மாதங்கி அட்டகம்

 

   

1.காவிமாலையதி யாய்ப்பராகமதைத்
    தூவுமார்பில்மிகு தகையுடன்
  கவினரத்தமணி புட்பராகமர
    கதமிழைத்தபல காழ்களும்
 
மேவுவாரணநி கர்கழுத்திலொளிர்
   வாலவாயமணி யாரமும்
  மின்னுமணிகள்பல வண்ணமாயணியு
   மன்னையேயருளை நண்ணியே
 
பாவியேனுனது பாதபங்கயதி
   யானமேகதிய தாக்கியே
  பரவசத்துடனுள் ளுருகியேத்துமொரு
   பதவிதந்தருள்வை தேவியே
 
தாவியேயெனைவி டாதுழற்றுவினை
   தகரநோக்கியருள் புரிவையோ
  வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

காவி- செங்குவளை மலர்; பராகம்- மகரந்தப்பொடி; தகை- பொருத்தம், அழகு; கவின்- எழில்; அரத்தம்- பவளம்; மணி- மாணிக்கம்; காழ்- வடம்; வாரணம்- சங்கு; வாலவாயம்- வயிடூரியம்; நண்ணி- அணுகி; ஏத்தும்- துதிக்கும்; உழற்றும்- அலையச்செய்யும்; தகர- பொடிபட; சுகம்- கிளி; குலாவும்- அளவளாவும்; மாதங்ககோதை- மாதங்க முனிவரின் புதல்வி.

செங்குவளைப் பூக்களால் தொடுக்கப்பட்டு அணிந்திருக்கின்ற மாலையானது மிகுதியான மகரந்தப் பொடியைத் தூவுகின்ற மார்பில் பொருத்தமான விதத்தில் அழகிய பவளம், மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் முதலானவையால் இழைத்த பலவிதமான ஹாரங்களையும், உயர்ந்த வெண்சங்கையொத்த கழுத்தில் மிளிர்கின்ற வயிடூரியம் பதித்த மணியாரத்தையும், ஒளிவீசும் உயர்ந்த கற்கள் பதிக்கபெற்ற பலவிதமான அணிகலன்களையும் அணிகின்ற அன்னையே,  உன்னருளை நாடி உனது திருவடித் தாமரைகளின் தியானமே கதியாகக்கொண்டு எக்காலத்தும் பரவசத்தோடு மனமுருகி மெய்யான பக்தியுடன் உன்னைத் துதிக்கும் பெரிய பதவியை இப்பாவியேனுக்குத் தந்தருள்வாயாக.   என் மீது பாய்ந்து என்னை ஒருக்காலும் விடாது கலக்கி உழலச்செய்யும் ஊழ்வினைகள் யாவும் பொடிபடும் வண்ணம் உன் கடைக்கண்பார்வையை என் மீது செலுத்தி தயை புரிவாயா?  வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்க முனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே. 

 

2.சில்லையார்த்திடுக தம்பகானமிசை
   இந்த்ரநீலமணி மேடையில்
  சீரொடங்குசமும் பாசமக்கமணி
   யேடுமேந்திவெகு சேடுடன்

நல்லவல்லகியெ னும்விபஞ்சிகையை
   மீட்டியேயுவகை யீட்டுவை
  நறுவுசெங்குவளை யாரமாறிலணி
   ஆறணீசன்மகி ழரிவையே
 
சல்லபிக்குமொரு சாரிகைப்பனுவ
   லுல்லசத்தொடுர சித்திடும்
  சதுரையானகலை வாரியேசகல
   சுருதிசாரையா மன்னையே
 
அல்லல்நீக்கியெனை யாட்கொளகிலசெக
   மாளுமம்பிகைசி வானியே
  வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

சில்லை- சில்வண்டு; ஆர்த்திடு- ஒலித்திடும்; சேடு- அழகு; விபஞ்சிகை- வீணை; நறுவு- சுகந்தமுள்ள; ஆறணீசன்- சடையில் நதியணிந்த சிவபெருமான்; அரிவை- நங்கை; சாரிகை- கிளி; பனுவல்- சொல், பாட்டு; சதுரை- திறமிக்க; வாரி- கடல்; சாரை- சாரமானவள்.

