மாகாளி வணக்கம்

அமலமணிமதிவதனிபுரமதனகாமினி
ஆனந்தநடனமிடு நாதாந்தயோகினி
அசரசரபுவனகணமருளொடுபடைத்துநீ
ஆளுமாகாளிகாதேவிமாயாமயி

(நிர்மலமான மணிபோன்றவளும், முழுமதிபோன்ற முகமுடையவளும், புரமெரித்த சிவபெருமானுக்குப் பிரியமானவளும், ஆனந்தநடனம் புரிகின்ற நாதாந்த யோகினியானவளும், அசைகின்றவையும், அசையாதவையுமான உலகங்களின் தொகுப்புகளை அருளுடன் படைத்து அவற்றை ஆளுகின்றவளும், மாயாவடிவினளுமான தேவி மகாகாளியே!)

உளமுறையு மதுலபர ஜனனிசிவமானினி
ஊழைக்குறித்தஞ்சுமேழைக்கிரங்குநீ
நிமலநிரு பமபரம மகிமைநிறை சக்தியே
நின்கருணையின்றி யெய்தாதுமெய்பக்தியே

(எனது உள்ளத்தில் உறைந்த இணையற்ற உயர்ந்த அன்னையே! சிவபெருமானால் மதிக்கப்படுபவளே! ஊழ்வினையைக்குறித்து அஞ்சுகின்ற எளியவனான என்னிடம் இரக்கம் காட்டுவாயாக. நிர்மலமான, ஒப்புயர்வற்ற மிகஉயர்ந்த மகிமைபெற்ற சக்தியே! உனது கருணையில்லாமல் உண்மையான பக்தியை அடைய முடியாது!)

திமிருதிரை நரளியென திரளுமிருளளகமும்
திக்கெட்டுமெட்டியே முட்டுமிருள் கூட்டியே
இரவிமதியெரியனலுமொளிருவிரிவிழிகளில்
ஈரம்பரந்துதயை யூறும் நிரந்தரம்

(திமிர்த்து எழுகின்ற அலைகளோடுகூடிய கடல்போன்று திரண்டு விரிந்த உனது கூந்தல் எண்திசையும் பரந்து இருளைக்கூட்டுகின்றது. சூரியனும், சந்திரனும், எரிகின்ற நெருப்பும் ஆகி ஒளிவிடும் உனது அகன்ற விழிகளில் நிரந்தரமாக ஈரம் நிரம்பி கருணை பொழிந்துகொண்டேயிருக்கின்றன. நரளி – கடல்; அளகம் – கூந்தல்)

நிலவுநிகரமலமுகமதனிலொளி பரவிடும்
நித்திலமணித்திரள்விரித்ததென பற்களும்
சிகரமெனவுயருமொரு கரியதிருவுடலதிற்
சிங்காரமாயிலகு கங்காளமாலையும்

(நிலவுக்கு நிகரான உனது தெளிந்த முகந்தனில் முத்துமணிகளைச் சிதறவிட்டதுபோன்று பற்கள் ஒளிவீசுகின்றன; சிகரம் போன்று நெடியதான உனது கருவண்ண உடலில் மிகவும் அழகாக தலையோடுகளின் மாலை இலங்குகின்றது. நித்திலம் – முத்து; கங்காளம் – தலையோடு)

நலிவுகெட அபயவர மருளுமிரு கைகளும்
நாந்தக கபாலங்க ளேந்துமிருகைகளும்
கனகமணிவடமிழையுமெளியயிடைசந்தமும்
கிண்கிணிசதங்கையணி செங்கமலபாதமும்

(துன்பம் நீங்கும் வண்ணம் அபயமும், வரதானமும் செய்கின்ற இரண்டு கைகளும், வாளும், கபாலமும் ஏந்திய மற்றிரண்டு கைகளும், பொன் மணிகள் ஒளிவீசும் வடம் அணிந்த அழகான மெல்லிய இடையும், கிண்கிணிச் சதங்கைகள் அணிந்த செந்தாமரைபோன்ற பாதங்களும் திகழ்கின்றன. நாந்தகம் – வாள், சந்தம் – அழகு)

துரிததுடிபறையதிர பரசிவசமானையாய்
தோராநடம்புரி கராளாங்கிபுங்கவி
துரிதமெனவுறுமிவருகரும வினைமுழுவதும்
தூளாக்குவாயாதி மாகாளிசாம்பவி

(அதிவேகத்தில் உடுக்கு, பறை முதலானவை அதிரும்படி முழங்க பரமசிவனாருக்கு நிகராக முடிவில்லாத நடனம் புரிகின்ற கருமைநிற மேனிகொண்ட தெய்வநங்கையே! துன்பங்களாகக் கர்ஜித்துக்கொண்டு வரும் கர்மவினைகள் யாவற்றையும் தூள்செய்து அழிப்பாயாக சாம்பவியான ஆதி மஹாகாளியே! சமானை – நிகருள்ளவள்; தோரா – தீராத; கராளாங்கி – கறுத்த உடலுள்ளவள்; உறுமி – கர்ஜித்து)

தமவிருளி லுழலுமென தகமொரும யானமே
தாபமெழுமாசையெனும் கூகைகளின் கூவலும்
பழவினைக ளெனுமலகை களினலற லும்நிறைப்
பாழ்மனச்சுடலையிதி லாடிமகிழ்நீலியே

