகத மணி கழலிசையினில்– கால்களிலணிந்துள்ள மரகதப்பரல்கள் நிறைந்த சிலம்புகளின் இசையினால், உரகதம்– பாம்பு, அணி– அணிந்துள்ள, பரன்– சிவபெருமான், உருகிடு– மயங்குகின்ற, மாசாம்பவி– நெடிய சம்புவின் வடிவுற்றவளே!; சங்கரி– சங்கரியே; பாசாங்குச சுந்தரி– பாசமும், அம்குசமும் தரித்த அழகியே!

உக்கக்கர தக்கக் கயிலைம
ணிக்கொக்கக ளிக்கச் சதிரிடு
மொக்கொக்கவு கக்கும் கழலிணை
வைக்கத்தகு பொக்கப் புலமிது
அரியய னொடுசுர ரடிபணி
நிருபம வரதசு குணமயி!
சோமாங்கதி கம்பரி! வாமாங்கப ரம்பரி!

உக்கக்கர– அக்னியைக்கையிலேந்திய, தக்க– தகுதியுள்ள (சமர்த்தனான), கயிலைமணிக்கு– சிவபெருமானுக்கு, ஒக்க– சமமாக, களிக்க– இருவரும் ஆனந்திக்க, சதிருடு– நடனம் செய்கின்ற, மொக்கொக்க– மென்மையான பூமொட்டுகள்போல, உகக்கும்– உயர்கின்ற, கழலிணை– நினது இரு திருவடிகளும், வைக்கத்தகு– வைப்பதற்குத் தகுதியுள்ள, பொக்க– பொலிவுள்ள (அல்லது பொய்மை நிறைந்த), புலமிது– இடம் (அல்லது அறிவு) என்னுடையது. அரி, அயனொடு சுரர்– விஷ்ணுவும் , ப்ரம்மனும், மற்று தேவர்களும், அடிபணி– அடிபணிகின்ற, நிருபம– ஒப்பற்ற, வரத– வரங்களை அளிக்கின்ற, சுகுணமயி– திவ்யகுணங்கள் நிறைந்தவள் (நீ), சோமாங்க– சந்திரனை உடலில் அணிந்த, திகம்பர– திகம்பரனான சிவனாருக்கு, வாமாங்க– இடப்புறத்திலிருக்கும், பரம்பரி– இறைவி (நீ)!</em
 
திட்பத்தொடு துட்டத் திரிமல
முட்புக்குந டத்திப் புலனொடு
நட்புற்றுகெ டுத்துப் பொறையென
ஒட்பத்தைம றைத்துக் குணமது
சிதறிட நெறிகெட நினைவற
பதறிய றுதிபெறு மவநிலை
நாயேன்பெறு முன்னருள் தாயாம்பரை தந்திடு!
 
திட்பத்தொடு– திண்மை(உறுதி)யோடு, துட்டத் திரி மலம்– ஜீவ மலங்களாகின்ற ஆணவம், கன்மம், மாயை எனும் தீய மும்மலங்களும், உட்புக்கு நடத்தி– உள்ளே வருகை செய்து, புலனொடு– ஐம்புலன்களுடனும், நட்புற்று– நட்பைச்சம்பாதித்து, கெடுத்து– அப்புலன்களின் போக்கைக் கெடுத்து, பொறையென– மலைபோல, ஒட்பத்தை மறைத்து– அறிவினை மறைத்து, குணமது– ஸத்வகுணமானது, சிதறிட– சிதறிப்போக, நெறிகெட– நன்னெறியனைத்தும் தொலைந்து, நினைவற பதறி– நினைவழிந்து பதட்டமுற்று, அறுதி பெறும்– மரணம் வாய்க்கும், அவநிலை– சம்சாரத்தின் இழிநிலையானது, நாயேன்– நாயினும் கடையனான அடியேன், பெறும் முன்– பெறுவதற்கு முன்பாக, அருள்– நினது இன்னருளை, தாயாம் பரை– அன்னையான பராசக்தி நீ, தந்திடு– தந்திடுவாயாக!
 
பித்தம்குடை குத்துங் கபமொடு
மொத்தங் கெடுமத்தம் உளையுவ
ருத்தம்பட நித்தம் மெலியநொ
தித்துன்னடி சித்தந் தனிலற
விடுபடு கொடுகதி நொடியுமி
வடிமையை கடிவது தடையுக
நானேங்குதல் கண்டுட னேதாங்கயி குண்டலி!