சில்வண்டு ரீங்காரம் செய்கின்ற கதம்பவனத்தில் இந்த்ரநீலமணியாலமைக்கப்பட்ட மேடையில் சீர்மிகு அங்குசம், பாசம், அக்ஷமாலை, ஏடு முதலானவையை ஏந்தி மிகையான அழகுடன் உத்தமமான வல்லகி என்ற பெயர்கொண்ட வீணையை வாசித்துக்கொண்டு ஆனந்தம் எய்துகின்ற, மணம்வீசும் செங்குவளைமலர்மாலையை மார்பில் அணிகின்ற, சிவபெருமானுக்கு உவகையைக் கொடுக்கும் பெண்கொடியே! கொஞ்சி விளையாடும் கிளிப்பிள்ளையின் பேச்சுக்களை உல்லாசத்தோடு ரசிக்கின்ற திறமிக்க கலைகளின் கடலானவளே! வேதங்களின் சீரியமுடிபாகவுள்ள அன்னையே! அகிலப்ப்ரபஞ்சத்தையும் ஆளுகின்ற அம்பிகையே! சிவனின் பங்கே! வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே. என் துன்பங்களை நீக்கி என்னை ஆட்க்கொள்வாயாக.

 

3.தேனினும்இனிய தத்தைவாணியிலு
   வந்துபாடலியின் மயலினால்
  தரளவிழிகளரு ணாங்கமாய்க்கவிய
   அருளுமானந்த மத்தையே
 
மோனமாம்பரம ஞானமாநிதிய
   மானயோகமுறை சேரலால்
  மூலகந்தமதிற் முகையுகுண்டலினி
   முடியிலேறிதரு நூக்கலால்
 
வானமற்றுமழை கொட்டுவண்ணமென
   தாவியும்மனமு மாரவே
  வந்தமிர்தமதில் மூழ்குவித்திடுமுன்
   வல்லமைஅறிய வல்லனோ
 
ஞானமானினிபி னாகிநாடுமணி
   மீனலோசனிப வாநியே
  வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

தத்தைவாணி- கிளிப்பிள்ளையின் பேச்சு; பாடலி- பாதிரிப்பூவிலிருந்து எடுக்கப்படும் கள்; மயல்- மயக்கம்; தரளவிழிகள்- அலைபாயும் கண்கள்; அருணாங்கம்- செம்மைபடர்ந்த; கவிய- லேசாக மூட; மத்தை- மயக்கமுள்ளவள்; மாநிதியம்- பெருஞ்செல்வம்; மூலகந்தம்- மூலாதாரம்; முகையும்- அரும்பும், பருவமடையும்; நூக்கல்- தூண்டுதல்; அற்று- அறுபட்டு; ஆர- நிறைவுபெற; மானினி- மங்கை; பினாகி- சிவபெருமான்.

தோளில் ஒயிலாக ஏந்தியிருக்கும் கிளியின் தேனினும் இனிய பேச்சுக்களில் மனமுவந்து, பாடலிமது அருந்தியதாலுண்டான மயக்கத்தால் விழிகள் செந்நிறமடைந்து ஏகாக்ரமாய்க்குவிந்து லேசாகமூடப்பட்ட நிலையில் அருள்பொழிகின்ற ஆனந்த மயக்கம் கொண்ட தேவியே! மோனநிலையாகின்ற உயர்ந்த ஞானப்பெருஞ்செல்வமான யோகமுறையின் கைகூடலால் மூலாதாரத்தில் மலர்ந்த (பருவமடைந்து நாதனை நோக்கி விரைகின்ற) குண்டலினி ஸஹஸ்ராரத்தில் ஏறி விளைவிக்கின்ற தூண்டுதலால் வானமறுந்து மழைகொட்டுகிறதோ எனும் வண்ணம் என்னுடைய ஆத்மாவும், மனமும் பூரணமான நிறைவுபெறப் பொழிகின்ற அமிர்தச்சொரியலில் முழுகச்செய்கின்ற உனது வல்லமையை நான் அறியவல்லவன் ஆகமாட்டேனோ? ஞானமங்கையே, சிவனார் நாடும் உத்தமப் பெண்மணியே, அங்கயற்கண்ணியே, பவாநியே, வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே.. 