(அறியாமையாகின்ற இருட்டில் தவிக்கின்ற எனது மனமும் ஒரு மயானத்திற்கு நிகரானதே. மிகுந்த தாபத்தைத் தருகின்ற ஆசைகளாகும் ஆந்தைகளில் கூவல்களும், விடாது தொடர்கின்ற கர்மவாசனைகளான பேய்களுடைய அச்சுறுத்துகின்ற அலறல்களும் நிறைந்த எனது பாழுற்ற மனமான சுடுகாட்டில் உன் விருப்பம் போல ஆடி மகிழ்வாயாக நீலவண்ணமுடைய மாகாளியே! தமம் – அறியாமை, கூகை – ஆந்தை, அலகை – பேய்)

துரிதமொடு குடிலமதி வெறிதருமயக்கமும்
தவிடுபொடியாகவே நடமிடுசநாதனீ
தகதிமித தகிடபம் திமித நம தகிட ஹும்
தாம்க்ரீம் துடித்தொனியி லாடிடுகசூலினி

(இவ்வாறான எனது மனமாகும் சுடலையில் துன்பங்களும், நேர்மையற்ற புத்தியின் வெறித்தன்மையால் விளையும் மதிமயக்கமும் தவிடுபொடியாகும் வண்ணம் நடனம் புரிவாயாக அழிவற்ற அன்னையே! உடுக்கையின் தொனியில் உனது மந்திர பீஜாக்ஷரங்கள் ஒலிக்க ஆடுவாயாக சூலமேந்திய மாகாளியே! குடிலமதி – குறுகிய புத்தி; துடி – உடுக்கை)

அநவரத மெனதுமன மதிலுயரு மளவிலா
ஆசாகிலேசவும் கூசாத செயல்களும்
அகிலவுல கரசிபரை யுனதுவிளை யாடல், நீ
ஆட்டுவித்தாற்கூத்து காட்டுமொரு பாவை நான்!

(இடைவிடாது எனது மனதில் உதித்துக்கொண்டேயிருக்கின்ற ஆசைகளால் விளையும் கவலைகளும், அவ்வாசைகளை நிறைவேற்ற கொஞ்சமும் கூசாமல் செய்கின்ற செயல்களும் ஜகதீச்வரியான உனது விளையாடல்களேயன்றோ! நீ ஆட்டுவித்தபடி கூத்தாடுகின்ற வெறும் பொம்மையே நான்! அநவரதம் – இடைவிடாது; கிலேசம் – கவலை)

எனதுயிருமிறையுறவு மெனமுழுதும் நீ , யுனை
நண்ணினேனன்னையே காக்கநீ என்னையே
உதரமதி லினியுமுழ லுவதுதவி ரந்தரி
உத்துங்கமோனநிலை கூட்டியெனையாதரி

(எனது உயிர், எனது கடவுள், எனது உற்றமும் உறவும் என அனைத்தும் நீயே! அன்னையான உன்னை அணுகினேன், என்னை காப்பாயாக. மறுபடியும் அன்னை வயிற்றில் அவதிப்படுவதை (அதாவது, பிறப்பை) இல்லாமலாக்குவாயாக விண்ணவளான காளியே. உயர்ந்த மோனநிலையான யோக அவத்தையை அளித்து ஆதரிப்பாயாக! உதரம் – வயிறு; உழலுதல் – அல்லலுறுதல்; உத்துங்க – உயர்வான)

கதியுனது கமலபத மெனகருது மென்னையே
காத்துகரையேற்று பரமார்த்தசுகபோதினி
இதமொடெனையடிமைகொள இதுதருணமாகுமே
ஏகாந்தஞானவெளிவேதாந்தமோனமே

(உயர்வான மெய்யின்பத்தையுணர்த்துபவளே! உனது திருவடித்தாமரைகளையே கதியென்று நம்பியிருக்கும் என்னை ரக்ஷித்து கரையேற்றுவாயாக. உபநிஷத்துகள் ஓதுகின்ற ஏகாந்த ஞானவேளியிலுள்ள மௌன சொரூபமே! கனிவுடன் எனையாட்கொள இதுவே சிறந்த தருணமாகும். பரமார்த்தசுகம் – மெய்யின்பம்; இதம் – அன்பு)

துதிபணியுமுனதுசுதனெனதுகதிநோக்கிநீ
தூக்கநிலைநீக்கியெனை தூக்கிவிடுவாயெனில்
பவதிமிரபயமுமறமருளகலும், உனதருள்
பாவம்பொடித்து வருசாவுந்தொலைக்குமே

(துதிபணிகின்ற உனது பிள்ளையான எனது நிலைமையைப் பார்த்து எனது மாயாமயக்கத்தை நீக்கி எனை உய்விப்பாயெனில் பவமாகின்ற இருட்டின் பயம் நீங்கி மருட்சியகலும். உன்னுடைய அருளானது பாவங்களைத் தூளாக்கியழித்து, மீண்டும் மீண்டும் வருகின்ற மரணத்தை (பிறப்பிறப்புக்களை) இல்லாதாக்கிவிடும். சுதன் – பிள்ளை; திமிரபயம் – இருட்டின் அச்சம்)

அடிபணியுமடியவரின் மனவெளியில் உலவிடும்
ஆனந்த நிஜபோத மௌன ஸம்பாஷணி
ஜய ஜய மகாகாளி ஜய ஜய புராதனி
ஜயஜய தயாமயி பரசிவமனோகரி

(உன்னடிபணிகின்ற மெயன்பர்களின் மனவெளியில் உலாவருபவளே! தூய ஆனந்தமான மெய்யறிவின் மௌன மொழியில் அவருடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பவளே! புராதனியான மகாகாளி, கருணை நிறைந்தவளே, பரமேச்வரனுக்குப் பிரியமானவளே! உனக்கு எப்போதும் ஜயமுண்டாகட்டும்!)

******
இயற்றியது: உ.இரா. கிரிதரன்.