பித்தம்– பித்தநோயாலும், குடைகுத்தும்– குடைச்சல் நோயாலும், கபமொடு– கபம், சீழ் முதலானவை பெருக்குகின்ற நோய்களாலும், மொத்தம் கெடு மத்தம்– மொத்தமாக கெடுதல் கொடுக்கின்ற மனநோய்களாலும், உளையு வருத்தம் பட– உளைச்ச்சல் தருகின்ற வருத்தத்தை அனுபவித்து, நித்தம் மெலிய நொதித்து– அனுதினம் இளைத்து அயர்வுற்று, உன்னடி– நினது திருவடிகள், சித்தந்தனில் அற– மனதிலிருந்து அறவே, விடுபடு– மறைந்து போகின்ற, கொடு கதி– கொடிய யோகம், நொடியும் இவ்வடிமையை– நொடிப்பொழுதுகூட இந்த அடிமையான என்னை, கடிவது– நெருங்குவதனை, தடையுக– தடுத்து நிறுத்துவாயாக; நானேங்குதல் கண்டு– நான் வாடுவது கண்டு, உடனே தாங்கு அயி குண்டலி– உடன் எனைத் தாங்கிக்கொள்வாயாக, குண்டலி வடிவினளான அன்னையே!

பெட்டும்பல துட்டும் பெருகிய
ரட்டும்பட சட்டந் தனிலிழி
கட்டுண்டும ருட்டம் படுவுயிர்
சட்டென்றொரு வட்டம் வெளியுற
பொழுதிது பழுதுற நழுவிட
புழுதியில் விழுதிடு தழையென
தீதாங்கதி யெஞ்சுதல் நீதாந்தடு வஞ்சனி!

பெட்டும்– பொய்மையும், பல துட்டும் பெருகி– பலவிதமான தீய குணங்களும் அதிகமாகப் பெருகி, அரட்டும் பட– (நான் என்ற) அகந்தையும் கொண்டு, சட்டம் தனில்– உடலினுள்ளில், இழிகட்டுண்டு– இழிபட கட்டுண்டு, மருட்டம்– மயக்கம், படுவுயிர்– கொண்டிருக்கின்ற இவ்வுயிரானது, சட்டென்று– எதிர்பாராத வண்ணம், ஒருவட்டம் வெளியுற– ஒருமுறை வெளியேறிவிட (மரணமேற்பட்டுவிட), பொழுதிது– கையிலுள்ள இந்த நேரமானது, பழுதுற– பாழாகும்விதம், நழுவிட– நழுவிப்போய்விட, புழுதியில் விழுதிடு தழையென– புழுதியில் விழுந்து வீணாகும், ஒன்றுக்கும் உதவாத சருகுபோலாகின்ற, தீதாம் கதி எஞ்சுதல்– கொடிய கதி மட்டுமாக மிஞ்சுவது, நீ தான் தடு வஞ்சனி– மலைமகளான நீயே தடுப்பாயாக!

சுத்தத்தனி வித்தைப் பரையுனை
சித்தத்திலி ருத்தித் தவமொடு
நித்தப்பெரு பத்திப் புரிகுண
வித்தற்கருள் மெத்தத் தருபவ
ளெழிலுமை வடவரை மடமயில்
வலிதரு கடுவினை கெடவருள்
நீலாஞ்சனி! பஞ்சவி! மூலாம்புயு கஞ்சுகி!

சுத்தத்தனி வித்தைப் பரையுனை– பரையும் சுத்தவித்யா ரூபிணியுமான உன்னை, சித்தத்தில் இருத்தி– மனதில் த்யானம் செய்து, தவமொடு– மிகுந்த நிஷ்டையோடு, நித்தப் பெரு பத்திப் புரி– அனுதினம் மிகுந்த பக்திகொளிகின்ற, குணவித்தர்க்கு– குணசீலரான தவசிகளுக்கு, அருள் மெத்தத் தருபவள்– மிகுந்த அருளாசியைக் கொடுப்பவளான, எழிலுமை– திவ்யஸௌந்தர்யமுள்ள உமையும், வடவரை மடமயில்– இமயமலையீன்ற அழகிய நங்கையுமான நீ, வலிதரு கடுவினை– துன்பம் தரும் கடினமான வினைகள் (தரும் பலன்கள்) கெட அருள்– அழியுமாறு அருள்புரிவாயாக!, நீலாஞ்சனி– கருநீல வண்ணமுடையவளே (காளியின் உருவினளே)!, பஞ்சவி– ஐந்து முகங்களுள்ள சிவ வடிவினளே!, மூலாம்புய– மூலாதார கமலத்தில் விளங்கும், கஞ்சுகி– குண்டலிப்பெண்ணே!

****

(எழுதியது : உ.இரா.கிரிதரன்.)

 

 

One thought on “பராசக்தி வைபவம்

  1. மிக நன்று,

    அன்னை ஆதி பராசக்தியின் அருட்செயல்களை அழகாக வருணித்துள்ளீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s