 

4.திசையனைத்துமுன தடிபணிந்துதொழு
   தேத்ததிவ்வியவி பஞ்சியில்
  கசியுமதிவிமல உசிதமாம்சகல
   நொசிவொழித்துவகை கூட்டிடும்
 
இசையிலானந்த கலிகையாய்மதிம
   யங்கியேசிகர மசைவதால்
  இடைவிடாதுவளு கடிகதம்பதொடை
   உரசுமுத்தமப யோதரி
 
நசைதுளும்புகயல் நயனிமுடியிலணி
   நிசியினிறைவிசிறு மொளியினால்
  நீலகாந்தமணி போலமிளிறுவிரி
   வேணிகொண்டநய வாணியே
 
விசையையொத்தவுடல் வீழுமுன்விசனம்
   நீக்கியுனதுதயை தேக்குவாய்
  வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

விபஞ்சி- வீணை; கசியும்- ஒழுகும்; நொசிவு- வருத்தம்; கலிகை- மலர்மொட்டு; சிகரம்- தலை; உவளும்- துள்ளியசையும்; கடி- மணம்பொருந்திய; தொடை- மாலை; உத்தமபயோதரி- உயர்ந்த தனங்களையுடையவள்; நசை- ஈரம், கனிவு; நிசியினிறை- சந்திரன்; விசிறும்- வீசுகின்ற; வேணி- தலைமுடி; விசை- யந்திரம்; விசனம்- வருத்தம்; தேக்குதல்- கூட்டுதல்.

பத்துத்திசைகளும் உனது திருவடியைப் பணிந்து தொழுது துதிசெய்ய, திவ்யமான வீணையிலிருந்து ஒழுகுகின்ற அதிவிமலமான, உசிதமான, எல்லாவித வாட்டங்களையும் அகற்றி உவகையைக் கூட்டுகின்ற இசையால் ஆனந்தமலரென மதிமறந்து அவ்வப்போது தலையசைவதால் சதா துவண்டு ஆடிக்கொண்டிருக்கும் மணம் பொருந்திய கதம்ப மாலை உரசிக்கொண்டிருக்கும் உத்துங்க தனங்களோடு கூடியவளே, கருணைமிகுதியால் ஈரம் கசிகின்ற கயல்விழியாளே, முடியில் சொருகியுள்ள பிறைவீசும் ஒளியால் நீலகாந்தமணிபோன்று ப்ரகாசிக்கின்ற விரிந்த கூந்தலோடு கூடியவளே, நயமான மொழியோடுகூடியவளே, வெறும் இயந்திரத்தையொத்த எனது உடல் வீழுமுன்பாக என்னுடைய வருத்தங்களைக் களைந்து உன் க்ருபையைக்கூட்டித் தருவாயாக. வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே..

 

5.பாதகங்களெதி லும்படாதவனி
   மீதில்வாழவழி செய்தலும்
  போதமானபர மோனயோகநிலை
   கேதமின்றிவச மாதலும்
 
கோதிலாதபடி ஈதலும்குணம
   தீதநன்னெறியி லாதலும்
  நாதைநின்னருளி னாற்பயக்குமொரு
   போதைநானடைதல் வைகுமோ
 
கீதமோடுபல ஆடலோடும்விளை
   யாடுமாதங்க செல்விகள்
  சூழநீபமலர்ச் சோலையில்லுலவு
   சீதசேகரிசி வாநியே
 
வீதமோடுபல ஆமயாதியிடர்
   பீதிநீங்கவரு ளீயையோ
  வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

அவனி- உலகு; போதமான- ஞானமான; கேதம்- கிலேசம்; கோது- குற்றம், பயனின்மை; அதீத- மிக அதிகமான; நாதை- தலைவி; பயத்தல்- கைகூடல்; போது- வேளை, பொழுது; வைகுமோ- காலதாமதமாகுமோ; நீபமலர்- கதம்பமலர்; சீதசேகரி- திங்களணிந்த முடியினள் (சீதன்-சந்திரன்); வீதம்- வறுமை; ஆமயாதி- நோய்நொடிகள்.

தீவினைகளில் அகப்படாமல் இந்த உலகத்தில் வாழ வழிசெய்தல், ஞானநிலையான உயர்ந்த யோகமாகிய மோன அவத்தை எந்த இடையூறுமின்றி வசமாதல், குறையிலாதபடியுள்ள பரோபகாரத் தன்மை, குணங்களை அதிகமான நன்னெறியில் செலுத்தல் முதலான பேறுகள் தலைவியான உனது அருளினால் கைகூடுகின்ற காலத்தை நான் அடைய இனியும் தாமதமாகுமா? பாடியாடி விளையாடும் மாதங்ககன்னிகைகள் புடைசூழ கதம்பமலர்ச்சோலையில் பவனி வருகின்ற தேவியே, இளம்பிறை சூடுபவளே, சிவநங்கையே, வறுமையும், நோய்நொடிகளும், துன்பங்களும், பயமும் நீங்க அருள் புரியமாட்டாயா? வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே..

 

6.கோடமற்றுவளர் சோதிமேனியள
   னாதிமூலபரை யானவள்
  வீடளிக்குமமு தானவள்சதுர
   பூபுரத்தினுள டங்கிடும்
 
சோடசாரநடு வேவிளங்குமிரு
   அட்டதோடகவ ரப்பினுள்
  கூடமாய்த்திகழு யோனிநேமிநடு
   வேயிலங்குகுறி மேவியே
 
சேடமின்றிசக லத்திலும்விரவி
   பீடொடசரசர புவியெலாம்
  செவ்வையோடுபரி பாலனம்புரியும்
   அவ்வையுன்னருள பாரமே
 
வாடிநாடிவரு மதலைதுயரகல
   வகையறிந்தருளு சனனியே
 வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

கோடம்- எல்லை; வீடு- மோக்ஷம்; சதுரபூபுரம்- நான்கு புறமும் வாயில்களுள்ள சதுரக்கட்டம்; சோடசாரம்- பதினாறு ஆரங்களுள்ள வட்டம்; அட்டதோடகம்- எட்டு இதழ்களுள்ள தாமரை; நேமி- சக்கரம்; யோனிநேமி- கீழ்முகமாகவுள்ள சக்திமுக்கோணம்; குறி- பிந்து; சேடம்- மீதி, குறைவு; விரவி- வியாபித்து; பீடு- பெருமை; செவ்வை- செப்பம், நேர்த்தி; அவ்வை- அம்மை; மதலை- குழந்தை.

எல்லையில்லாமல் வளர்ந்து பெருகுகின்ற ஜோதிவடிவத்தோடு கூடியவளாக, துவக்கமில்லாத ஆதிமூல பராசக்தியாக, மோக்ஷத்தை அளிக்கும் அமுதமாக, பூபுரத்திற்குள்ளே, பதினாறு இதழ்களுள்ள பதுமத்தின் நடுவேயுள்ள இரண்டு எண்டள தாமரைகளுக்கு நடுவே சக்திகோணமாகத் திகழ்கின்ற யோனிசக்கரத்தின் நடுவிலுள்ள பிந்துவில் விளங்கிக்கொண்டு குறைவில்லாமல் சகலபொருட்களிலும் வியாபித்து, பெருமையோடு அசைவதும், அசையாததுமான அனைத்தையும் செம்மையாகப் பரிபாலனம் செய்கின்ற அன்னையான உனது அருட்திறன் மிக அபாரமே. உலகவாழ்க்கைத் துக்கங்களால் வாடி உனை நாடிவரும் உனது குழந்தையான எனது துயரங்கள் அகலுமாறு வகையறிந்து அருள் புரிகின்ற ஜனனியே. வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே..

 

7.கொத்தரத்தமலர் சூடுவார்குழலி
   தத்தையேந்திடுத யாபரி
  முத்தமாதங்க புத்திரீயமர
   சத்திசாமளைப ராபரி
 
சுத்தநின்மலவி சிட்டஞானமயி
   தத்துவாதீத சின்மயீ
  பத்தியில்லுருகி சித்தமயல்நீக்கி
   நித்தமும்மருளு முத்தமி
 
சித்தமுன்மணிப தித்தநூபுரப
   தத்திலொத்துவழு வாமலே
  நித்தமுன்மனிய வத்தையில்நெகிழ
   சித்துசெய்வதும சாத்யமோ
 
வித்தகர்க்கரசி வேதநாயகிப
   வம்கடத்தவரு தோணியே
 வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

அரத்தமலர்- கதம்பப்பூ; வார்குழலி- நீண்டதலைமுடியுள்ளவள்; தத்தை- கிளிப்பிள்ளை; முத்த- முத்திநிலையடைந்த; விசிட்ட ஞானம் – விசேஷ ஞானம். (மாயா, அவித்யா அதிஷ்டிதமான அத்யாஸங்கள் நீங்கப்பெற்று சுத்தமான துரீயாதீத அவஸ்த்தையில் எழுகின்ற அகண்டாகார ஞானம்.); சித்தமயல்- மனச்சஞ்சலம்; நூபுரம்- சிலம்பு; உன்மனி அவத்தை- தீவிரமான பக்தியோக சமாதிநிலையில் தியானிப்பவன், தியானிக்கப்படும் தேவதை, தியானம் என்ற த்ரிபுடிநிலை அழிந்து ஞானாம்ருதம் பருகுகின்ற நிலை; நெகிழ- உருக; சித்து- மாயவித்தை; வித்தகர்- ஞானிகள்; பவம்- சம்சாரம்.

கதம்பப்பூக்கொத்தினைச் சூடும் நீண்ட கூந்தலுள்ளவளும், கிளிப்பிள்ளையை ஏந்தும் கரத்தினளும், கருணாமயியானவளும், முத்திநிலைகண்ட மாதங்கமுனிவரின் புதல்வியும், திவ்ய சக்திசொரூபிணியும், பராபரியும், சுத்த துரியாதீதமான விசேஷ ஞானமேயுருவானவளும், தத்துவங்களைக்கடந்த சின்மயியும், பக்தர்களுடைய அன்பில் உருகி அவர்களுடைய மனச்சஞ்சலத்தை நீக்கி நித்தமும் அருள்பாலிக்கின்ற உத்தமியுமான ச்யாமளா தேவியான உனது மணிபதித்த சிலம்புகளணிந்த திருவடிகளில் என்னுடைய மனமானது வழுவாமல் பதிந்து, நித்தமும் உன்மனியவத்தையில் உருகும்படியான ஒரு சித்து செய்வது உனக்கு முடியாத காரியமா? ஞானிகளின் தலைவியே, வேதநாயகியே, சம்சாரக்கடலிலிருந்து மீட்க்கவரும் தோணியாக இருப்பவளே, வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே..

 

8.சம்புமோகினிச நாதனீப்ரணவ
   நாதரஞ்சனிநி ரஞ்சனீ
  சுகிர்தயோகபர தகரவெளியில்வளர்
   அமிர்தசூட்ச்சுமப்ர காசினீ
 
எம்பிராட்டியென தாயிஆரியைசி
   யாமளாம்பிகைம னோன்மனீ
  எழிலவந்திகையின் மொழியில்மகிழுமருள்
   கருணைமழைபொழியு மெழிலி நீ
 
உம்பர்வானகுல மும்பராதீன
   ராம்பசுக்கள்நிகர் மாந்தரும்
  உயிரினங்கள்முழு தும்புரக்குமுன
   தரியகருணைநிக ருற்றதே
 
வம்பிமொய்த்திடுக தம்பமாலையணி
   நம்பினார்க்கெளிய வாமியே
  வேதமோதுசுக மோடுபாங்கொடுகு
   லாவுமாதங்க கோதையே!

சுகிர்த- இன்பம் பயக்கும்; தகரவெளி- இதயகுஹையில் நுண்ணிய வெளியாகவுள்ள, ஆகாச தன்மாத்திரத்திற்கும் மூலகாரணமாகவுள்ள பராகாசம்; அமிர்த- அழிவற்ற; ஆயி- அன்னை; ஆரியை- உத்தமி; மனோன்மனி- விழிகள் செருகி, மூச்சுக்காற்றின் சலனம் நிலைபெற்று மனம் சூனியமாயிருக்கும் மனோன்மனி என்ற யோகமுத்திரையோடு கூடியவள்; அவந்திகை- கிளி; எழிலி- பொலிவுற்றவள்; உம்பர்- தேவர்; பராதீனர்- சுதந்திரமற்றவர்; புரக்கும்- காக்கும், அனுக்ரஹிக்கும்; வம்பி- கருவண்டு; வாமி- தேவி, வாமசமயத்தவள்.

சிவபெருமானின் மனதை மயக்குகிறவளும், அழிவில்லாதவளும், ஓம்கார நாதத்தில் பிரியமுள்ளவளும், மாசற்றவளும், பேரின்பமளிக்கும் யோகசமாதியில் தகராகாசத்தில் அந்தராத்மாவாக விளங்குகின்ற அழிவற்ற சூக்ஷ்ம ப்ரகாசமானவளும், என் தலைவியும் தாயுமானவளும், உத்தமியும், மனோன்மனியும், அழகிய கிளியின் பேச்சுக்களில் மனம் மகிழ்கின்றவளும், அருட்கருணை மழை பொழிகின்றவளும், பொலிவுற்றவளுமான ச்யாமளாம்பிகையான நீ தேவர்களையும், யக்ஷர், கின்னரர் முதலான பிற வான்குலங்களையும், வினையாற்றலால் சுயேச்சையற்ற, விலங்குகளுக்கு நிகரான மனிதகுலத்தையும், மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் காத்து அருள் பாலிக்கின்றனை. உனது அரிய கருணை உவமையற்றதே. கருவண்டு மொய்த்திடும் கதம்ப மாலையை அணிகின்றவளும், உனை நம்பி நாடியவரால் எளிதில் அடையக்கூடியவளுமான தேவியே, வேதமந்திரங்களை விடாது உச்சாரணை செய்துகொண்டிருக்கும் கிளியோடு ஒயிலுடன் அளவளாவிக் கொஞ்சுகின்ற (மாதங்கமுனிவரின் மகளான) ஸ்ரீராஜமாதங்கி தேவியே..

(எழுதியது : உ.இரா.கிரிதரன்.)

3 thoughts on “மாதங்கி அட்டகம்

 1. Great efforts of coining the peoms so brilliantly and presenting in a flawless maner! It definitely seeks a place in ‘Sirappu Ilakkiyam’ in litrarry Tamil.
  Best Regards,
  R.Kasirajen.

 2. அருமையான கவி, ஆழ்ந்த கருத்துகள். தமிழில் மாதங்கியை பற்றி நூல் இல்லாத குறையை தீர்த்து வைத்தீர்கள்.

  மேலும் சியாமளா தாண்டகத்தை தமிழில் பாடினால் அன்னையின் அன்பர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

  அத்துடன் சிறீ வித்தை உபாசனையில் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களை அழிக்க வல்ல மூவரில் வாலை, மாதங்கியை பற்றி அழகாக பாடியுள்ளீர்கள். வாலை, மாதங்கியை அடுத்து மிகவும் சக்தி வாய்ந்த தேவியான வாராகி துதியை எதிர் பார்க்கிறோம்.

  நன்றியுடன்,
  சிவசுதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s